உங்களைத் தூண்டிய துரியோதனன் யார்? ஆனந்தவிகடனின் கட்டுரைக்கு இடதுசாரிகள் கேள்வி

கே. சுப்பராயன்

கடந்த வார (6.4.2016) ஆனந்த விகடனில், “போர்வாள், அட்டக்கத்தி ஆனகதை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாயிற்று. இதை எழுதியவர் ப.திருமாவேலன். அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர். அவருக்கு அரசியல் வளர்ச்சிப் போக்குகள், அரசியல் கட்சிகள் எடுக்கும் அரசியல் நிலைகள் குறித்து விமர்சிக்க முழு உரிமை உண்டு. அதை அங்கீகரிக்கவும், பாதுகாக்கவும் விரும்புகிறது மக்கள் நலக் கூட்டணி.விமர்சனங்கள் விமர்சனங்களாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தால் அவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கவும், நியாயமானவற்றை ஏற்றுக் கொள்ளவும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எப்போதும் தயக்கமயக்கங்கள் இருந்ததில்லை.

ஆனால், இந்த, ‘அட்டக்கத்தி’ கட்டுரை அத்தகையது தானா? அது முன்வைக்கும் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமானது தானா? என்ற வினாக்கள் எழுகின்றன.வாதம் புரிவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, கிடைக்கிற விபரங்களின் அடிப்படையில் நிதானமாக மதிப்பீடு செய்து, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு வாதங்களை முன்வைப்பது.இரண்டாவது வகை, முன்கூட்டியே ஒரு முடிவைக் கட்டமைத்துக் கொண்டு, அதற்குத் தகுந்த மாதிரி வாதங்களை முன்வைப்பது.இதில் ஆனந்த விகடனின் கட்டுரை இரண்டாவது வகைப்பட்டதாகும்.

கட்டுரையில், அறிவார்ந்த வாதங்கள் முன்வைக்கப்படவில்லை? ஆத்திரம் மட்டும் அடங்க மறுத்து வார்த்தைகளில் கொப்பளிக்கிறது!கட்டுரையில் மக்கள் நலக் கூட்டணி மீது இரண்டு அபாண்டமான அரசியல் பழிதூற்றலை முன்வைத்துள்ளது. ஒன்று, “இவர்களது பின்னணியே சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது” என்று தீர்மானகரமாக பழி சுமத்துகிறது! இரண்டு, “உங்களை இயக்கும் கிருஷ்ணர் யார்?” என்று வினாத் தொடுக்கிறது.இந்த இரண்டு விஷமங்களையும் அடிப்படையாகக் கொண்டு திருமாவேலன் கட்டுரைத் தாக்குதல் தொடுத்துள்ளார்.மக்கள் நலக் கூட்டணி மீது இத்தகைய ‘சந்தேக’ விதைகளைத் தூவித் தொடக்கி வைத்தது திமுகவும் அதன் பரிவாரங்களும்தான்!ஏன் அத்தகைய சந்தேக விதைகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து விதைக்க விழைகிறது? அதற்கான அரசியல் உள்நோக்கம் என்ன?அண்ணா திமுக மீது எழுந்துள்ள வெறுப்புணர்வை திமுக தங்கள் வாக்குகளாக மாற்றுவதற்கு, மக்கள் நலக் கூட்டணிக்கு பெருகி வரும் பொதுமக்கள் ஆதரவுப் போக்கு தடையாகவுள்ளது என்ற வெறுப்பால் விதைக்கப்படுகிற விஷக்கருத்தே இத்தகைய ‘சந்தேக’ நோய்ச் சிந்தைகள்!அதன் விளைவாக, திமுக பரிவாரங்கள், ‘மக்கள் நலக் கூட்டணி அதிமுகவின் ‘பி’ டீம் என்று அரசியல் பழிதூற்றலைத் தொடக்கின!இருந்தும், நாளுக்குநாள் மக்கள் நலக் கூட்டணிக்கு கிடைத்து வந்த ஆதரவு அலைகள், ஓயாது ஓங்கி அடிக்கத் தொடங்கியதால், திமுக பரிவாரங்கள் நிம்மதி நிலை குலைந்தது! தூக்கத்தை இழந்த துக்கக் கூடாரமாக மாறிய திமுக, தூற்றத் தொடங்கிவிட்டது.

