கௌதம சன்னா

வைகோ பேசிய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதே நேரத்தில் உடனே அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அந்த மன்னிப்பு கோரலை ஏற்பதும் தண்டிப்பதும் கலைஞர் அவர்களின் பெருந்தன்மையைப் பொருத்தது..
ஆனால் இந்த நேரத்தில் பழைய கதைகளைப் பேசலாமா என்பது திமுகவினர் யோசிக்க வேண்டும். பழைய கதைகளைப் பேசினால் திருவாளர் திமுகவினரின் முற்போக்கான சாதிய நடவடிக்கைகள் அம்பலமாகும் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அருவருக்கத்தக்க வகையில் அவர்கள் மேற்கொள்ளும் தனிமனித தாக்குதல்களை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அன்னை சத்தியவாணிமுத்து அவர்கள் திமுகவை விட்டு வெளியேறி ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தபோது திருவாளர் திமுகவினர் பேசிய பேச்சுகள் நினைவில்லையா..? சத்தியவாணிமுத்து கேட்ட கேள்விக்கு பாவாடை நாடாவை அவிழ்த்துப் பார் தெரியும் என்று சட்டசபையிலேயே பேசியவர்தானே கலைஞர். அது என்ன இலக்கிய பேச்சா திருவாளர் திமுக..?
அவர் பேசிய அந்த பேச்சை மேடை போட்டு பரப்பியவர்களை அந்தகால திமுகவினர் எப்படி பாராட்டினார்கள் என்பது மறந்துப் போய்விட்டதா..? வண்ணை ஸ்டெல்லா, வண்ணை தேவகி, வெற்றிக்கொண்டான், தீப்பொறி ஆறுமுகம். எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி உள்ளிட்ட ஏராளமான தலைமைக் கழக் பேச்சாளர்கள் என்ன இலக்கியத்திற்கு பேர் போனவர்களா.. அப்பட்டமான தனிமனித ஆபாச வசைகளுக்குத்தானே பேர்போனவர்கள். அப்படி பேசினால்தானே கலைஞரின் ஆதரவை அவர்களால் பெற முடிந்தது.
சரி, எச்.வி.ஹண்டே திமுக ஆட்சியை மூன்றாம்தர ஆட்சி என்று விமர்சனம் செய்தபோது,, இல்லை இல்லை இது மூன்றாம்தர ஆட்சியில்லை, நான்காம் தர ஆட்சி, ஆம் சூத்திர ஆட்சி என்று பெருமைப்பட்டுக்கொண்டதும், இது பாப்பாத்தியின் ஆட்சிதான் என்று ஜெயலலிதா பெருமைப் பட்டுக்கொண்டதும் என்ன திருவாளத் திமுக.. நீங்கள் இருவரும் தலித் மக்கள் மீது ஏறி நின்றுக்கொண்டு அப்படி அறிவித்தீர்கள் என்பது தெரியுமா திருவாளர் திமுக..?
சரி இப்போது இருப்பவர்கள் என்ன யோக்கியமா திருவாளர் திமுக.. மாமல்ல புரத்தில் காடுவெட்டி குரு கலைஞர் அவர்களைப் பற்றி நீ மேளம் அடிக்கிற சாதி என்று சாதியை சொல்லி பேசிய போது எங்கே போயிருந்தீர்கள் திருவாளர் திமுக.. இப்போது பொத்துக் கொண்டு வருகிறது..?
சரி, சாதி வெறிபிடித்த மனநோயாளிகள் தலைவர் திருமாவை சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாக மேடைப் போட்டு திட்டிக் கொண்டிருந்தபோதும், 19 முறை சுற்றி வளைத்து தாக்கியபோதும் உங்கள் சாதி எதிர்ப்பு மனசாட்சி எங்கே தூங்க போயிருந்தது திருவாளர் திமுக..?
சரி, தலித் மக்கள் கொல்லப்படும்போதும் அதை அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் மனநிலை எப்படி உங்களுக்கு வாய்த்தது திருவாளர் திமுக. அதுமட்டுமல்ல திமுகவின் ஒட்டுமொத்த கட்சி வரலாற்றிலேயே தர்மபுரி சாதி தாக்குதலுக்கு மட்டும் விசாரணை குழு அமைத்தீர்களே.. அதற்கு முன்பும் பின்பும் எந்த தாக்குதலும் நடக்கவில்லையா திருவாளர் திமுக..?
சரி, இப்படி அடுக்கினால் இணையமே பத்தாது என்பது இருக்கட்டும். அண்மையில் உங்களது மாவட்டச் செயலாளர், பெரியாரின் பெருந்தொண்டர், ஐந்து முதுகலைப் பட்டங்களை பெற்ற பொன்முடி பேசும்போது, கல்யாணத்தில் சாதி பாருங்கள், ஓட்டு போடும்போது சாதி பார்க்காதீர்கள் என்று அருளினாரே அது என்ன கலைஞரின் கருத்தா திருவாளர் திமுக..?
சரி,இந்த கருத்துக்கள் எல்லாம் வைகோவின் பேச்சிற்கு வக்காலத்து அல்ல. ஆனால் சாதி எவ்வளவு நுட்பமானது, அது எவ்வளவு அனுபவம் வாய்ந்தவரையும் சாய்த்துவிடுகிறது என்பதற்கு இது ஒரு சான்று இல்லையா. ஆனால் அப்பட்டமாக தமது சாதிய வன்மத்தை திமுகவினர் விடவில்லை என்பதை நாங்கள் கடந்த தேர்தலில் நேரடியாக அவர்களிடம் அனுபவித்தோமே. அதை இன்னும் நாங்கள் மறக்கவில்லை. ஆயினும் சிறுத்தைகள் அதை குற்றம் சாட்டவில்லை. நீங்கள் தோற்கடித்தால்கூட பெருந்தன்மையோடு மன்னித்தோம்.
ஆனால், கலைஞர் அவர்கள் தமது கட்சியினருக்கு இன்னும் முற்போக்கை, சமத்துவத்தை போதிக்கவில்லை என்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அவர் அமைதியாக இருப்பதால் அது இன்னும் கூடிக்கொண்டிருக்கிறது. சாதியை பயன்படுத்தி எப்போதும் ஆட்சிக் கட்டிலிலில் அமருவது மட்டுமே தமது அரசியல் சாணக்கியத்தனம் என்று பெருமைப்பட்டு வந்த கலைஞர் அவர்களே.. உமது பணியினால் சாதியின் நுட்பமான தாக்குதல் உங்கள் மீது திரும்பியிருப்பதற்கு நீங்களும் காரணம் என்பதை திருவாளர் திமுக ஏற்றுக்கொள்வார்களா…?
எனவே, இறுதியாக திருவாளர் திமுக உமது கடைசி காலத்திலாவது சாதியின் கோர பற்களை வெட்டிவிட முன் வாருங்கள். இல்லையெனில் சாதியின் அவலப் பற்கள் உங்களை தாக்கினால்தான் மட்டும்தான் உரைக்கும் என்றால் இன்னும் பலநூறு பற்கள் தயாராகிக் கொண்டிருக்கும்.
எனவே, வைகோ அவர்களை நீங்கள் மன்னிப்பதும் மறப்பதும் உங்களின் விருப்பம். ஆனால் உங்களின் ஆசான் பெரியாருக்கு துரோகம் செய்து, சாதியின் இழிவிற்கு உரம் போட்ட உங்களை சமூக வரலாற்றின் நிகழ் காலமும் எதிர்காலமும் மன்னிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் திருவாளர் திமுக.
கௌதம சன்னா, எழுத்தாளர்.