“நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

வன்னி அரசு

கடந்த 13.3.16 அன்று உடுமலைப்பேட்டையில் சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் – கவுசல்யா இணையர் சாதிவெறி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் சங்கர் கொல்லப்பட்டான், தங்கை கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது உடல் நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிக்காட்டுதலின்பேரில் தங்கை கவுசல்யாவை சந்திக்க நாங்கள் எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக மார்ச் 23 காலை 11 மணிக்கு எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர் சுசி கலையரசன், மாவட்ட செயலாளர் இலக்கியன், தோழர்கள் வள்ளியூர் வீரக்குமார், வேதா மதன், விடுதலைச்செல்வன், தம்பி ஜோஷ்வா ஐசக் உள்ளிட்டவர்கள் சென்றோம். கோவை அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யாவை சந்திப்பதற்கு இரண்டு பேரை மட்டும் அனுமதிப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நமது வேண்டுகோளை ஏற்று மூன்று பேரை அனுமதித்தனர். நான், அய்யா தகடூர் தமிழ்ச்செல்வன் மற்றும் அண்ணன் வள்ளியூர் வீரக்குமார் ஆகியோர் உள்ளே சென்றபோது 10க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் மற்றும் உளவுத்துறை போலீசின் பாதுகாப்பு வட்டத்திற்குள், கட்டிலின் மேலே பச்சை நிற விரிப்பில் ஒரு புத்த துறவியைப் போல அமர்ந்திருந்தார் தங்கை கவுசல்யா. தலையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயத்தினால் அவரின் தலைமுடியை நீக்கியிருக்கிறார்கள். இரண்டு கைகளிலும், காலிலும் காயங்களுக்கு கட்டு போடப்பட்டு இருக்கிறது. அதற்கு முன்தினம் தான் குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பில் பங்கெடுத்துவிட்டு உடனே எங்களுடன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.

தலைவர் எழுச்சித்தமிழர் அவர் சார்பாக எங்களை அனுப்பி வைத்தார் என்று அறிமுகம் செய்துக் கொண்டு, ‘எதற்கும் பயப்படவேண்டாம். இனி தான் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும். நாங்கள் எல்லோரும் உன் கூடவே இருக்கிறோம்’ என்பதாக தலைவர் சொல்லியனுப்பிய செய்தியை பகிர்ந்துக்கொண்டு, மருத்துவ செலவிற்காக கட்சியின் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினோம். குறிப்பிட்ட வங்கி கணக்கு ஏதும் இல்லாததால் காசோலையில் அவரையே பெயரை நிரப்பச் சொன்னோம். ‘S.Kausalya’ (சங்கர். கவுசல்யா) என்று பொறுமையாக ஆங்கிலத்தில் எழுதினாள்.

அவர் கட்டிலுக்கு பக்கத்தில் இருக்கையில் நாங்கள் அமர்ந்து பேசத் தொடங்கியபோது நடந்த சம்பவங்களை எங்களிடம் விளக்கினார்.

“சம்பவம் நடைபெற்ற அன்று அதற்கடுத்த நாள் கல்லூரி ஆண்டு விழாவிற்காக புது சட்டை ஒன்று எடுக்க வேண்டும் என்று சங்கர் விரும்பியதால். வீட்டிலிருந்த 1500 ரூபாய் எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றோம். 500 ரூபாய்க்கு ஒரு சட்டை மட்டும் எடுத்து விட்டு பஸ் ஸ்டாண்டு நோக்கி வந்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் ரோட்டோரத்தில் எங்களை வழிமறித்து தாக்கினார்கள். அவர்கள் சங்கரை வெட்டும் போது தடுக்க முயற்சி செய்த என்னையும் வெட்டினார்கள். அந்த கும்பலில் ஒருவனை நான் அதற்குமுன் எங்கள் வீட்டில் அப்பாவுடன் ஒரு போட்டோவில் பார்த்திருக்கிறேன். ஏற்கனவே அவர்கள் நான்கு கொலைகளை செய்தவர்கள். எல்லாம் நடக்கும் போது நான் சுயநினைவோடு தான் இருந்தேன்.