அதன் ஒரு அங்கம்தான் திருமாவேலன் கட்டுரை! மக்கள் நலக் கூட்டணி மீது ஏன் இத்தகைய அரசியல் பழிதூற்றல்களைத் தொடர்ந்து முன்வைக்கிறார்கள்? ஏன் கடந்த 23 ஆம் தேதி முதல் தாக்குதலின் வேகம் அதிகரித்துள்ளது?மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிகவும் தேர்தல் உடன்பாடு கண்டதனால் ஏற்பட்ட பீதியினால் வெளிப்படும் பிதற்றல்கள்.திமுகவிடம் தேமுதிகவை போகாமல் தடுத்து நிறுத்தியதால் விழுந்த மரண அடியால் மண்டை கலங்கி வீசுகிற பழிச்சொற்கள்! வெற்று அவதூறுகள்!

“மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிகவை இணைத்தது. இந்தக் கூட்டணிக்கு உண்மையான பலம்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று தனது கட்டுரையில் ஒப்புக் கொண்டுள்ளார் ஆனந்த விகடனின் திருமாவேலன்! ஆனால் இந்த இணைப்பு மூலம் மக்கள் நலக் கூட்டணிக்கு 5 சதவீதம் கூடி 11 சதவீதமாக மாறலாம் என்று கூறுகிறார்.கோடிக்கணக்கான வாக்காளர்களின் மனங்களில் ஊடுருவி உணர்ந்து வெளிப்படுத்துகிற வித்தைகள் ஏதும் கற்று வந்தாரா கட்டுரையாளர் திருமாவேலன்?ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டுவிட்ட வெறுப்பு மனப் போக்கின் தவிர்க்க முடியாத மதிப்பீடே இந்த பதினோரு சதவீதம் என்ற கூற்று!திமுக, தேமுதிகவோடு “பேசாமலேயே பேசிக் கொண்டிருந்ததாக செய்திகளைத் திட்டமிட்டே பரப்பி, “பழம் நழுவிப் பாலில் விழும்“ என்று அரசியல் நாணயம் குறைந்த “நாநய” விளையாட்டு நடத்திய திமுகவை, ஆனந்தவிகடன் விமர்சித்து கட்டுரை தீட்டாமல் மக்கள் நலக் கூட்டணி மீது விழுந்து பிடுங்குவது ஏன்? ஊழல் குற்றச்சாட்டில் புதைந்து கிடக்கும் திமுகவை, தேமுதிக கூட்டணி சேர்ந்து கைதூக்கி விட்டு! வெற்றிக்கரை ஏற்ற வேண்டும் என்பதே கட்டுரையாளரின், ஆனந்த விகடனின் பெருவிருப்பம் என்பது புரிகிறது.

