
கோடை காலம் தான் குழந்தைகளுக்குள் பல்வேறான புரிதல்களை உருவாக்குகிறது. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சில நாட்கள் விடுமுறை தான் பெரும் ஆறுதல். புதிய விளையாட்டுக்கள் புதிய நண்பர்களென முந்தைய தலைமுறை அனுபவித்த சந்தோசங்கள் எதுவும் கிடைக்காத போதும் சின்ன சின்ன பயணங்கள் கடல் பார்த்தலென கொஞ்சம் இலகுவாக முடிவது இந்நாட்களில் தான். கோடை காலங்களை குறிவைத்து ஹாலிவுட் பாலிவுட் கோலிவுட் படங்கள் படையெடுப்பது வழக்கம். ( கடந்த வருடம் வந்த காஞ்சானாவெல்லாம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ) குழந்தைகளுக்கான படங்கள் என்பதன் அடிப்படை அறம் அவர்களை குதூகலப்படுத்துவது மட்டுமல்ல வாழ்வின் பொதுவான அறங்களைக் கற்றுக் கொடுப்பதும் தான். வீட்டில் நல்ல கதை சொல்லிகள் கிடைக்கப் பெறாத தலைமுறை இது. ஆக இது மாதிரியான படங்கள் தான் குறைந்தபட்சமாக அவர்களுக்கு வாழ்விற்கான நீதியை சொல்லும் வழி. பெரும்பாலான வீடியோ கேம்ஸ்கள் வன்முறையை பிரதானமாக் கொண்டிருப்பதால் மிகச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குள் வன்முறை உணர்வு மிகுந்து விடுகிறது. உறவுகளுக்குக் கொடுக்க வேண்டிய பரஸ்பர மரியாதைகளை அவர்கள் மறந்து கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நல்லது விஷயத்திற்கு வரலாம், ஐமேக்ஸில் நேற்று காலை ஜங்கிள் புக் பார்க்க சென்றிருந்தோம். அரங்கிற்கு வெளியே நின்ற க்யூவில் வெவ்வேறு மாநிலங்களை நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களும் குழந்தைகளும். ஒரு ஆங்கிலத் தம்பதியனரின் குழந்தை இங்கும் அங்குமாக சந்தோசமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளின் அம்மாவின் கைகளில் மொத்த படம் முடியும் வரைக்கும் தேவையான ஸ்நாக்ஸ். குழந்தையின் அப்பா அதிக உயரமில்லை ஆனால் நல்ல கனம். ஓடி விளையாண்ட குழந்தையை இழுத்துப் பிடித்து வரிசையாக முதுகில் அடி. அத்தனை பெரிய கூட்டத்தில் அடிவாங்கியதில் அந்தக் குழந்தை முகம் ஒருமாதிரி ஆகிவிட்டது. அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
தியேட்டருக்குள் சென்ற பின்னும் முடிவதாக இல்லை. இந்தமுறை ஒரு மலையாள தம்பதி. படம் துவங்குவதற்கு முன்னால் பாத்ரூம் போகவேண்டுமெனக் கேட்ட குழந்தையை அடித்து துன்புறுத்தி பின் வேண்டா வெறுப்பாக இழுத்துக் கொண்டு போகிறார்.
இடைவேளையில் பார்க்க முடிந்தது உச்சம். நான்கு பெரியவர்கள் இரண்டு குழந்தைகள். ஒரே இடத்தில் உட்கார முடியாமல் விளையாடிக் கொண்டிருந்தவர்களின் மீது வசையக் கொட்டுவதோடு அடிக்கவும் செய்கிறார்கள்.
மூன்று சம்பவங்களிலும் பார்க்க முடிந்த குழந்தைகளுக்கு அதிகபட்சம் எட்டு வயது கூட இருக்காது. மிக சிறுவயதிலேயே கடுமையாக தண்டிக்கப்படும் குழந்தைகள் மனரீதியாக எல்லோரிடமிருந்தும் தனிமைப்படுகிறார்கள். சதாவும் அவர்களுக்குள் ஒரு தாழ்மையுண்ர்ச்சி இருந்தபடியே இருக்கும். அந்த வயதில் குழந்தைகள் ஆக்டிவாக இருப்பதுதான் இயல்பு.
நான்கு வயதிற்குள்ளாக நான் நிறைய சேட்டை செய்கிறேன் என்பதற்காக என்னை ஆதரவற்றோர்களுக்கான விடுதியில் வலுக்கட்டாயமாக போய்விட்டு விட்டு வந்துவிட்டார்கள். ஐந்து வருடங்கள் அந்த விடுதியில். அதுவும் எந்த வயதில் பெற்றோர்களின் அரவணைப்பு தேவையோ அந்த வயது. எல்லையற்ற தாழ்மையுண்ர்ச்சி வந்ததோடு அங்கிருந்த வயதில் மூத்த இளைஞர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதில் சுற்றி இருக்கின்ற எல்லோர் மீதும் கடும் வெறுப்பு வந்துவிட்டது.
உடல்நிலை சரியில்லாமல் போய் மூன்று மாதங்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். அந்த வயதிலிருந்த சந்தோசம் அவ்வளவும் மறந்து போனது. ஆனால் துயரை இன்றுவரை கடந்து செல்ல முடியவில்லை. குழந்தைகள் பெற்று வளர்ப்பதென்பது விளையாட்டுக் காரியமல்ல. கூடுதலான பொறுப்புகளும் கவனமும் வேண்டும். குழந்தைகளை பொதுவெளியில் வைத்து திட்டுவது என்பதெல்லாம் மன்னிக்கவே முடியாத குற்றம். அதிலும் பத்து வயதிற்கு குறைவான குழந்தைகளின் மீது வன்முறை செலுத்துபவர்களை எல்லாம் மனிதர்களாகக் கூட நான் மதிப்பதில்லை. வன்முறையால் குழந்தைகளைத் தனிமைப்படுத்துகிற பெற்றோர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
லக்ஷ்மி சரவணகுமார்; எழுத்தாளர். மயான காண்டம் இவருடைய விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு.