ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனத்திலோ, அல்லது அரசின் ஒப்பந்த தொழிலையோ, அரசியல்வாதியாகவோ மாறி மக்கள் விரோத நகர்வுகளை செய்வதை நாம் வழக்கமாக பார்க்கிறோம்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னரும், தங்களது பணியை நிறுத்தாமல் அரசு நிறுவனங்கள் மக்கள் விரோத அரசியலை செய்வதை தடுக்க சில முன்னாள் அரசு பொறியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது.
முல்லைப்பெரியாறு அணைக்காக்கும் ஆவணப்படத்தினை முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செய்தார்கள். இன்றும் தொடர்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய ஆவணப்படம் ஒரு ஆயுதமாக போராட்ட களத்தில் பயன்பட்டது.
இதே போல முன்னாள் மின் துறை பொறியாளர்கள், மின்சாரம் தனியார் மயமாவதை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார்கள். மின்விலையேற்றம் செய்யப்படுவதை கண்டித்து போராடுகிறார்கள். இவர்களின் குரல்கள் மிக மிக முக்கியமானவை. அதிகாரவர்க்கத்தில் பணி செய்திருந்தாலும், மக்களுக்கான சேவையை நெருக்கடிக்கிடையிலும் சமரசமில்லாமல் செய்தவர்கள்.
ஓய்வு பெற்ற இந்த நேர்மையான பொறியாளர்கள் தங்களது மக்கள் பணியை தங்களது ஓய்வூதியம் மூலமாக கிடைக்கும் நிதியிலிருந்து மக்கள் பணிக்கு தொடர்ந்து செலவழிக்கிறார்கள். வயது முதிர்ந்த காலத்திலும் தங்களது தேவைகளை குறைத்துக்கொண்டு இந்தப் பணியை யாருடைய அங்கீகாரத்தினையும் எதிர்நோக்காமல், பதவிகளை எதிர்நோக்காமல் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். இவர்களின் அயராத உழைப்பில் மின்சாரம் குறித்தான ஆவணப்படம் உருவாகியிருக்கிறது.
மின்சாரம் குறித்தான முழுமையான புரிதல்கள் நமக்கு தேவை.
மின்சார பற்றாக்குறையினால் ஒட்டுமொத்த சமூகத்தின் பொருளாதாரமும் முடக்கப்படும். பொருளாதாரம் மட்டுமல்ல கல்வி, சுகாதாரம் என பலவிடயங்கள் மின்பற்றாக்குறையினால் சீரழியும் என்பது ஆய்வு.
இந்நிலையில் அனைவருக்கும் பொதுவான, கொடுக்கப்படவேண்டிய அத்தியாவசிய பண்டமாக மின்சாரம் மாறிய பின்னர், இந்த தேவையை பணக்காரர்கள், முதலாளிகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய, பெறக்கூடிய வணிகப் பொருளாக எப்படி, யாரால், எதற்கு மாற்றப்பட்டது என்கிற உண்மை சொல்லப்பட்டாக வேண்டும்.
தமிழகத்தில் மின்சாரம் என்பது லாபகரமான அரசுத் துறையாக இருந்தது மட்டுமல்லாமல், அனைவருக்கும் மின்சாரம் கிடைத்து மாநிலத்தின் பொருளாதாரத்தினை உயர்த்துவதில் பங்காற்றியது என்பது வரலாறு. இந்த மின்சாரம் கடந்த 15-16 ஆண்டுகளில் எப்படி முடக்கப்பட்டது, ஏன் முடக்கப்படுகிறது? எப்படி கடனாளியானது என்பதை புரிந்து கொள்ளவில்லையெனில் நமது எதிர்காலம் இருண்ட காலமாகும்.
இதைக் குறித்த விரிவான ஆவணப்படத்தினை ’தமிழக மின்துறை பொறியாளர் அமைப்பு’ தயாரித்து வெளியிடுகிறது. இந்த ஆவணப்பட வெளியிடலை ’நிமிர் அமைப்பு’ ஒருங்கிணைக்கிறது. மூத்த தலைவர்கள் முன்னிலையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் இது வெளியிடப்படுகிறது.
அனைவருக்குமான இந்த ஆவணப்பட திரையிடல் & வெளியீட்டு நிகழ்வில் பங்கெடுத்து முன்னாள் மின்சாரதுறை பொறியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க இந்த ஆவணத்தினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
“ஊழல் மின்சாரம்” ஆவணப்படம் வெளியீடு…42 நிமிடங்கள்
மாலை 5 மணி , இக்சா அரங்கம், எழும்பூர்,
2 ஏப்ரல் 2016, சனிக்கிழமை
மின் உற்பத்தியில் நுழைந்த தனியார், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழகடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாரும், நிர்வாகிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெறிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய படம் இது……..
ஆய்வு , எழுத்து , வர்ணனை- சா.காந்தி
வடிவம் இயக்கம்- சா.காந்தி, ஆர்.ஆர். சீனிவாசன்
ஒளிப்பதிவு-எம்.ஆர் .சரவணக்குமார்
படத்தொகுப்பு-கா.கார்த்திக்
தயாரிப்பு- தமிழ் நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பு
அனைத்து தொடர்புகளுக்கும் 94430 03111