‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்

வா. மணிகண்டன்

வா. மணிகண்டன்
வா. மணிகண்டன்
அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை ஐவர் அணி காலி செய்யப்பட்டுவிட்டது. சென்னையை விட்டு விரட்டியடிக்கப்பட்ட செந்தில்பாலாஜி காணாமல் போய்விடுவார். ராஜேந்திர பாலாஜி, ராமஜெயம் போன்ற வாட்ஸ்-அப் புகழ் வேட்பாளர்களுக்கு இடமிருக்காது என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்ற செயல்பாடற்ற ஆட்சியின் அத்தனை கழிசடைத்தனங்களும் எம்.எல்.ஏக்களாலும் மந்திரிகளாலும்தான் செய்யப்பட்டவையே தவிர அம்மா ஒரு அப்பாவி எனவும் அவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளின் அசமஞ்சத்தனத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று கட்டமைக்கப்பட்ட ஊடக அயோக்கியத்தனத்திற்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறீர்கள் என்று கேட்க வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளாக நிலவி வந்த பல பிரச்சினைகளையும் மறக்கடிப்பதற்கு அதிரடி, புரட்சி, தில் என்கிற வார்த்தைகள் தேவைப்படுகின்றன. ‘அம்மான்னா சும்மா இல்லைடா’ போன்ற கிஷோர் கே சுவாமித்தனமான வசனங்களால் மக்களை மழுங்கடிக்கச் செய்து மீண்டுமொரு ஐந்தாண்டுகளை அதே செயல்படாத ஆட்சியாளர்களுக்கு எடுத்துக் கொடுப்பதற்கென அத்தனை விதமான பின்னணி வேலைகளையும் உளவுத்துறையும் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கும் ஊடகவியலாளர்களும் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. முப்பதாயிரம் கோடி ரூபாய் பறிக்கப்பட்டுவிட்டது என்றும் கார்டனின் அதிரடியால் இதுவரை ஆடியவர்கள் அடங்கி ஒடுங்கிவிட்டதாகவெல்லாம் எதற்காக புருடா அடித்தார்கள்? எதற்கெடுத்தாலும் அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தவர்கள் இந்தச் செய்திகள் றெக்கை கட்டிய போது ஏன் அமைதி காத்தார்கள்?
உண்மையில் அப்படியெல்லாம் எந்தவிதமான அதிரடியும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. அம்மாவின் அதிரடி ஆரம்பம், கோபப்பார்வையில் அனல் கக்கினார் என்பதெல்லாம் இவர்களாகவே கட்டமைத்து கசியவிட்ட செய்திகள் அவை. ஒருவேளை முப்பதாயிரம் ரூபாய் பறிக்கப்பட்டிருந்தால் அந்தப் பணம் எல்லாம் நத்தம் விஸ்வநாதன் புளி வியாபாரத்தில் மூட்டை தூக்கியும், பன்னீர் செல்வம் டீ டம்ளர் கழுவியும் சம்பாதித்த பணமா? தமிழர்களின் பணம் அல்லவா? எங்கேயிருந்து வந்தது அந்தப் பணம்? இப்பொழுது என்னவானது என்பதையெல்லாம் துப்புத் துலக்கி ஊடகங்கள் எழுதியிருக்க வேண்டியதில்லையா? ஒருவேளை இந்தச் செய்திகள் தவறானவை என்றால் செய்தியை எழுதியவர்களை ஆட்சியாளர்கள் வழக்காடு மன்றத்திற்கு இழுத்திருக்க வேண்டாமா? இரண்டுமே நடக்கவில்லை என்னும்பட்சத்தில் நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது?
திட்டமிடப்பட்ட நாடகம் இது.
தேர்தல் நேரம் வரைக்கும் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் எப்படி வேண்டுமானால் வசூல் வேட்டை செய்து கொண்டிருக்கலாம். தேர்தல் நெருங்கும் போது மேல்மட்டம் புனிதமானது என்றும் கீழே இருப்பவர்கள் ஆட்டம் போட்டுவிட்டதாகவும் இப்பொழுது எல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் எழுதப்படுகிற ஊடகச் சூழலில் வாழ்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்.
எந்த அதிரடியும் நடக்கவில்லை. யாரையும் பழி தீர்க்கவில்லை. யாரெல்லாம் குற்றம் சாட்டப்பட்டார்களோ அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது. கார்டனால் வறுத்தெடுக்கப்பட்டதாக பிம்பப்படுத்தப்பட்ட ஐவர் அணியில் பழனியப்பனுக்கு மட்டுமே வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதில் இருக்கும் அரசியல் காரணம் வேறு. கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் வன்னியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இதுவரை டம்மியாக்கி வைக்கப்பட்டிருந்த கே.பி.முனுசாமி, அன்பழகன் போன்ற வன்னியர் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு பழனியப்பனை ஓரங்கட்டியிருக்கிறார்களே தவிர இதைத் தண்டனையாகவெல்லாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை.
