‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே!

ராஜராஜனின் பார்ப்பனீய ராஜகுருக்கள் தான், தேவரடியார் என்கிற பெண்களுக்கு எதிரான ஆகப்பெரிய கொடுமைகளையும் ஏனைய சாதி வாரிக் கடமைகள் நிர்ணயமும் சோழர்களின் பார்ப்பனப் படையால் உருவாக்கப்பட்டது என்பதை ஐயா இல.கணேசன் போன்றவர்கள் அருள் கூர்ந்து படிக்க வேண்டும்.
அறிவழகன் கைவல்யம் 
“இறந்தவற்றை அப்புறப்படுத்துவோர் நோய்தொற்று பரவும் என்பதால் தங்களை தாங்களே ஒதுக்கி வைத்துக்கொண்டனர்.அப்படித்தான் தீண்டாமை வந்தது”- இல.கணேசன்.

தீண்டாமையின் வரலாறு குறித்து ஐயா இல.கணேசனுக்கு வரலாற்றுப் புரிதலோ, வாசிப்போ முற்றிலுமாக இல்லை என்பதை இவருடைய இந்தக் கருத்து தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

“சிறுகொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையோடு, இந்நான்கு அல்லா உணவும் இல்லை, துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை”

என்று ஐம்பெரு நிலங்களைக் குறித்து வாகைத் திணையிலே பாடுகிற மாங்குடிக் கிழார் காலத்தின் தமிழ்ச் சமூக வரலாற்றை ஐயா இல.கணேசன் அவர்கள் வாசிக்க வேண்டும். சங்கத் தமிழ் காலத்தில் இறந்தவற்றை அவரவரே அப்புறப்படுத்திய சான்றுகளும், பாடல்களும் உண்டு. தூய்மைப்படுத்திய சாதி என்றெல்லாம் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் வரையறை செய்யப்பட்டதில்லை தமிழ்க்குடிகளின் வரலாற்றில்.

சங்க காலப் பண்பாட்டு முழக்கங்கள் ஓய்ந்து களப்பிரர்களின் காலம் உழைப்பவர்களின் பொற்காலமாக, விவசாயிகளின் ஆகப்பெரிய வளர்ச்சிக் காலமாக ஓங்கிய பிறகு தான் சமணம் தழைத்தோங்கியது, பொது உடைமைச் சமூகமாக இருந்த தமிழ்ச் சமூகம் இயல்பாகவே சமணத்தின் மீது ஆர்வம் கொண்டு வைதீகத்தின் ஆளுமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது.

பிறகு தான் ஐயா இல.கணேசன் சொல்கிற இந்த தங்களைத் தாங்களே ஒதுக்கிக் கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றுத் துயரம் கொண்ட வாழ்க்கை துவங்கியது, குறுநில ஆட்சிப் பரப்பில் கிராமப் பொதுச் சபையாகவும், ஒவ்வொரு கிராமப் பொதுச் சபையின் வரி நிர்ணயத்திலும், நிலவியல் எல்லை வகுப்பையும் மன்னர்களுக்குச் சொல்லும் கிராமப் பொதுச் சபை உறுப்பினர்களாகவே ஐயா இல.கணேசன் சொல்கிற தங்களைத் தாங்களே ஒதுக்கி வைத்துக் கொண்ட சுய தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள். பறை முதலி என்றும் “ஐநூற்றுப் பறையர்” என்றும் போர்க்களங்களில் களமாடிய அற்புதமான வீரர்களாகவும் ஐயா சொல்கிற சுய தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள்.

இயல்பாகச் சமணத்தைத் தழுவி இருந்த பறையரும், பாணரும் சோழர்களின் ஊர்க் கொள்ளைகளுக்குத் துணையிருக்க விரும்பவில்லை, எதிர்த்து மதம் மாறினார்கள், கழுவேற்றிக் கொல்லப்பட்டார்கள், சமணர்கள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் கழுவேற்றிக் கொல்லப்பட்டவர்களில் பலர் உண்மையில் பறை முதலியராகவும், துடியராகவும், பாணராகவும் நத்த நிலங்களை ஆளுமை செய்தவர்கள், இந்த சுய தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனிப் புரோகிதர்கள் வரலாற்றில் உண்டு, இவர்களே வெவ்வேறு சமூகங்களுக்கு சமயக் குருக்களாக இருந்து ப்ரோகிதம் செய்த காலமும் வரலாற்றில் உண்டு.

உண்மையில் சேர, பாண்டிய மன்னர்களை மட்டுமன்றி ஈழம் மற்றும் இன்றைய சில ஆசிய நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் சோழர்கள் கொள்ளையடித்தார்கள், சைவ சமயத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சோழர்கள் ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனரும், வேளாளரும் இணைந்து அதிகார மையமானதும், சுய தாழ்த்தப்பட்டவர்கள் உருவாக்கப்பட்டதும் இந்தக் கொடுங்கோல் ஆட்சிகளுக்குப் பிறகுதான் என்பதை ஐயா இல.கணேசன் அவர்கள் வரலாற்றைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

சோழர்களின் பிரம்மாண்டக் கோவில் வரலாற்றின் பின்னால் தான் ஐயா சொல்லும் சுய தாழ்த்தப்பட்ட சமூகங்கள் உருவாக்கப்பட்டு ஊருக்கே வெளியே தள்ளப்பட்டார்கள், சிறு விவசாயிகளாக செழிப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்திருந்த விவசாயிகள் கடன் கொடுக்கப்பட்டுப் பின்னர் கடன் கட்டத் தவறிய காலங்களில் நிலங்கள் பறிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டார்கள், சூட்டுக் கோலால் அடையாளம் செய்யப்பட்டுப் பின்னர் கோவில் நிலங்களில் வேலை செய்ய ஆணையிடப்பட்டார்கள்.

