ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மார்ச் 22 அன்று துணை வேந்தர் அப்பாராவிற்கு எதிராகநடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர்களுடன் சேர்ந்து கைதான பேராசிரியர்கள் கேஒய் ரத்தினம் மற்றும் தத்தகத்தா சென்குப்தா தில்லி வந்துள்ளனர். தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்நடைபெற்று வரும் “உயர்கல்வியில் சாதி’’ என்னும் தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் வந்துள்ளனர். ஹைதராபாத் மத்தியபல் கலைக்கழகத்தில் தாங்கள் கைது செய்யப்பட்ட விதம்தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இடைக்கால துணை வேந்தராக இருந்த, எம்.பெரியசாமி, மாணவர்கள் போராட்டத்தில் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில், கல்வி உதவிப் பணத்தை உயர்த்துவது பாகுபாடு எதிர்ப்பு அலுவலர் என்னும் பதவியை உருவாக்குவது, பல்கலைக் கழகத்தின் அனைத்துக் குழுக்களிலும் தலித்/பழங்குடியினரின் முறையான பிரதிநிதித் துவத்திற்கு உத்தரவாதப் படுத்துவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருந்தார். இப்பரிந்துரைகள் அனைத்தும் மார்ச் 24 அன்று நடைபெறவிருந்த அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்தன. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அப்பா ராவ் திரும்பி வந்தார்.
அவ்வாறு தடுத்தும் நிறுத்திவிட்டார். அவரது முதல் நடவடிக்கையே அகடமிக் கவுன்சில் கூட்டத்தை ஒத்திப்போட்டதுதான். “அப்பா ராவ் வளாகத்திற்குத் திரும்பிவருவதற்கான தார்மீக அடிப்படை என்ன இருக்கிறது? ரோஹித் மரணத்திற்கு இதுவரை அவர் மரியாதை செலுத்த வில்லை. ரோஹித் தற்கொலையில் அவரது பங்களிப்புகுறித்து நடைபெறும் நீதித்துறை விசாரணை இன்னும்நிலுவையில் இருக்கிறது. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அவர் செய்ததெல்லாம் யூ டியூப் வீடியோவில் `வலி’ ஏற்படுத்துவதாகத் தெரிவித்தது மட்டும்தான்.
எங்கள் சார்பாகத் தலையிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது ஆசிரியர்களைக் கைது செய்யாதீர்கள் என்று சொல்லவும் இல்லை. நாங்கள் சிறையிலிருந்த சமயத்தில் வளாகத்தில் மாணவர்களுக்கான உணவை வெட்டினார், தண் ணீரை வெட்டினார், ஏடிஎம் சேவைகளை வெட்டினார். மார்ச் 22 அன்று துணைவேந்தர் தங்கியிருந்த இடத்திற்கு வெளியே மாணவர்கள் “மிகவும் நாகரிகமானமுறையிலும், ஜனநாயக ரீதியாகவும் ஆர்ப்பாட்டம்’’ செய்து கொண்டிருந்தபோது நான் (ரத்தினம்) அங்கே சென்றேன். அப்போது போலீஸ் வந்தது. மாணவர்களைத் தரதர என்று இழுத்துச் சென்றனர். ஆண் போலீஸ்காரர்கள், மாணவிகளையும் இவ்வாறே இழுத்துச்சென்றனர், அவர்களைப்பலமுறை அடித்தனர். “என் மாணவர்களை அடிக்காதே’’ என்று நான் சத்தம்போட்டேன். அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? என் பெயரைக் கேட்டார்கள். திரும்பத் திரும்பக் கேட்டார்கள். பிறகு என்னையும் போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.
போலீஸ் ஸ்டேஷன் செல்வதற்கு வேன் சுமார் 40 நிமிடங்கள் ஆனது. அந்த 40 நிமிடங்களும் போலீசார் மாணவர்களை இரக்கமின்றி அடித்துக்கொண்டே இருந்தனர். ஒரு மாணவனின் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்துவிட்டது. அவர் அதைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு போலீஸ்காரர், அக்கண்ணாடியை எடுத்து அம்மாணவனின் முகத்தில் குத்தினார். வேனில் நடந்த சம்பவங்களை முழுமையாகச் சொல்வது மிகவும் கடினம்.
சென்குப்தாவும் தன் உணர்வுகளை இவ்வாறே வெளிப்படுத்தினார்.“காவல்துறையினரும் இதர படையினரும் என் கவுண்ட்டர் செய்துவிடுவோம், தெலுங்கானா போலீஸ் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்களை மிரட்டினர்.’’கைது செய்யப்பட்ட மாணவர்களையும், ஆசிரியர் களையும் 2-3 காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்றனர். சுமார் 24 மணி நேரம் வரை எவருக்கும் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்றே தெரியாது. எங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளக்கூட அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் செய்த முதல் வேலை, எங்கள் செல்போன்களை பிடுங்கிக் கொண்டதுதான். நாங்கள் அவற்றைத் திரும்பப் பெற்றபோது, அவற்றில் நிகழ்வுகள் நடந்தசமயத்தில் நாங்கள் பதிவு செய்து வைத்திருந்த ஆடியோ மற்றும் வீடியோ நிகழ்வுகள் அனைத்தையும் அழித்திருந்தார்கள். போலீசாரின் அடக்குமுறை எங்களை நசுக்கிவிடும் என்று அப்பாராவ் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அன்றைய தினம் நூற்றுக்கணக்கான ரோஹித்துகள் உருவானார்கள் என்பதை அவர் உணரவில்லை.