மிகப்பெரிய வெள்ளப் பிரச்சினையின் போது பீப் பாடலை ஒலிக்கவிட்டு மக்களின் கவனத்தைச் சிதறடித்த அதே யுக்திதான் இங்கேயும். 234 தொகுதிகளிலும் அதிரடி. பலமிக்க வேட்பாளர்களால் அதிமுக தனது பலத்தை நிரூபிக்கப் போகிறது என்றெல்லாம் திரும்பத் திரும்ப எழுதி அதிமுகவை யாராலும் சிதறடிக்கவே முடியாத இரும்புக் கோட்டையாகக் கட்டமைக்கிறார்கள். வெள்ளத்தின் போது அமைச்சர்களின் செயல்பாடுகள் எவ்வளவு திருப்தியாக இருந்தன? டாஸ்மாக் பிரச்சினை குறித்து ஐந்தாண்டுகளாக ஏன் வாயே திறக்கவில்லை? சாதாரண அரசு ஊழியர்கள் நியமனத்திற்கும் கூட லட்சக்கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட விலைகள் என ஊடகங்களும் மக்களும் பேசுவதற்கான பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் ஒன்றிரண்டு தலைப்புச் செய்திகளால் மறைத்துவிட முடியும் என்பது அவமானகரமானது இல்லையா?
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என்ன? அரசால் அறிவிக்கப்பட்ட முதலீட்டு விவரங்களை மறந்துவிட்டு உண்மையிலேயே வந்து குவிந்த முதலீடு எவ்வளவு? விவசாயிகளுக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்கள் யாவை? என்பனவற்றையெல்லாம் ஏன் பலம் வாய்ந்த ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை? அவ்வளவு ஆழம் வேண்டியதில்லை. ஒவ்வொரு வாரமும் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பதாகச் சொன்ன முதல்வரின் உத்தரவாதம் என்ன ஆனது? கடந்த ஐந்தாண்டுகளில் எவ்வளவு மாவட்டங்களின் தலைநகர்களுக்கு முதல்வர் சென்றார்? 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எவ்வளவு செயல்படுத்தப்பட்டிருக்கின்றன உள்ளிட்டவற்றை மேம்போக்காக அலசினாலே கூட போதுமானது. அரசாங்கத்தின் மொத்த செயல்பாட்டின்மையும் வெளிப்படுத்திவிட முடியும்.
எல்லாவற்றையும் மூடியும் மறைத்தும் மழுப்பியுமே பேசிக் கொண்டிருப்பதற்கும் எழுதிக் கொண்டிருப்பதற்கும் நாம் என்ன இடி-அமீன் ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அல்லது வடகொரியாவின் சர்வாதிகார ஆட்சியில் சிக்கியிருக்கிறோமா?
சாதிய வேட்பாளர்களை நிறுத்தியது ஏன்? தண்டிக்கப்பட்டவர்களாகச் சொல்லப்பட்டவர்களுக்கு வாய்ப்பளித்தன் பின்னாலிருக்கும் அரசியல் என்ன? என எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுகிற நேரமிது. நல்லது கெட்டது என அத்தனையையும் அலச வேண்டிய தருணமிது. இந்தச் சூழலிலும் கூட ‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’ என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்து மக்களை மதி மயங்கச் செய்கிற வேலைகளைத் தயவு செய்து அடுத்த ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்தால் போதும். அருவெருப்பாக இருக்கிறது. வாள் முனையை விட நாங்கள் பிடித்திருக்கும் பேனாவின் முனை கூர்மையானது என்றெல்லாம் ஊடக அறம் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? கட்சிச் சார்பற்று சாதியப் பற்றற்று அடுத்த ஒரு மாதம் செயல்பட்டால் கூட போதும். மக்கள் தத்தமது தொகுதிகளில் சரியான வேட்பாளர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதாகவெல்லாம் இந்த அரசாங்கம் செயல்படவேயில்லை என்பதுதான் உண்மை. அரசியல் சார்பில்லாமல் வெளியில் நின்று பார்க்கும் யாராலும் இதைப் புரிந்து கொள்ள முடியும். அதை விமர்சிக்காவிட்டாலும் தொலைகிறது. மக்களாக முடிவெடுக்கட்டும். ஆனால் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி மக்களை திசைமாற்றுகிற வேலையை நிறுத்துங்கள். அதுவே மக்களுக்குச் செய்யக் கூடிய ஆகப்பெரிய உதவியாக இருக்கும்.
வா. மணிகண்டன், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்; சமூக செயல்பாட்டாளர்.
இவருடைய வலைத்தளம்நிசப்தம். சமீபத்திய நூல் மசால்தோசை 38 ரூபாய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.