தஞ்சையைச் சுற்றி இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு இலவசமாக தங்கள் உழைப்பைக் கொடுத்தார்கள் இந்த சுய தாழ்த்தப்பட்டவர்கள், பார்ப்பனரையும், வேளாளரையும் தவிர ஏனைய சமூக மக்கள் எல்லாவற்றுக்கும் வரி செலுத்தியபடி வேத ஆகமச் சாலைகளில் கல்வி பயிலும் பார்ப்பனர்களின் வாழ்க்கைக்கும் சேர்த்து உழைத்தார்கள். நிலப்பறிப்பை ஒரு கலையாகவே சோழர்கள் செய்தார்கள், பார்ப்பனர் வாழும் ஊர்களின் நிலங்களை எல்லாம் அரசுக்குச் சொந்தமாக்கச் சொல்லி அவர்கள் மன்னனுக்கு ஆலோசனை சொல்ல அப்படியே ஆணையும் பிறப்பித்தார் ராஜராஜன்.

நிலமிழந்த அடிமைகளாய் இன்று சேரிகளில் வாழ்வதாகச் சொல்லப்படும் சுய தாழ்த்தப்பட்டவர்கள், அப்போதுதான் தங்கள் மேம்பட்ட வாழ்க்கை முறையை இழந்தார்கள், அப்போது தான் எங்கள் குழந்தைகள் சுயமரியாதையும், மகிழ்வும் நிரம்பிய ஒரு அற்புதமான வாழ்க்கை முறையை இழந்தார்கள். பிறகு உணவுக்கும் வழியின்றி தொடர்ந்து உழைத்தார்கள், வாழ்க்கையின் ஏதுமற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மூத்த தமிழ்க் குடியை வெவ்வேறு ஊர்களில் தமிழ்ச் சமூகம் தூய்மை செய்பவர்களாக மாற்றிக் கொண்டது.

ஊரை விட்டு அவர்களை விலகி இருக்க வேண்டும் என்று காலனிய மனநிலை கொண்டு அலைந்தது என்பதையும். பார்ப்பனீயத்தால், சைவத்தால் கைப்பற்றப்பட்ட அதிகார மையங்கள் தான் இந்த துப்புரவுப் பணிகளை உழைக்கும் மக்களின் மீது திணித்தது என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக வரலாற்றில் இருப்பதை மறைத்து ஐயா இல.கணேசன் புதிய கதை சொல்வது வேடிக்கை மட்டுமல்ல மாறாத வன்மமும் கூட.

வட மாநிலங்களில் இருந்து பார்ப்பனர்கள் குடியேற்றப்பட்டது மட்டுமன்றி, ராஜகுரு என்றொரு மன்னனுக்கு இணையான பதவியும் பார்ப்பனருக்கு வழங்கப்பட்டது சோழர்களின் பார்ப்பனீயக் குடியேற்றங்களுக்குப் பிறகுதான், தீண்டாமை பற்றிய முதல் குறிப்பேட்டை எழுதியது ராஜராஜனின் பார்ப்பனீய ராஜகுருக்கள் தான், தேவரடியார் என்கிற பெண்களுக்கு எதிரான ஆகப்பெரிய கொடுமைகளையும் ஏனைய சாதி வாரிக் கடமைகள் நிர்ணயமும் சோழர்களின் பார்ப்பனப் படையால் உருவாக்கப்பட்டது என்பதை ஐயா இல.கணேசன் போன்றவர்கள் அருள் கூர்ந்து படிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் இன்று சேரிகளில் வீழ்த்தப்பட்டிருக்கும் பல கோடித் தமிழ்ச் சமூகமும் தன்னைத் தானே வீழ்த்திக் கொண்டது அல்ல, பெருமையும், உயர் மரபுகளும் கொண்டு வாழ்ந்த தமிழ்ச் சமூகம், தூய்மை, துப்புரவு என்றெல்லாம் வழக்கமான உங்கள் வருணாசிரம நஞ்சைக் கக்கி இழிவு செய்ய முயற்சி செய்ய வேண்டாம். நாங்கள் மீண்டெழுவோம், வன்முறையும், அடக்குமுறையும் எங்கள் வாழ்க்கை முறை அல்ல, அதுவே நாங்கள் மீண்டெழத் தடையாய் இருக்கிறது இன்றும்.

அறிவாற்றலும், உழைப்பும், நம்பிக்கையும் நிறைந்த எமது குழந்தைகளின் மனநிலையை உங்களைப் போன்ற வன்மமும், நஞ்சும் நிறைந்தவர்களின் பேச்சு சிதைக்கக் கூடும், திரும்பப் பெறுங்கள் உங்கள் சொற்களை, தீண்டாமை பற்றி எல்லாம் பேசுவதற்கு முன்னாள் அடிப்படை வரலாற்றைப் படியுங்கள் ஐயா இல.கணேசன் அவர்களே.

2 thoughts on “‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே!

  1. ராசராசன் காலத்தில்தான் இவையெல்லாம் நடந்தது என்பதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? நான் சொல்கிறேன் களப்பிரர் காலத்தில்தான் தமிழகம் இருண்டது என்று ஏற்றுகொள்வீர்களா? உங்க கண்ணுக்கு இப்ப ராசராசன் தெரிவதால் சும்மா அடிச்சு விடாதீங்க.பெரிய கோவிலை கட்டியது யார் என்றே ஒரு சில நூற்றண்டுகளுக்கு முன்னர்தான் தெரிந்தது.கண்ணு முன்னாடி நிக்கிற கோயிலுக்கே ஆதாரம் இல்ல ஆனா ஆட்சியில நடந்ததெல்லாம் பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி எழுத வேண்டியது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.