ஜி. கார்ல் மார்க்ஸ்

‘தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின்’ வேல்முருகனுக்கு அதிமுக கூட்டணியில் இடம் ஒதுக்காமல் கைவிடப்பட்டதைக் கிண்டலடித்து சமூக ஊடகங்களில் நிறைய பதிவுகள். தமிழ் ஹிந்துவில் கூட அவர் குறித்து செய்தி வந்திருக்கிறது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள். எங்களிடம் கேட்டிருந்தால் நாங்கள் கோரிய வேட்பாளர்கள் எண்ணிக்கையைக் கூட குறைத்திருப்போம். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம், அதைத் தராமல் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள் என்று கண்ணீர் விட்டிருக்கிறார் வேல்முருகன். சரத்குமார் கூட இப்படியான ஒரு மனநிலையில்தான் சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தியாகி பிஜேபியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். பிறகு, ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டு இப்போது திருச்செந்தூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போகிறார்.
வேல்முருகனைப் பற்றி பேசும்போது எதற்காக சரத்குமாரைப் பற்றி பேச வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். காரணம் இருக்கிறது. சரத்குமாரும் சரி வேல்முருகனும் சரி, தாங்கள் சார்ந்திருந்த கட்சியில் தங்களது ‘சுயமரியாதைக்கு பங்கம்’ வந்துவிட்டதாக சொல்லித்தான் அவற்றை விட்டு வெளியேறினார்கள். சோனியா வந்திருந்தபோது, அவரைப் பார்க்கவிடாமல் மாறன்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது என்ற அதிருப்தியில்தான் கட்சியை விட்டு வெளியேறியதாக சரத்குமார் அப்போது சொன்னார்.
கட்சியில் அன்புமணிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. என்னைப்போல் கட்சிக்குப் பாடுபட்டவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கட்சியில் ‘மரியாதை இல்லை’ என்று சொல்லித்தான் வேல்முருகன் பாமக விலிருந்து வெளியேறினார். வேல்முருகன் வெளியேறியபோது, ‘அவர் திமுகவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்’, அதனால் தான் அவருக்கும் பாமக தலைமைக்கும் உரசல் வந்தது என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இந்தக் காரணங்களை எல்லாம் விட்டுவிடுவோம்.
இங்கே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், ‘தங்களது கட்சியில் சுயமரியாதை இல்லை’ என்ற காரணத்தை முன்வைத்து வெளியேறும் இவர்கள் எந்த நம்பிக்கையில் அதிமுகவில் சென்று சேர்கிறார்கள்? ஜெயலலிதாவின் அடிப்படைக் கொள்கையே தனது கட்சியினரின் ‘சுயமரியாதை நீக்கம்’ தானே? பிறகு எது இவர்களை அங்கு கொண்டு சேர்க்கிறது? சேர்வது மட்டுமல்லாமல், தாங்கள் எதற்காக தங்களது கட்சியை விட்டு வெளியேறினார்களோ அதற்கு நேர்மாறாக தங்களது ‘மதிப்பு மிக்க சுயமரியாதையைக்’ கைவிட்டு மிகவும் ஆபாசமாக ‘ஜெயலலிதா துதியில்’ இறங்குகிறார்களே அது எப்படி?
உச்சமாக, அதிமுக தொண்டனே சிரிக்கும் அளவுக்கு கிடைக்கும் தொலைக்காட்சிகளில் எல்லாம் சென்று அமர்ந்து கொண்டு, அம்மா ஆட்சியையும், அதிமுகவின் சாதனைகளையும் பட்டியலிடுகிறார்கள். டிவி கேமராவையும் மைக்கையும் கண்டாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள் கட்சியின் மந்திரிகள். ஆனால் அந்த இடத்தை இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு அரசை முட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்கிறார்கள். நிறைவாக எதுவும் சொன்னால், அம்மாவின் கடைக்கண் பார்வை கிட்டக்கூடும். தவறாக ஏதாவது சொல்லிவிட்டாலும் பாதகம் ஒன்றுமில்லை. ஏனெனில் அதுவொன்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்தில்லை. மாஃபா பாண்டியராஜனையும், சே.கு தமிழரசனையும் இங்கு நாம் சேர்த்தே புரிந்துகொள்ள
வேண்டும்.
ஆனால், மற்ற கட்சியினரெல்லாம் இவர்களுடன் தான் மல்லு கட்ட வேண்டியிருந்தது. இவர்கள் கிட்டத்தட்ட ஃப்ரீலேன்சர்கள் போல செயல்பட்டு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாற்றுக் கட்சியினரை விமர்சித்தார்கள். அரசின் ஊது குழலாக இருந்து அதன் சீரழிவைப் பாதுகாத்தார்கள். அந்த வகையில் இரண்டு விதத்தில் இவர்கள் ஜெயலலிதாவுக்கு மிகவும் பயன்பட்டார்கள். ஒன்று, அடிப்படை அறிவோ, ஆளுமைப் பண்போ இல்லாத பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகளின் அதாவது எம்எல்ஏக்களின் பலவீனங்கள் வெளித்தெரியாமல் கட்சி மறைத்துக் கொள்வதற்கு பயன்பட்டார்கள். போன முறை போட்டியிட்டவர்களில் நூறு பேருக்கு மேல் இந்த முறை இடம் வழங்கப்பட வில்லை. அவர்கள் எப்படி செயப்பட்டார்கள் என்ற தகவல்களும் இல்லை. இரண்டாவது, மெகா ஊழல்களைச் செய்த மந்திரிகள் யாரும் மீடியாவின் முன் வராமல் இருக்கவும், அவர்களும் அம்பலப்படாமல் அதே நேரம் ஜெயலலிதாவும் காப்பாற்றப்படும் தந்திரத்துக்கு பயன்பட்டார்கள்.
