#புத்தகம்2016: இரா. முருகவேளின் ’முகிலினி’ இரண்டு விமர்சனங்கள்!

எழுத்தாளர் இரா. முருகவேள் எழுதி வெளியாகியிருக்கும் நாவல் ‘முகிலின்’. நாவல் குறித்து இயக்குநரும் ஊடகவியலாளருமான வெற்றிவேல் சந்திரசேகர், மற்றும் நாவாலசிரியர் விநாயக முருகன் எழுதியிருக்கும் விமர்சனங்கள் இங்கே…
வெற்றிவேல் சந்திரசேகர்

இரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவலை வாசித்து முடித்தேன். நல்லதொரு வாசிப்பனுபவம்! அவரது எழுத்தும் அவர் முன் வைக்கும் அரசியலும் எப்போதும் எனக்கு நெருக்கமானதாகவே இருக்கும்.

அவரது மொழி பெயர்ப்பான ‘பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ ஏற்படுத்திய பாதிப்புகள் என்னை வழிநடத்தி வருகின்றன. ‘எரியும் பனிக்காடு’ இவரது மொழி பெயர்ப்பு (ரெட் டீ) நாவல். வெள்ளைக்காரன்களை எல்லாம் பகுத்தறிவு பகலவன்களாக திராவிட இயக்கங்கள் ஏற்படுத்தியிருந்த மாயையை உடைத்தெறிந்த நாவல்.

‘மிளிர்கல்’ முருகவேல் எழுதிய நாவல். மிரட்டியிருந்தார். இடையில், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குப் பின்னால் உள்ள உலகளாவிய அரசியலை நீ..ண்ட ஆவணப்படமாக்கியிருந்தார். தமிழில் மிக முக்கிய ஆவணமது.

இதோ, இப்போது ‘முகிலினி’. கோவை, ஈரோடு மாவட்டங்களின் பின்னணியில் சிறுமுகை விஸ்கோஸ் ஆலை ஊடாக அறுபதாண்டு வரலாற்றை நாவலாக தந்திருக்கிறார். சிறப்பான முயற்சி. இத்தனை வரலாற்றுத் தகவல்களை திரட்ட முருகவேள் மிகப்பெரிய உழைப்பை தந்திருக்க வேண்டும். அது நாவலின் ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது. கொண்டாட வேண்டிய படைப்பு. ஆங்காங்கே உள்ள எழுத்துப்பிழைகள் நாவலுக்கு திருஷ்டி!!

‘மிளிர்க’லில் நாவல் நவீன வடிவத்தில் இல்லாதது பெரும் குறை. ‘முகிலினி’யில் நாவலின் தொடக்கம், அந்தக் குறையை போக்கியிருக்கிறது. ஆனால் போகப்போக அவரது எழுத்து நடை சாதாரணமாக விடுகிறது.

எப்படி இருந்தாலும் முகிலினி மிகப்பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.
நான் பிறந்து வளர்ந்த ஊரின் வரலாற்றை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கலில் உள்ள சிக்கல்களை ஒரு புனைவில் இவ்வளவு நேர்மையாக தெளிவாக சொல்ல முடியுமா? முருகவேளுக்கு முடிகிறது. ஒரு தொழிற்சாலை ஏன் உருவாகிறது? அரசு ஏன் சலுகைகள் தந்து ஊக்குவிக்கிறது? அது எப்படி வளர்கிறது? எப்படி எல்லாம் சூழலை கெடுக்கிறது? அரசு ஏன் தடுக்க மறுக்கிறது? இவை அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறார், ஆசிரியர்!

