அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு அவலங்களை பட்டியலிடுகிறார் அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ்

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்


ஜெயா அதீதத் தன்னம்பிக்கையுடன் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். எதிர்க் கூட்டணிகளின் முக்கிய ஆயுதமான ‘பூரண மதுவிலக்கு’ என்பதையும் ‘படிப்படியான மதுவிலக்கு’ என்பதன் மூலம் கலகலக்க வைத்துவிட்டார் (உண்மையில் அதுதான் நடைமுறைச் சாத்தியம். இதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்). அது இருக்கட்டும். மக்களின் மறதி ஆள்பவர்களுக்கும், ஆண்டவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். பழைய வரலாறுகள் இருக்கட்டும். இந்த ஐந்தாண்டு ஆட்சியில் நடந்துள்ள சிலவற்றை நாம் நினைவுபடுத்துவது அவசியம்.

பதவி ஏறியவுடன் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாது எனச் சொல்லி, நடவடிக்கை எடுத்துக் கடும் மக்கள் எதிர்ப்புக்கு உள்ளாகித் தோல்வி அடைந்தது.

 1. அண்ணா நூலகத்தை மூட முயற்சித்தது.
 2. சட்டமன்றத்துக்கென கட்டிய கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது.
 3. பரமக்குடியில் தேவையற்ற ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தி 6 அடித்தள மக்களைக் கொன்றதோடு முழுக்க முழுக்க சட்ட மன்றத்தில் அதை ஆதரித்துத் தலித் மக்களுக்கு எதிராகப் பேசியது. காவல்துறையினருக்கு விலை மலிவு கான்டீன் உட்பட பல சலுகைகளை அறிவித்து ஊக்குவித்தது. ஒரு ஜால்ரா கமிஷனை நியமித்து துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டது.
 4. திருக்கோவிலூரில் 5 இருளர் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதில் இன்று வரை அதற்குக் காரணமான போலீஸ்காரர்களைக் கைது செய்யாதது.
 5. 5 வடநாட்டுத் தொழிலாளைகளை போலி என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது, வட மாநிலத் தொழிலாளிகளின் மீது மக்கள் வன்முறையை மேற்கொள்ளும் வகையில் பிரச்சாரங்களுக்குத் துணை போனது.
 6. அண்ணா பிறந்த நாட்களில் கைதிகளை விடுதலை செவது போன்ற மனித நேய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. முஸ்லிம் கைதிகளின் விடுதலையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது.
 7. தருமபுரி கலவரத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 500 க்கும் மேல், அவர்கள் அனைவரையும் கைது செவோம் எனக் காவல்துறை அறிவித்தும் 150 பேர் கைது செய்யப்பட்டவுடன் மேலும் யாரையும் கைது செய்யாதது.
 8. உசிலம்பட்டி, உடுமலைப்பேட்டை முதலான பகுதிகளில் நடை பெற்று பெரும் கண்டனத்துக்குள்ளாகிய சாதித் திமிர்க் கொலைகளில் அவற்றை வெறும் குற்றச் செயல் என்கிற வகையில் அணுகி நடவடிக்கையோடு நிறுத்திக் கொண்டது. இதை வன்மையாகக் கண்டிக்காமலும், இப்படிக் கடந்த ஐந்தாண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது குறித்து ஆய்வு செய்து அவற்றைத் தடுக்க எந்த விதமான முயற்சிகளும் மேற்கொள்ளாதது.
 9. ஜெயா சிறைக்குச் சென்றதை ஒட்டி அவர் மீண்டும் பதவியில் அமரும் வரை இங்கு அரசு ஒன்று செயல்படாதிருந்தது. இக்காலகட்டத்தில் நடந்த பல்வேறு விதமான அபத்தக் கூத்துகள்.
 10. பெருமழை வெள்ளத்திற்கு அதிமுக அரசே காரணம் எனச் சொல்ல இயலாவிடாலும் அதை எதிர்கொண்டு நிவாரணப் பணிகளில் விட்ட பிழைகள்
 11. அதிமுக அமைச்சர்களின் கொடுமையான லஞ்ச ஊழல் நடவடிக்கைகளின் விளைவாக அரசு அதிகாரிகள் தற்கொலை செய்ய நேர்ந்தது.
 12. 20 தமிழ்த் தொழிலாளிகள் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டு திருப்பதிக் காடுகளில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதோடு, சுமார் 700 தமிழர்கள் ஆந்திரச் சிறைகளில் எவ்வித உதவியும் இன்றி, வெளியில் வரும் வாய்ப்பும் இன்றி வதியும் சூழலில் அதிமுக அரசு காட்டிய பாராமுகம் மன்னிக்க இயலாத ஒன்று.
 13. இது குறித்து வன்மையான கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை, இவர்களின் பிரச்சினைகள் என்ன, இத்தனை ஆபத்துக்களையும் எதிர்கொண்டு இம்மக்கள் தொடர்ந்து இந்த ஆபத்தான தொழிலுக்கு செல்ல நேர்வதன் காரணம் என்ன என்பது குறித்து எந்த ஆய்வும் இல்லை. கொல்லப்பட்ட தொழிலாளரின் உறவினர்க்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது என்கிற பிரச்சாரம் வெறும் கண்துடைப்பு.
 14. ஆந்திரத் தோழர்கள் முயற்சியில் 200க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டபோது அவர்கள் மத்தியில் தம் வழக்குரைஞர்களை அனுப்பி புகைப்படம் எடுத்து வெளியிட்டு விளம்பரம் செய்த ஃப்ராடுத்தனம்..
 15. தனியார் இயற்கை மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவியர் “தற்கொலை” என்பது ஒரு tip of the iceberg. இந்த நிறுவனங்களில் நடைபெறும் கொள்ளை, அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டறிய அரசு ஒரு ஆணையம் அமைத்து விசாரித்டிருக்க வேண்டும். இனி இத்தகைய அநீதிகள் நடைபெறாத வண்ணம் தடுத்து நிறுத்த, நிரந்தரத் தீர்வுக்கான முயற்சிகளைத் தொடங்கி இருக்க வேண்டும். மக்களின் மறதியை மட்டுமே மூலதனமாக்கி அதைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்தது ஜெயா அரசு.
 16. மௌலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடம் கட்டடப் பணிகளூடே இடிந்து விழுந்து தொழிலாளிகள் மாண்ட விவகாரத்திலும் இதன் பின்னணியில் உள்ள ஊழல்கள், சட்ட விரோதச் செர்யல்கள், விதி மீறல்கள் ஆகியவற்ற ஆராய்ந்து நிரந்தரத் தீர்வை எற்படுத்த முயற்சியின்மை. முயற்சியின்மை என்பதைக் காட்டிலும் விருப்பம் இன்மை.
 17. கூவம் முதலான ஆற்றங்கரைகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி தொலை தூரத்திற்குக் கொண்டு சென்று குப்பைகளைப் போலக் கொட்டுவது என்கிற நிலையில் எந்த மாற்றமும் இன்றித் தொடரும் கொடுமை. வெள்ளப் பிரச்சினையையும் அவ்வாறே இப்படி அடித்தல மக்களை அப்புறப்படுத்தப் பயன்படுத்தச் செய்த முயற்சி.

அ. மார்க்ஸ், மனித உரிமை செயல்பாட்டாளர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.