என் அப்பா ட்ராவல்ஸும் வட்டி தொழிலும் செய்து வருகிறார். இதற்கு முன்னும் எங்கள் மீது கொலை முயற்சி நடந்துள்ளது. நாங்கள் திருமணம் செய்த நாளிலிருந்து தொடர்ச்சியாக எங்களுக்கு மிரட்டல் வந்துக் கொண்டிருந்தது. சங்கரின் வீட்டிற்கு நேரில் வந்தே மிரட்டினார்கள். எத்தனை லட்சம் வேண்டும்? என்று என் அப்பா கேட்டதற்கு, ‘எனக்கு காசு முக்கியமில்லை. கவுசல்யாவுடன் தான் நான் வாழ்வேன்’ என உறுதியாக சொன்னார் என் கணவர் சங்கர். பிரச்சனை பெரிதாகி போலீஸ் ஸ்டேஷன் சென்றோம். அங்கே நான் சங்கருடன் தான் செல்வேன் என்று சொல்லி, நான் அணிந்திருந்த ட்ரெஸ், நகை, செருப்பு என என் வீட்டில் வாங்கிக் கொடுத்த எல்லாவற்றையும் கழட்டி கொடுத்துவிட்டு என் வீட்டுக்காரர் கொண்டு வந்திருந்த சுடிதாரை போட்டுக் கொண்டு தான் ஸ்டேஷனை விட்டு கிளம்பினோம். அப்போது எனக்கும் என் வீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும், இனி அவர்கள் எதிலும் தலையிடமாட்டார்கள் என்றும் போலீஸ் எழுதி வாங்கிக் கொண்டார்கள்.

அடுத்த மாதமே என் அம்மா வழி தாத்தா என்னை பார்க்க சங்கர் வீட்டிற்கு வந்தார். மிகவும் அன்பாக பேசினார். எனக்காக புது ஸ்கூட்டி வாங்கி வந்திருப்பதாக சொல்லி என்னிடம் வண்டியை தந்தார். கிளம்பும் முன் தன்னை பஸ் ஸ்டேண்டில் வந்து விடும்படி சொல்லியதால் அதே ஸ்கூட்டியில் நான் அழைத்துப் போனேன். போகும் வழியிலேயே என்னை காரில் கடத்திக் கொண்டு போனார்கள். திண்டுக்கலுக்கு கூட்டிச் சென்று ஒவ்வொரு நாளும் வேறு வேறு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்கள். கேரள மந்திரவாதிகளை அழைத்து வந்து மந்திரம் செய்து தாயத்து கட்டினார்கள். என் மனதை மாற்றி வேறொரு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தார்கள். கீழ்சாதி பையன் கூட ஓடி போய் நம்ம குடும்ப மானத்தையே கேவலப்படுத்திட்டியே என்று சொல்லி என் தலைமுடியை வெட்டினார்கள். நீங்கள் என்னை கொலையே செய்தாலும் எனக்கு பயமில்லை. நான் சங்கரோடு தான் வாழ்வேன் என்று உறுதியாக நின்றதால் ஒரு வார சித்ரவதைக்கு பின் சங்கருடன் மீண்டும் சேர்ந்தேன்” என்று சொல்லி முடித்தாள்.

உனக்கும் சங்கருக்கும் எப்படிமா அறிமுகம் ஏற்பட்டது? என்று தங்கை கவுசல்யாவுடம் நான் கேட்டேன்.

“நான் பழனி. சங்கர் மடத்துக்குளம். தினமும் கல்லூரிக்கு ஒரே பேருந்தில் தான் பயணம் செய்வோம். அப்போது தான் எங்களிடையே நட்பு ஏற்பட்டது. ஒரு முறை நாங்கள் இருவரும் பேருந்தில் செல்லும்போது பேசிக் கொண்டிருப்பதை அந்த பேருந்தின் கன்டெக்டர் போட்டோ எடுத்து என் அம்மாவிடம் காண்பித்துவிட்டார். அந்த கீழ் சாதி பையன்கூட எல்லாம் உனக்கு எதுக்கு பழக்கம் என்று என் வீட்டில் கண்டித்து, தாய்மாமன் மூலமாக திருமணம் செய்து வைக்க முயற்சி எடுத்தார்கள். இதை சங்கரிடம் சொன்னேன். அவன் நாம் பொறுமையாக இருந்து படிப்பை முடித்துவிட்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றான் ஆனால் அதற்குள் எங்கள் வீட்டில் எதிர்ப்பும் அதிகரித்து திருமண வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்ததால் பழனி கோவிலில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டோம். தொடக்கத்திலிருந்து எங்கள் வீட்டிலிருந்து மிரட்டல்கள் வந்தாலும் கொஞ்ச காலத்தில் எல்லாம் சரியாக போய்விடும் என்று நம்பினேன். ஆனால் இப்படி செய்துவிட்டார்கள். என்னுடைய அப்பா, அம்மா, தாத்தா, தாய் மாமன் என எல்லோருக்கும் என் கணவரின் கொலையில் தொடர்பிருக்கிறது. அவர்கள் எல்லோருக்கும் நிச்சயம் தண்டனை வாங்கித் தருவேன்” என்று உறுதியாகச் சொன்னாள்.