நாவல் தமிழ்த்தேசியத்துக்கும் (ராஜூ கதாபாத்திரம்) பொதுவுடைமைக்குமான (ஆரான் பாத்திரம்) சிந்தாந்த முரண்களோடு தொடங்குகிறது. பின்னர் அது, காந்திவழியில் கிராமப் பொருளாதாரம், இயற்கைக்கும் திரும்புதல் சித்தாந்தங்களை விவாதிக்கிறது; முன்வைக்கிறது. இதிலுள்ள சிறப்பு நாவலாசிரியர் எந்தப் பக்கமும் நிற்காமல் பார்வையாளனாக கடந்து செல்ல முயல்கிறார்.

முகிலினி பெயர்க் காரணம் சுவாரஸ்யமானது. அதை வாசகர்கள் வாசித்துணருங்கள்!!

கோவை தினமணியில் இருந்த போது விஸ்கோஸ் ஆலை திருட்டு சம்பவங்களை பலமுறை எழுதியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில் அடிக்கடி துப்பாக்கி சூடு நடக்கும்.

நாவலில் முன் பாதியில் வரும் ராஜூ சிங்காநல்லூர், வெள்ளலூர் பகுதிகளில் வாழ்கிறார். அந்த ஊர்களை ஒட்டியுள்ள கள்ளிமடை கிராமம்தான் எங்களது பூர்வீகம். ராஜூவின் தாயார் சடச்சி. (என் தந்தை வழி பாட்டியின் பெயரும் சடச்சி!) ராஜூவின் குடும்பம் இடம்பெயர்ந்து தன் சாதி அடையாளத்தை மறைத்துக் கொள்கிறது. எங்கள் குடும்பத்திலும் அதுதான் நடந்தது. திருப்பூரில் யாரிடமும் சாதி சொல்லக்கூடாது என்றே நானும் என் சகோதரர்களும் வளர்க்கப்பட்டோம். “நரஸ் அம்மா மகன்கள்” என்ற அடையாளம் தரும் மரியாதை சாதி தெரிந்தால் போய்விடும் என்று பயந்திருந்தோம். ஆக என்னளவில் ‘முகிலினி’ மிக நெருக்கமாகி விட்டாள். இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு வரலாற்று மீளாய்வு நம் தமிழ்ச் சமூகத்துக்குத் தேவை. அதற்காக முகிலினியை சிகப்பு கம்பளமிட்டு வரவேற்கலாம். இந்தாண்டின் விகடன் விருதுக்கும் சாகித்ய அகாதெமி அகாடமி விருதுக்கும் முகிலினியை பரிந்துரைக்கலாம்.

விநாயக முருகன்

இரா.முருகவேளின் இரண்டாவது நாவல் முகிலினி படித்தேன். நாவலில் ஆங்காங்கு வரும் விவரணைகளையும், உரையாடல்களையும் பார்க்கும்போது இரா.முருகவேள் முதல் நாவல் மிளிர்கல்லை விட இதில் தனது எழுத்தை கூர்மையாக்கி மேம்படுத்தியுள்ளார் என்று தோன்றுகிறது.

