இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச்செயலாளர் முஹம்மத் யூசுப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நபிகள் நாயகத்துடன் கருணாநிதியை தொடர்புப்படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, வரும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். வரும் வியாழக்கிழமைக்குள் கருணாநிதி, இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், திமுக தலைமை அலுவலகம் மற்றும் கோபாலபுரம் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிடுவோம் எனவும் அவர் எச்சரித்தார்.
சேலத்தில் நடந்த திமுக பொதுகூட்டம் ஒன்றில் அக்கட்சி பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் பேசியதாக பெயர், தேதி இல்லாத பேப்பர் கட்டிங் ஒன்று சுற்றி வருகிறது.
தீப்பொறி ஆறுமுகம் கருணாநிதியை முஹம்மது நபியோடு ஒப்பிட்டுப் பேசி விட்டாராம்! எனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம் கட்சிகள் இதைக் கண்டிப்பதோடு தீப்பொறி ஆறுமுகத்தைக் கட்சியிலிருந்தும் நீக்க வலியுறுத்த வேண்டும் என்று பொங்கி விட்டனர்.
வேடிக்கை என்னவென்றால் தீப்பொறி ஆறுமுகம் அவ்வாறு பேசவே இல்லை! நாகை.நாகராஜன் என்ற பேச்சாளரே பேசியுள்ளார் என்ற விபரம் தெரியாமல் பொங்கி விட்டனர்!! அப்படி என்னதான் பேசினார் என்றாவது தேடினார்களா? அதுவும் இல்லை! குமுதம் ரிப்போர்ட்டர் செய்திதான் அது!
“இந்தத் தேர்தலிலே திமுகழகம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏன் தெரியுமா? நண்பர்களே, சேலத்திலே சொல்லுகிறேன். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதுதான் சிறுபான்மை இனங்களிலேயே மிகப் பெரிய இனமான இஸ்லாமிய இனத்தவர்களின் அத்தனை இயக்கங்களும் ஒட்டுமொத்தமாய் என் தலைவர் கலைஞரை அறிவாலத்தில் பார்த்து “நீதான் இறைவன் அனுப்பிய நபிகள் நாயகத்திற்குப் பிறகு எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்டிபிஐயும், மனிதநேய மக்கள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் சேர்ந்து வந்திருக்கிறது என்றால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கப்போகிறது என்று உறுதுணையாக இருக்கிறது. இந்தச் சிறுபான்மை இனத்தின்மீது சத்தியமிட்டுச் சொல்லுகிறேன்….” என்று பேசியுள்ளார். (இணைப்பில் ஆடியோ க்ளிப்பிங்க்ஸ்).
இதில் முஸ்லிம்கள் பொங்குவதற்கு என்ன இருக்கிறது?
1) இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்குப் பிறகு இறைத்தூதர் வரப்போவதில்லை என்பதை முஸ்லிம்கள் நன்கறிந்துள்ள நிலையில், முஸ்லிமல்லாதவர் அப்படி பேசும்போது முடிந்தால் இதை அவரிடம் தெளிவு படுத்தலாம். கூட்டணியிலுள்ள முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இதனைச் செய்யலாம் என்று சொல்லியிருந்தால் கூட அதில் ஓரளவு நியாயமிருக்கிறது. ஏனெனில், மார்க்கத்தை பிறருக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.
2) முஹம்மது நபி ஸல்…அவர்கள் அகில உலகுக்கும் அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்டிருப்பதாக அல்லாஹ்வே சான்றளித்து விட்டான் என்பதிலிருந்து, ஒவ்வொருவரின் சொல், செயல்களை நபிகளாருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதிலும் தவறில்லை. (கலைஞர் அதற்குத் தகுதி உள்ளவரா என்பது விவாதத்திற்குரிய ஒன்று. அது நமக்குத் தேவையில்லை).
3) அல்லாஹ்வையே ஒப்பிடக்கூடாது அன்றி, நபிகளாரை அல்ல. நபிகளாரை ஒப்பிட்டுப்பார்த்தால்தான் அகிலத்தின் அருட்கொடையாக அல்லாஹ் மேன்மை படுத்திச் சொல்லி இருப்பதன் காரணம் விளங்கும். (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).
என்ன நான் சொல்றது!