அடுத்த என்ன செய்ய தீர்மானித்திருக்கிறாய்? என்று அண்ணன் வள்ளியூர் வீரக்குமார் கேட்டார். அதற்கு ‘மருத்துவமனையிலிருந்து திரும்பவும் நான் சங்கர் வீட்டிற்கு தான் போக விரும்புகிறேன். சங்கரின் தம்பி இன்னும் படித்துக் கொண்டிருக்கிறான். அவர் அப்பா மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர்களை இனி நான் தான் பார்த்துக் கொள்ளப் போகிறேன். அதற்காக வேலைக்கு செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். திரும்பவும் எப்படி படிப்பது என்றும் தெரியவில்லை’ என்றாள். ‘அம்மா நீ எதற்கும் கவலைப்படாதே. நீ உன் படிப்பை தான் தொடர வேண்டும். உன் பொறியியல் படிப்பு தொடங்கி வேலை கிடைக்கும் வரை அதற்கான எல்லா பொறுப்பையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்ளும். வேறு கல்லூரிக்கு மாறுதல் வாங்குவதற்கும் அல்லது வேறொரு ஊரில் தங்கி படிப்பதற்கும், உன் பாதுகாப்பிற்கும் எல்லாவிதத்திலும் நாங்கள் உடன் இருந்து பார்த்துக் கொள்கிறோம்’ என்று நாம் கூறியதை ஏற்றுக்கொண்டு படிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தாள்.

தொடர்ந்து பேசியவள்,“நாங்கள் என்ன தவறு செய்தோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா? நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லையே? எதற்கு சாதியை பிடித்துக் கொண்டு தொங்குறாங்க? சாதிவெறிக்காக சங்கர் போல இனி யாரும் கொல்லப்பட கூடாது. அதை நாம் அனுமதிக்க கூடாது. சாதிவெறிக்கெதிரான சாட்சியாக நான் இருப்பேன்’ என்று தழுதழுத்த குரலில் அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் கண்ணீரோடு அமைதியானாள். தங்கை கவுசல்யாவின் கேள்விகளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் நாங்கள் அமைதியாக நின்றோம். பின்னர் அவரை சமாதானப்படுத்தி, எங்கள் தொடர்பு எண்களை கொடுத்துவிட்டு விடைபெற்றோம். மருத்துவமனைக்கு வெளியே சங்கரின் தந்தை மற்றும் தம்பியை சந்தித்தோம். அவர்கள் கவுசல்யாவை பார்க்க வந்திருந்தார்கள்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 82 சாதி ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 80% பேர் தலித் ஆண்கள் எனவும் எவிடன்ஸ் அமைப்பின் ஆய்வு சொல்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் கலைஞர் தொடங்கி மற்ற எல்லா தளங்களிலும் முற்போக்காளர்கள் என பலரும் இந்த சாதிவெறி படுகொலைகளை துணிந்து கண்டிக்காமல் அந்த கொலைகளுக்கு மவுன சாட்சிகளாக, ஆதரவாளர்களாக இருப்பதால் தான் திவ்யா இளவரசன், கவுசல்யா சங்கர் போன்ற தங்கைகள் ரத்த சாட்சிகளாக மாறியுள்ளனர். இந்த படுகொலைகளுக்கு அவர்களின் மவுனங்களும் ஒரு உந்துசக்தியாய் சாதிவெறியற்களுக்கு அமைந்துள்ளது மறுக்கமுடியாது.

எங்கள் வீட்டு மருமகள் தங்கை கவுசல்யாவின் துணிச்சலும், தன் காதல் கணவரின் மிகக் கோரமான கொலையை கண் முன்னே பார்த்தபின், தானும் தாக்கபட்ட பின்னரும் சாதிவெறியை எதிர்க்கும் தீர்க்கமான நெஞ்சுறுதி நம்மை பிரம்மிக்க வைக்கிறது. மானுடத்தின் அடிப்படையான காதல் எப்படி இங்கு சாதித் தடைகளை உடைக்கும், அதற்கான பலியையும் கேட்கும் என்பதற்கு தங்கை கவுசல்யா சங்கரின் காதல் நம் முன் பாடமாய் நிற்கிறது. ஆனால் இனி அவர் முன்னெடுக்க போகும் வாழ்க்கை தான் சாதி ஒழிப்பு களத்தில் ரத்த சாட்சியாய் விளங்கும்.

சிந்திய ரத்தம் என்றும் வீண் போகாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.