தங்கள் விருப்பங்கள் நிறைவேறத் தடையாக இருப்பது, மக்கள் நலக் கூட்டணியின் பெருகிவரும் பலம்தான்! மக்கள் நலக் கூட்டணியின் பலம் போதுமானதாக இல்லாதபோது நேர்மறையான அணுகுமுறை மேற்கொண்டு வந்த ஆனந்த விகடன், பலம் பெருகத் தொடங்கியவுடன் சீறிச் சினந்து சின்னாபின்னப்படுத்த முயற்சிப்பதன் மூலம், தங்கள் அந்தரங்க அரசியல் நோக்கத்தை அரசியல் உலகிற்குப் புரிய வைத்திருக்கிறார்கள், மெத்தமகிழ்ச்சி!“கருணாநிதி, ஸ்டாலினின் நாற்காலிக் கனவைத் தடுக்கும் தந்திரம் மட்டுமே தூக்கலாகத் தெரிகிறது” என்று கணித்து மக்கள் நலக் கூட்டணி மீது ‘கனல்மாரி’ பொழிகிறது.எங்களை இயக்குவது ஊழல்களாலும், முறைகேடுகளாலும் அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளை அடித்துக் குவிக்கும் கொடுமதியாளர்கள் மீதான கோபம் தான்!எங்களை இயக்குவது, பித்தலாட்டங்களையே அரசியலாகக் கொண்ட ஒப்பனை அரசியலை ஒழித்துக் கட்டி, கொள்கை சார்ந்த, அர்ப்பணிப்பு நிறைந்த மாற்றுப் பாதைதான் மாற்று அரசியல் தான்!எங்களை இயக்குவது, கொள்கைசார்ந்த அரசியல்தான்!எங்கள் ‘பின்புலத்தை’ ஆராயமுற்பட்டுள்ள ஆனந்தவிகடனுக்கு ஒன்று சொல்கிறோம். ஆனந்தவிகடனும், அதைத் தொடக்கியவர்களும் பிறப்பதற்கு முன் பிறந்து, தனது லட்சியப் போராட்டத்தால் சொல்லொணாத் துன்ப துயரங்களில் மூழ்கி, உலகில் எந்த இயக்கமும் சந்தித்திராத அடக்குமுறைகளை, தாக்குதல்களைச் சந்தித்து, உலக அளவிலும், உள்நாட்டளவிலும் அரசியல் தளத்தில் காவியம் படைத்த கம்யூனிச இலட்சியம் தான் எங்கள் ஆதிமூலம்! அதுவே எங்கள் பின்னணி, பின்புலம். எங்கள் லட்சியத்தில் உறைந்து கிடக்கிற மனிதநேயமும், எங்கள் தத்துவத்தில் சுடர்விடுகிற உண்மையும், எங்கள் பொது வாழ்விற்கு உயிரும், ஒளியும் கொடுக்கிறது.

அன்று மூலதனம் பேசிய கம்யூனிஸ்ட்டுகள் இன்று மகாபாரதம் பேசுகிறார்கள்!’ என்று கிண்டல் செய்கிறது ஆனந்தவிகடன் கட்டுரை! மூலதனம் பேசியவர்கள் மகாபாரதம் பேசுவது குற்றச் செயலா? கொள்கைக்கு முரண்பட்ட பேச்சா? என்ற குறை காணுகிறது ஆனந்தவிகடன்? என்ன குறைகாட்டுகிறார் கட்டுரையாளர்? வாழ்கிற மண்ணோடு மண்ணாக, மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து, கடந்த கால மனிதகுலம் நடந்து வந்தபாதையை, நிகழ்கால மனிதகுல நடப்பைத் தேர்ந்து, தெளிந்து, ஆழ்ந்து, அறிந்து, மனித குலத்திற்கான எதிர் காலப் பாதையை அறிவியல்பூர்வமாக வகுத்து, வரையறுத்துச் செயல்படுகிறவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்! எங்களது தந்தையரும், அவருக்கு முந்தையரும் எதை விரும்பினார்கள், எதை வெறுத்தார்கள் என்பதை எடுத்தியம்பும் உலகப் பெருங்காவியங்களில் ஒன்றான மகாபாரதம் படிப்பது கிண்டலுக்கும், கேலிக்கும் உரியதாக ஆனந்தவிகடன் கருதுவது ஒரு விபத்து! நிறைவாக, மக்கள் நலக் கூட்டணியின் துகில் உரிய உங்களைத் தூண்டிய துரியோதனன் யார்? ஆனந்த விகடனும், திருமாவேலனும் பதில் சொல்லட்டும்.

கே. சுப்பராயன், மாநில துணைச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

நன்றி: தீக்கதிர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.