“கம்யூனிஸ்டுகளை சினிமாவுக்குள் வளரவிடக்கூடாது”: சொன்னவர் ஒரு மூத்த ‘திராவிட’ நடிகர்!

வாசுதேவன்

ஜெயகாந்தனுக்கும் திரைப்படத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ்த் திரைப்படத்துறை வணிக கரங்களில் சிக்குண்டதால், ஜெயகாந்தன் போன்ற கலைஞர்களால் தாக்குபிடிக்கமுடியவில்லை. வங்காளத்திலும், கேரளத்திலும் இன்றும் சீரியஸ் திரைப்படங்கள் வருகிறது. அங்கே இதற்கு வளமான மரபு உண்டு. தமிழ்நாட்டிலும் இதற்காக 1950 களிலே ஜெயகாந்தன் மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்களால் போட்ட அஸ்திவாரம், அப்போதே ஆபத்தை உணர்ந்த பெரும் வணிக முதலாளிகளால் அடித்து நொறுக்கப்பட்டது. இதைப்பற்றி அறந்தை நாராயணன் ‘தமிழ் சினிமாவின் கதை என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

1959ம் வருடம், ப.ஜீவானந்தம் காமிராவை முடுக்கி படப்பிடிப்பை துவக்கிவைத்தார். அடுத்த தளத்தில் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் சொன்னது “கம்யூனிஸ்டுகள் சினிமாவுக்குள் வந்துவிட்டார்கள். இவர்களை இந்த துறையில் வளரவிடக்கூடாது”.
படம்:– பாதை தெரியுது பார். நடித்தவர்கள். –விஜயன், சகஸ்ரநாம். இசை:– எம்.பி.ஸ்ரீனிவாஸ் இயக்கம்: –நிமாய் கோஷ் கதை வசனம்,பாடல்கள்:– கண்ணன் / ஜெயகாந்தன்./கே.சி.அருணாச்சலம். தயாரிப்பு:– குமரி பிலிம்ஸ்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், மாணவர்கள், மற்றும் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர்களீன் கூட்டுறவால் உருவானது குமரி பிலிம்ஸ். ரூபாய் 500 முதல் 5000 வரை பங்கு செலுத்திய பாகஸ்தர்களின் அமைப்பாக குமரி பிலிம்ஸ் உருவானது. ரூ 5000 க்கு மேல் வாங்கமாட்டோம் என பகிங்கரமாக அறிவித்து, அதிகம் தர வந்தவர்களை மறுத்து கம்பெனியை உருவாக்கினார்கள். லாப நோக்கம் அறவே இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணமே காரணம். இந்தப்படம் தமிழ் மக்களின் ரசனையில் ஒரு பலத்த மாறுதலை கொண்டுவரப்போகிறது என்பதை மோப்பம் பிடித்த தமிழ் வியாபார முதலாளிகள், படத்தின் விநியோக உரிமையை வாங்கி, நகரத்தின் ஒதுக்குப்புறமான தியெட்டர்களில் வெளியிட்டு யாரும் பார்க்கவிடாமல் தோல்வி அடையச் செய்தனர். குறிப்பாக சென்னை விநியோக உரிமையை வாங்கிய ஏ.வி. மெய்யப்ப செட்டியார், சென்னை ஒதுக்குப்புறத்தில் இருந்த முருகன் தியேட்டரில் அனாதையாக எந்த அறிவிப்பும் இல்லாமல் வெளீயிட்டு எவரையும் பார்க்கவிடாமல் தோல்வி அடையச்செய்தார். தொழிலாளி வர்க்கம் தனது கலைப்படைப்பை உருவாக்கினால் மட்டும் போதாது, அதனை மக்களீடம் கொண்டு செல்கிற விநியோகத் திறமையும் தேவை என்பதை இந்தப்படம் உணர்த்தியது. இந்தப்படத்தின் ஃபிலிம் சுருள் இதுவரையில் கிட்டவில்லை. எவ்வளவோ பேர் பல வழிகளில் முயற்சித்தும் எவர் கைகளிலும் கிடைக்கவில்லை.

1964ல் ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் வெளீயாகுகிறது. கதை. திரைக்கதை,வசனம்,இயக்கம்—ஜெயகாந்தன்.சேவா ஸ்டேஜ் நாடக்குழுவினர் பிரதான நடிகர்கள். 21 நாளில் படப்பிடிப்பு முடிகிறது. இசை: வீணைவித்துவான் சிட்டி பாபு. சென்னை சேரி மக்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டியது உன்னைப்போல் ஒருவன். இந்தப்படத்தை பார்த்த காமராசர் ‘இத்தகைய படங்கள் அவசியம் வரவேண்டும். நமது பல கஷ்டங்களுக்கும் காரணம் நமது ரசனை கெட்டு போனதுதான்” என்றார். பரவலாக கவனம் பெற்ற படம்.

1966ல் ஜெயகாந்தன் கதை, வசனம், இயக்கத்தோடு ‘யாருக்காக அழுதான்’ என்ற படம் வெளிவந்தது. நாகேஷ்,பாலையா, கே.ஆர் விஜயா நடித்துள்ளார்கள். விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க சில பாடல்கள் சேர்க்கப்பட்டு சமரசம் செய்யவேண்டியதாயிற்று என பின்னாளில் ஜெயகாந்தன் நொந்து கொண்டு சொன்னார். இதற்குப்பிறகு கடந்த காலத்தின் பல கசப்பான அனுபவங்களால், ஜெயகாந்தன் திரைப்படத்துறையில் கவனம் செலுத்தவில்லை. பின்னாளில் அவர் போட்ட பாதையில் வந்தவர் ருத்ரையா. அவரையும் வளரவிடாமல் ஒதுக்கியது தமிழ் திரைப்படத்துறை.

ஜெயகாந்தன் என்ற கலைஞன் அரசியலையும், இலக்கியத்தையும் கலந்த அபூர்வ ரசவாதி. பின்னாளில் அவருடைய சில அரசியல் நிலைப்பாடுகள் விமர்சனத்துக்குரியது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் ஜெயகாந்தன் ஆற்றிய பங்களிப்பு இலக்கியத்தில் மட்டுமல்ல. ஜெயகாந்தன் திரைப்படத்துறைக்கு போட்ட மாற்று சாலையில் சென்றிருந்தால், தமிழ் திரைப்படங்கள் எங்கோ வேறு திசையில் சென்றிருக்கும்!

வாசு தேவன், எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.