ஜெயலலிதாவின் படிப்படியான மதுவிலக்கும் கருணாநிதியின் பூரண மதுவிலக்கும்

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

“மதுவிலக்கு படிப்படியாக அமலுக்கு வரும்” என்று ஜெயலலிதா தனது தொடக்க பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். தனது கடைசி அஸ்திரமாக, பூரண மதுவிலக்கைக் கூட அவர் அறிவிக்கக் கூடும் என்று நான் நினைத்திருந்தேன். அதே சமயம் மதுவிலக்கு பற்றி பேசும் தகுதி கருணாநிதிக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அது ஓரளவு உண்மையும் கூட. ஜெயலலிதாவின் அறிவிப்பு நாடகம் தான். அவரது புள்ளி விவரத்தில், விற்கும் மது புட்டிகளின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறது, அதனால் குடிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறது என்கிறார். அவரது பெரிய மேடைக்குக் கீழே, சிறிய மேடையில் கொலு பொம்மைகளைப் போல அமர்ந்திருக்கும் அவரது வேட்பாளர்கள் போல் அல்ல மக்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.

மது புட்டிகளின் விற்பனைக் குறைவிற்கு காரணம், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது அல்ல, போலி மது சந்தையில் கலந்ததும், கடைகளிலேயே கலப்படம் செய்யப்பட்டு மது விற்கப்படுவதும் தான். பல டாஸ்மாக் கடைகளில், கூலிக்கு ஆள் வைத்து தண்ணீர் கலப்படம் செய்யப்படுகிறது. ‘கட்டிங்’காக விற்கப்படும் மதுவில் இந்தக் கலப்படம் இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது. இது அப்பட்டமான சுரண்டல். ஒரு புறம் விஷத்துக்கு ஒப்பான மது. மறுபுறம் அதிலும் கலப்படம் செய்யப்பட்டு குடிப்பவர்களை சக்திக்கு மீறி செலவழிக்க வைக்கும் அயோக்கியத்தனம்.

அரசின் சந்தைக்கு நிகராக போலி சந்தை ஒன்று இயங்குகிறது என்றும், அவை புழக்கத்தில் விடும் மது வகைகள், சட்டத்துக்கு புறம்பான வகையில் கடைகளில் விற்கப்படுகின்றன என்றும், அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்றும், அதையொட்டி சோதனைகள் நடத்தப்பட்டன எனவும் பரவலாக பேசப்பட்டன. இந்த வெளிப்படைதன்மையற்ற அரசில் அந்த செய்திகள் மக்களின் பார்வைக்கே வராமல் போய்விட்டது. இந்த சீரழிவைக் கூட ஜெயலலிதா தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார். மதுப்புட்டிகளின் எண்ணிக்கைக் குறைந்ததால் குடிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறது என்று கூசாமல் புளுகுகிறார். விற்பனையைக் கூட்டச் சொல்லி அதிகாரிகள் தரும் அழுத்தத்தால், கடைப் பணியாளர்கள் தற்கொலையை நோக்கி உந்தப்படும் எதார்த்தத்தில் ஜெயலலிதாவின் புள்ளிவிவரங்கள் எவ்வளவு ஆபாசமானவை என்று பாருங்கள்.

இவற்றையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில், “எனக்கு பூரண மதுவிலக்கில் உடன்பாடில்லை” என்பதை நான் அழுத்தமாகப் பதிவு செய்யவே விரும்புகிறேன். பூரண மதுவிலக்கு என்பது மக்களின் மீது அரசு செலுத்தும் வன்முறை. திமுகவின் ‘முழு மதுவிலக்கு’ வாக்குறுதி என்பது முழுக்க முழுக்க வாக்குகளைத் திருடும் முயற்சி மட்டுமே. மக்கள் நலன் என்ற ஒன்று அதில் கிடையாது. தரம் குறைந்த மதுவை டாஸ்மாக்குக்கு சப்ளை செய்யும் கம்பெனிகளில் திமுக தொடர்புடைய கம்பெனிகளே அவ்வளவு இருக்கின்றன. இதைப்பற்றி ரகசியமாகக் கூட மூச்சு விடாத கருணாநிதி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு என்று சொல்வது நகைப்புக்குரியது. இப்போதைய தேவை என்ன என்பதை எந்த கட்சியும் கவனப்படுத்தவில்லை என்பதைத்தான் அவர்களது தேர்தல் வாக்குறுதிகள் காட்டுகின்றன. இதற்கு களத்தில் நிற்கும் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.

மதுக்கடைகளை அரசே நடத்துவது என்பது தமிழகத்தில் முழுக்கவும் தோல்வியடைந்திருக்கிறது. அரசு எந்திரத்தின் ஊழல் பெருகவும், மது அருந்துபவர்களின் ஆரோக்கியக் கேட்டிற்கும் , சமூக அமைதியின்மைக்கும் இது மிகப்பெரிய காரணமாகியிருக்கிறது. எல்லா ஊரிலும் மது அடிமைகள் நிறைந்திருக்கிறார்கள். குடிப்பவர்கள் பல்கிப் பெருகியிருக்கிறார்கள். அதனால் உடனடி பூரண மதுவிலக்கு என்பது எல்லா மட்டத்திலும் ஆபத்தான பின் விளைவுகளையே தரும். எளிய அப்பாவி மக்கள் குற்றவாளிகளாக்கப்படுவதற்கு அது காரணமாக அமையும்.

உடனடியாக அரசு செய்ய வேண்டியது, மதுக்கடைகளை முன்பிருந்தது போல, தனியாருக்கு விடுவதுதான். இதன் மூலம் சில தனிப்பட்ட மது உற்பத்தி ஆலைகளின் ஏகபோகத்தைக் குறைக்க முடியும். சந்தையில் தரமான மது கிடைப்பதை உறுதி செய்ய முடியும். ஒரு பாட்டிலுக்கு அதன் அளவைப் பொருத்து ஐந்து ரூபாய் முதல், ஐம்பது ருபாய் வரை விலையைக் கூட்டி விற்று அதை கடை விற்பனையாளர்கள் முதல், போலீஸ், கட்சிக்காரர்கள் என எல்லோரும் பகிர்ந்து பொறுக்கித் தின்னும் நிலைக்கு முடிவு கட்ட முடியும். இந்த ஆராம்ப கட்ட நடவடிக்கைகள் தான் படிப்படியாக பூரண மதுவிலக்கை நோக்கி நகரும் நிலையை சாத்தியப்படுத்தும்.

டாஸ்மாக்கில் இப்போது நடப்பது வன்முறையின் உச்சம். எல்லா பயனாளிகளையும் போல பணம் செலவழித்து குடிப்பவனும் ஒரு பயனாளிதான். குடிப்பவர்கள் மீதான சமூக விலக்கம் என்பது, அதில் ஊழல் செய்யும் பொறுக்கிகள் ஒளிந்து கொள்ளக் காரணமாக இருக்கமுடியாது. ஆனால் பத்திரிகைகள், குடிப்பவர்களைக் கிண்டலடிப்பதன் மூலம் அரசையும், ஊழல்வாதிகளையும் காப்பாற்றும் வேலையைச் செய்கின்றன. அதன் மூலம் தமிழகத்தில் நிலவும் மதுக்கொலைகளுக்கு மறைமுக உடந்தையாகவும் இருக்கின்றன.

மதுக்கொள்ளையை எதிர்த்துப் பேசுவது என்பது மது குடிப்பதை ஆதரிப்பதாகாது. இரண்டும் வேறு வேறு தளத்தில் விவாதிக்க வேண்டியவை. இந்த தயக்கத்தின் பின்னுள்ள ஊசலாட்டத்தில் தான் ஜெயலலிதா தனது பொறுப்பற்ற முகத்தை மறைத்துக் கொள்கிறார். கருணாநிதி பூரண மதுவிலக்கு என்று பசப்புகிறார். ஒரு தலைமுறைச் சமூகமே நலிவுற்று சாகிறது.

ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்.

வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.