பிரேம்

1916- மே மாதம் 9 ஆம் தேதி Caste in India: Their mechanism, genesis and development (இந்தியாவில் சாதிகள்: அவற்றின் செயல்பாடு, உருவாக்கம், பெருக்கம்) என்ற ஆய்வுக்கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அண்ணல் அம்பேத்கர் அளித்த போது அவருக்கு வயது 25. ஒரு ஆய்வு மாணவராக அவர் அளித்த அக்கட்டுரை இன்று உள்ள இந்திய ஆய்வுகள் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது.
அதனை எழுதும் முன் அவரின் மனதில் அது எத்தனை காலம் ஊறிக்கிடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் போது மாற்றங்களுக்கான சிந்தனைகளுக்குப் பின்னுள்ள வலிகள் புரியவரும்.
இக்கட்டுரைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அறிவு மரபைப் புரட்டிப் போட்டு புதியன கண்ட பேரறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் இன்றும்கூட சிந்திக்க இயலாத பெரும் சிந்தனைகளைத் தந்துவிட்டுச் சென்றிருந்தார். இதற்குப் பின் வந்த வெற்றுச் சொற்கள்கூட உலக சிந்தனை என்ற பெயரில் தமிழில் பரவி விரவி பாடல் பெற்ற சிந்தனைகளாக மாறிவிட்டன. பின்நவீனத்துவம் வரை வந்து பெயர்சொல்லும் பிள்ளைகள் பெருகியுள்ளனர்.
அயோத்திதாசரையும் அண்ணல் அம்பேத்கரையும் கற்காமல்-படிக்காமல் -அறியாமல்- உணராமால் தெரிதா, ஃபூக்கோ, லியோதார், ரேலான் பார்த் என்ற பெயர்களில் மூழ்கிய தமிழ் அறிவாளர்கள் பாரிசுக்கு இருமுடி கட்டி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இது ஒரு பக்கம், பல்கலைக்கழக படிப்பாளர் கூட்டத்திடம் நான் பத்து ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன் “அம்பேத்கரை படியுங்கள் பிறகு பின்நவீனத்துவ கட்டுரைகளைப் படியுங்கள் பேசுங்கள்.” இதுவரை இரண்டொருவர் தவிர யாரும் படிக்கவில்லை. ஏன் இது தெரியுமா? பிராமண மையமான பின்நவீனத்துவம். தமிழில் சாதிவெறியில் ஊறிய அறிவுக் கேடுதான் இலக்கியம் கோட்பாடு என்ற முகமறைப்புகளுடன் முன்- ஓடிகளாக அணிதிரள்கின்றர்.
பின்நவீனத்துவம் அடையாளத்தை மறுக்கின்றதாம் பிராமணர் என்றாலும் பிராமணர் இல்லை, சாதியில் பிறந்தாலும் சாதியில் மையம் கொள்ள முடியாது என தெரிதா வழி சொல்கிறார்களாம் இவர்கள் இதன் அடுத்த கட்டம்தான் தலித் சாதியில் பிறந்தாலும் தலித் இல்லை, பெண்ணாகப் பிறந்தாலும் பெண் இல்லை என்பது. துயரம் அடைகிறவரும் பிறரைத் துயரப்படுத்துகிறவராக இருக்கிறார்கள் அதனால் அரசியல்-மாறுதல் பற்றிப் பேசுவதும் இன்னொரு அதிகாரம்தான். முடிந்து விட்டது பின்நவீனத்துவம். என்ன செய்யலாம் தற்போது அண்ணலையும் அயோத்திதாசரையும் படிக்கலாம் பிறகு பின்நவீனத்துவம் முன்நவீனத்துவம் பற்றி பேசலாம். இந்தியாவின் பின்நவீனத்துவம்-பின்காலனியம் அம்பேத்கரில்தான் தொடங்குகிறது என 20 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய போது கடுங்கோபத்துடன் மறுத்த ஆட்கள்தான் இன்று கலக-உலக பின்னா நவீனத்துவ எழுத்தாளர்களாகவும் அமாக்கிய அறிஞர்களாகவும் களம் கண்டு வருகிறனர். தன் சாதியை மறைத்து தானும் தலித்தான் என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் போயுள்ளனர். லக்கான், தெரிதா, ஃபூக்கோ படித்ததாகச் சொன்னால் பாரிசுக்குப் போகலாம், பஞ்சு மிட்டாய் வாங்கலாம், நாடு போற்ற வாழலாம் ஞானபீடம் ஏறலாம். அயோத்திதாசரையும் அம்பேத்கரையும் படித்து உணர்ந்தால் தலித் தலைமை ஏற்ற அரசியலில் உள்ளடங்க வேண்டும், சாதித் தன்னலை அழிந்த புதிய அறம் ஏற்க வேண்டிவரும். என்ன செய்வது ?
அண்ணல் தனது ஆய்வுக் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார் “We must, however, guard against approaching the subject with a bias. Sentiment must be outlawed from the domain of science and things should be judged from an objective standpoint.”
இதனை பின்நவீனத்துவ ஜீயர்கள் இப்படி எதிர்கொள்வார்கள் “objective standpoint” என எதுவும் இருக்க முடியாது அதனால்….அம்பேத்கர் அறிவின் அதிகாரத்தை முன் வைக்கிறார். அதனால் என்ன ? முதலில் படியுங்கள் பிறகு நீங்கள் முன்வைப்பது- பி்ன்வைப்பது பற்றிப் பேசுங்கள். இது அம்பேத்கர் மாதம் அடுத்து வருவது அயோத்திதாசர் மாதம். இந்த காலத்தைப் பயன்படுத்தி இதுவரை படிக்காதவர்கள் படிக்கலாம் படித்தவர்கள் கற்கலாம் கற்றவர்கள் உணரலாம். இனியான அரசியல் தலித்-தலித் அல்லாதவரகளிடையிலான போராட்டம் என்ற கொடுஞ்செயல் திட்டத்தில் நீங்களும் நானும் எங்கு இருக்கப்போகிறோம் என்பதற்கு இங்குதான பதில் கிடைக்கும்.
ப்ரேம், பேராசிரியர்; எழுத்தாளர்.