ஆக, மக்களின் ஆத்திரமெல்லாம், இந்த கோமாளிகளின் மீதான கிண்டலாக வடிந்து போவதற்கு இவர்களே களமமைத்துக் கொடுத்தார்கள். அந்த வகையில் இவர்கள் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த அடிமைகள். மக்களைப் பொறுத்த வரையில் வெறுக்கப்பட வேண்டிய விரோதிகள். இதை சாத்தியப்படுத்தியத்தில் கணிசமான அளவுக்கு, ஏன் பெரும்பங்கு பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ‘இந்த கட்சியின் பிரதிநிதி’ என்ற பொறுப்போடு வந்து அமரும் ஒருவரிடம் அவர்கள் கிடுக்கிப்பிடி கேள்விகளின் மூலம் வீரத்தைக் காட்டினார்கள். இதைப்போன்ற ‘அரசு ஆதரவு’ போலி பிரதிநிதிகளிடம் கேலியான முகத்தைக் காட்டி அரசின் மீதான விமர்சனங்களை கூர் மழுங்கச் செய்தார்கள். இந்த செயல்படாத அரசின் பலவீனங்கள் மக்களை சென்றடையாமல் பார்த்துக் கொண்டார்கள். இவ்வாறாக, இந்த அரசின் மீதான அதிருப்தி ஒரு அலையாக மாறாமல் பார்த்துக்கொண்டார்கள். அல்லது அப்படி நடந்தது. இதுதான் ஊழல் கறை படிந்த தனது நெருக்கமான மந்திரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு தரும் தைரியத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்கிறது.
ஜெயலலிதாவையே ஏமாற்றி, அவரது மந்திரிகள் நிறைய சொத்து சேர்த்துவிட்டார்கள் என்ற தகவல்களை உலவ விட்டு, அவரைப் புனிதப் பசுவாக்கி நடந்த சீரழிவுகளிலிருந்து அவரை விடுவித்தார்கள் பத்திரிகையாளர்கள். இது தான் இத்தனை ஊழல்களுக்குப் பின்னும் அலட்சியமாக தேர்தலை அணுகும் தைரியத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கியிருக்கிறது. இப்போது கூட – அது பொய்யென்றாலும்- ஜெயலலிதாவின் பார்வைக்கே வராமல் ஊழல் செய்த மந்திரிகளுக்கு, அவரை ஏமாற்றியவர்களுக்கு ஏன் மீண்டும் இடமளித்தார் என்ற விவாதத்தை வளர்த்தெடுப்பதை விடுத்து வேல்முருகனுக்கு ஏன் இடமொதுக்கவில்லை என்று ஒப்பாரியில் கலக்கின்றன ஊடகங்கள்.
இந்த ஊடக வேசைத்தனம் தான், மதுவிலக்கு பற்றி எல்லா அரசியல் கட்சிகளும் பேசும்போது தான் மட்டும் மவுனம் காக்கும் தைரியத்தை ஜெயலலிதாவுக்கு வழங்குகிறது. இதிலும் கூட, விஜயகாந்த் திமுகவுக்கு வராமல் போனதற்கு மதுபான அதிபர்களின் அரசியலும் ஒரு காரணம் என்று எழுதும் பத்திரிகைகள், அதன் பயன் திமுகவுக்குப் போய்விடாமல் அந்த அதிபர்களில் திமுக ஆட்களும் உண்டு என்று ‘நடுநிலையோடு’ எழுதுகின்றன.
இந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா நடத்தியிருப்பது ஒரு நிழல் அரசாங்கம். கொஞ்சமும் வெளிப்படைத் தன்மையற்ற மாஃபியா ஆட்சி இது. அவரது ராஜ்ஜியத்தின் நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. ஒரு அரசின் எல்லா செயல்பாடுகளையும் யூகமாக, வதந்தியாக, நம்பகைத்தன்மையற்ற செய்தியாக மட்டுமே ஊடகங்களால் மக்கள் முன் கொண்டுசெல்ல முடிந்தது. அவர்களால் எதையுமே ஜெயலலிதாவிடமோ அவரது மந்திரிகளிடமோ உறுதி செய்துகொள்ள முடிந்ததில்லை. ஆனால் துயரகரமாக இவையெல்லாம், ஜெயலலிதாவின் ஆளுமையாகவும், திறமையாகவும் தேர்தல் நேரத்தில் மக்கள் முன் வைக்கப்படுகின்றன. எப்போதும் அதிகாரத்திலிருப்பவர்கள் உருவாக்கும் கோமாளித்தனம் என்பது வன்மமானது. அதன் பின்னுள்ளது நகைப்புணர்ச்சி அல்ல. மக்கள் மீதான ஆழ்ந்த அவமதிப்பு.
ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்.
வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்), சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும் எதிர் வெளியீடுகள்.