#தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களிடம் 1998 செப்டம்பர் மாதத்தில் நான் பதிவுசெய்த நேர்காணலின் ஒரு பகுதி

* தலித் அரசியலுக்குள் நீங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி? இளமைக்கால அனுபவங்கள் இதற்குக் காரணமா?

மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது அம்பேத்கர் இயக்கங்களின் அறிமுகம் கிடைத்தது. சட்டக் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அய்யனார் என்று ஒரு நண்பர் இருந்தார். வீடூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். காலனி வீடுகள் கட்டுவதற்கு நிலத்திற்காக ஆதிக்க சாதியினரோடு ஏற்பட்ட பிரச்சனையால் அவரை ஆதிக்க சாதியினர் விஷம் வைத்துக் கொன்று விட்டார்கள். அந்த சாவுக்குச் சென்றிருந்தேன். அவரது அண்ணன் என்னைத் தனியே அழைத்துச் சென்று “எனக்கு பயமாக இருக்கிறது. என்னையும் கொன்று விடுவார்கள்” என்று அழுதார். அப்போது அதை, ஏதோ பயத்தில் சொல்கிறார் என்று நான் நினைத்துவிட்டேன். ஆனால் மூன்றாவது நாள் அவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டார்களென்ற செய்தி வந்தது. அந்தச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது.

அப்போது அம்பேத்கர் இயக்கம் எதிலும் இணைந்து வேலை செய்ததில்லை. அரசுப் பணிக்காக மதுரைக்குப் போனேன். அம்பேத்கர் நூற்றாண்டு சமயத்தில் DPI ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசினேன். அப்போது மலைச்சாமி அதன் பொறுப்பாளராக இருந்தார். மலைச்சாமி இறந்ததற்குப் பிறகு அந்தத் தோழர்கள் என்னைப் பொறுப்பாளராக அறிவித்துத் தீர்மானம் போட்டார்கள். நான் மதுரைக்குப் போய் எட்டு மாதங்கள் தான் அப்போது ஆகியிருந்தது. இது 1990 ஜனவரியில் நடந்தது. அப்போது பாரதீய தலித் பேந்தர்ஸ் என்ற பெயரில் அமைப்பு செயல்பட்டு வந்தது. மகாராஷ்டிராவில் தொடர்பிலிருந்த அத்வாலேவைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் சரியானபடி எதுவும் கூறவில்லை. அமைப்பை பாரதீய குடியரசு கட்சி என மாற்றும்படி அவர் சொன்னார். எனக்கு அதில் உடன்பாடில்லாததால் அன்று இரவே அமைப்பைக் கூட்டி கொடி, முழக்கம் ஆகியவற்றை முடிவு செய்தோம். இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் ஒரு ஆண்டு செயல்பட்டோம். “இந்திய” என்ற சொல் பலருக்கும் நெருடலாயிருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு நானும் பேசினேன். அப்போது பேசிய சுப. வீரபாண்டியன் “இந்திய” என்று வைத்திருப்பதை விமர்சித்துப் பேசினார். அதன்பிறகு 1992 முதல் விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறோம். மலைச்சாமி இறந்தபோது ஒரு இரங்கல் செய்தியைக்கூட மகாராஷ்டிராவிலிருந்து கட்சி சார்பில் அனுப்பவில்லை.

நான் நேரடியாக அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான். தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது ஒருநாள் எங்கள் ஊரிலுள்ள செல்லியம்மன் கோயிலில் கதவைத் திறந்து மூடி விளையாடிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு சாதி இந்துக்கள் கோபமாகத் திட்டினார்கள். என் அப்பாவும் என்னைக் கண்டித்தார். எங்கள் ஊரில் சேரியைச் சேர்ந்த ஒருத்தரை மோட்டார் திருடினார் என்று பழி சுமத்தி பத்து விரல்களிலும் துணியைப் பந்தம்போல் சுற்றி சாதி இந்துக்கள் நெருப்பு வைத்தார்கள். அது என் மனதை மிகவும் பாதித்தது. 1990க்குப்பிறகு தென் மாவட்டங்களில் நடந்துவரும் சாதிக் கொடுமைகள் தான் தலித் அரசியலின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தின.

ரவிக்குமார், எழுத்தாளர்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.