‘வெளிச்சம்’ தொலைக்காட்சி அவசியம், ஏன்?

குட்டி ரேவதி
குட்டி ரேவதி
குட்டி ரேவதி
பெரும்பான்மையான ஊடகங்களின் கருத்துகளை, விவாதங்களை, நிலைப்பாடுகளைக் கவனித்தோமானால் அவை ஆதிக்கசாதிச் சிந்தனையின் பக்கம் சாய்ந்ததாகவே இருக்கும். போலீஸ் ஸ்டேஷனின் சாயலில்.

அழகு, கோலம், சமையல், புடவை, பெண்ணுரிமைச் சிந்தனைகள் எல்லாமே இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நிலைபெற்ற பார்ப்பனீய அடையாளங்களை இன்றும் பின்தொடர்வதே தவிர கறுப்பு, கல்வி, உழைப்பு, கூட்டுப்பொருளாதாரம், உடலரசியல், பொதுசமூகப் பணி ஆகியவற்றை அங்கீகரித்த சிந்தனை இல்லை.

இந்நிலையில், தொடரும் சாதிய வன்முறைகளை ஆவணப்படுத்தவும், ஒடுக்கப்பட்டோரின் கருத்தியல் நிலைப்பாடுகளை முன்வைத்து சமூகநீதி பேசவும், சாதி மறுப்பு சார்ந்த அனைத்து வகைக் கருத்தியல்களையும் ஒருங்கிணைத்து விவாதமாக்கவும் ஓர் ஊடகம் அவசியப்படுவது காலத்தின் கட்டாயம் கூட.

தற்கால களப்பணிமுறைகளையும் உரையாடல் முறைகளையும் நாம் கண்டடையவேண்டும். ஊடகம் என்பது அதிகாரம் உள்ளவர்களை முன்னிறுத்த அன்று. விடுதலை அரசியலை, புதிய அழகியலாய் புகழ் ஓங்கச் செய்வதே ஊடகம்.

ஆவணம் தான் ஆயுதம். முக்கியமான சாட்சி. சாதிய வன்கொடுமைகள் ஆவணப்படுத்தப்படாமல் சாட்சியங்கள் எல்லாம் காலத்தின் வேகத்தில், பொதுச்சமூக மறதியால் அழித்து அழித்துக் கழுவப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக நினைவிலிருந்து நீக்கப்படுகின்றன. வன்கொடுமை வடிவங்கள் மட்டும், மாறவே இல்லை.

ஒரு காலத்தில், ‘குறிப்பிட்ட ஒரு சாதிக்கும் இன்னொரு குறிப்பிட்ட சாதிக்கும் இடையே வன்முறை’ என்று பத்திரிகைகள் எழுதியது போய், இன்று சாதிய மாய்மாலங்கள் எல்லாம் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதும், வன்முறையை ஏவும் சாதிகள் அம்பலமாவதும் நல்ல திசை நோக்கியதே.

வெவ்வேறு இதழ்களில் பணிபுரியும் சாதிமறுப்பு பத்திரிகையாளர்கள், தங்கள் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றமுடியாது போன அனுபவங்களை, தாங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிய சம்பவங்களை, பலமுறை மறைமுகமாகப் பகிர்ந்துள்ளனர்.

அம்பேத்கரின் 125 – ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்வைக்கும் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி, ஒட்டுமொத்த சாதிய அரசியலையும் வெளிப்படையான உரையாடலாக்கி, ஒடுக்கப்பட்டோரின் களப்பணிகளை அடையாளம் காட்டும் திரையாக இருக்கும் என்று நம்புவோம்.

‘வெளிச்சம்’, சாதிய இருளை நீக்கட்டும். மரபார்ந்த ஊடக அணுகுமுறைகளை எல்லாம் வென்று சமூக ஒருமையில் களம் காண வாழ்த்துகள். ‘வெளிச்சத்தால்’ ஆகும் பணி வேறு எதனாலும் ஆகாது.

குட்டி ரேவதி, எழுத்தாளர்; திரைப்பாடலாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.