நாவலின் முதல் அத்தியாயம் 1949 ஆம் ஆண்டு தொடங்குகிறது. பவானி ஆற்றுக்கும், மோயார் நதிக்கும் கிழக்கே சென்னை (மதராஸ) மாகாணத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டான பவானி சாகரம் திட்டம் தொடங்கும் காலக்கட்டத்தில் கதை ஆரம்பிக்கிறது. இத்தாலியில் பிரபல செயற்கை இழை (ரேயான்) தயாரிக்கும் நிறுவனம் இத்தாலியானா விஸ்கோஸா. அந்நிறுவனம் கோவையில் தனது செயற்கை இழை நிறுவனத்தை தொடங்க பெர்னார்டினோ என்ற நிறுவன தூதுவரை அனுப்புகிறது. பருத்திக்கு பஞ்சம் நிலவிய காலம் அது. செயற்கை இழைக்கு மவுசு அதிகரிக்கிறது. பெர்னார்டினோ தனது உதவியாள் ராஜூவின் உதவியோடு உள்ளூரில் பஞ்சாலை வைத்திருக்கும் ஆலை அதிபர்களை சந்தித்து ரேயானை மார்க்கெட்டிங் செய்கிறான். உள்ளூரில் ஆலை வைத்திருக்கும் கஸ்தூரிசாமிநாயுடுவுக்கு முதலில் ரேயான் ஆலை பற்றி அவ்வளவு அபிப்பிராயம் இல்லை என்றாலும் மனைவி செளதாமினி யோசனையின்படி ரேயான் ஆலை ஆரம்பிக்க மாமனார் செளந்தராஜன் வழியாக அதற்கான வேலைகளில் இறங்குகிறார். அப்போதைய முதலமைச்சர் காமராஜரை சந்திக்கிறார்கள். ஆலைக்கு சுலபமாக அனுமதி கிடைக்கிறது. அந்த ரேயான் ஆலை வந்த பிறகு கோவையை சுற்றி இருந்த நிலவியல் அமைப்பு,எப்படி மாறியது அங்கு வசித்த மக்கள் எப்படியெல்லாம் மாறினார்கள் சுற்றுச்சூழல் மாசு என்ற பின்புலம்தான் நாவலின் மையக்கதை. மூன்று சரடுகளாக செல்லும் இந்நாவலில் ஒருபக்கத்தில் அறுபதாண்டுகால திராவிட இயக்க வரலாறு மிக நுட்பமாக கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியாகவும், தகவல்கள் வழியாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்மகனின் வெட்டுப்புலி தவிர வேறு ஏதாவது நாவல்கள் திராவிட இயக்க வரலாறை ஆவணம் செய்துள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். தெரிந்தவர்கள் சொல்லவும். இரண்டாவது சரடில் அந்த ரேயான் ஆலை, அது ஏற்படுத்தும் சுற்றுசூழல் பாதிப்பு, தொழிற்சங்கம், இடதுசாரி இயக்கங்கள் என்று நகர்கிறது. மூன்றாவது சரடில் நாயுடு, கவுண்டர், தலித்கள் இவர்களுக்குள் இருக்கும் உள்முரண், அரசியல், தொழில்போட்டி என்று செல்கிறது. இந்த மூன்று சரடுகளும் நாவலை மிக பிரமாண்டமான கேன்வாஸ் போல மாற்றிவிடுகிறது.

தமிழில் தற்போது அரசியல் நாவல் (கதாபாத்திரங்கள் தெளிவான அரசியல் நிலைப்பாடுடன் ஏதேனும் பிராந்தியக்கட்சியை சேர்ந்தவர்களாக அல்லது இடதுசாரி பின்புலத்தில் இருப்பார்கள்) எழுதுபவர்கள் மிக குறைவு. தமிழ்மகன் , பாரதிநாதன் போன்ற சிலரை சொல்லலாம். முதல்நாவல் மிளிர்கல்லை படிக்கும்போது முருகவேள் மீது ஆச்சர்யமாக இருந்தது. இந்த நாவல் படித்து முடித்ததும் பிரமிப்பாக இருக்கிறது. கடந்த அறுபதாண்டுகால கோவையை தாண்டி தமிழ்நாட்டின் முக்கியமான ஆவணமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக அரசியல் நாவல்களில் நுட்பமான மனித அக உணர்வுகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. புறச்சூழலை, அந்தக்காலத்தின் அரசியலை, வரலாற்று தகவல்களை கதாபாத்திரங்கள் உரையாடல்கள் வழியாக அல்லது விவரணைகள் வழியாக கொடுத்தாலே போதும். இந்நாவலில் அது சரியாகவும் வந்துள்ளது.

முகிலினி (நாவல்)
ஆசிரியர்: இரா .முருகவேள்

பொன்னுலகம் பதிப்பகம்
ரூ.375

முகிலினி நாவலை தொலைபேசி வழியாக வாங்க இந்த எண்ணை அழைக்கலாம்; கதிரேசன் : 8489401887

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.