
The Sapphires /2012/Australia/ Dir: Wayne Blair
ஆஸ்திரேலியா, 1968. வியட்நாம் போரின்போது ராணுவ வீரர்களுக்கு இசைவிருந்து படைக்க மெல்போர்னிலிருந்து சென்ற மகளிர் இசைக்குழுவினர் பற்றிய படம். ஆஸ்திரேலிய கிராமத்து தொல்குடிப் பெண்கள் நால்வரின் இசையார்வத்தை நன்கு உணர்ந்த தேவ் எனும் வெள்ளையின ராணுவ வீரன் அவர்களை குரல் தேர்வுக்கு கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான்.
அவர்களில் இளையவளான ஜுலியை விட்டுவிட்டு குரல்தேர்வுககு அவர்கள் மட்டும் நகரத்திற்குச் செல்கிறார்கள். அவள் மிகவும் சின்னப்பெண் என்பதால் உருவான தடையை மீறி ஜுலியும் யாரையோ பிடித்து நகரத்திற்கு வந்து சேர்ந்துவிடுகிறாள். குரல் தேர்வில் அவளும் பங்கேற்க அவள் குரலே சிறந்த குரல் என தெரிவாகிறாள். நால்வருக்கும் சிற்சில கருத்து வேறுபாடுகள் உண்டானாலும் உடனுக்குடன் சரியாகிவிடுகிறார்கள். நால்வரும் இணைந்த ‘தி சபையர்ஸ்’ என்ற இசைக்குழு வியட்நாம் பறக்கிறது. மூத்தவளான கெயில் குழுவுக்கு தலைமையேற்கிறாள். போர்க்களத்துக்கு அருகே ராணுவ வீரர்கள் தங்களை
உற்சாகப்படுத்திக்கொள்ள கொள்ள இசைக்குழு பேருதவியாகத் திகழ்கிறது. இசைக்குழுவியின் கறாரான தலைவி கெயில் மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதிலும் அதே நேரத்தில் அவர்களைப் பாதுகாப்பதிலும் உயர்ந்துநிற்கிறாள். கெயிலை ராணுவ வீரன் தேவ் நேசிப்பது பனிபடர்ந்த இலைகளிலிருந்து சின்னஞ்சிறு மலர்போல வெளியே தெரிய தொடங்குகிறது.
போர் உக்கிரமடைந்துவிட இசைக்குழு பத்திரமாக ஊர் திரும்ப முடிந்ததா? கெயிலும் தேவ்வும் வாழ்வில் இணைய முடிந்ததா? அற்புதமான இசைப்பாடல்கள் ஒருபக்கம். பதற வைக்கும் பல்வேறு சிக்கல்கள் இன்னொரு பக்கம். படம் மேலும் பாய்ந்துசெல்கிறது.
பால்நிலவன், எழுத்தாளர்;ஊடகவியலாளர்.