திமுக-தேமுதிக கூட்டணி அமையாமல் தடுத்தது யார்?

(தேமுதிகவுடன் மக்கள் நல கூட்டணி இணைவதற்கு முன்னால் அச்சான நம்ம அடையாளம்  கவர் ஸ்டோரி இது. விஜயகாந்த் மட்டுமல்ல ஏனைய கட்சி தலைவர்களும் திமுக பக்கம் வரவிடாமல் தடுத்தது யார் என்பதை விவரிக்கிறது).

திமுகவும் தேமுதிகவும் சேர்ந்தால் அதிமுகவை வீழ்த்துவது உறுதி என தெரிந்தும், அந்த கூட்டணி அமையாமல் போனது ஏன்?

ஆட்சிக்கும் சேர்த்து கூட்டணி என விஜயகாந்த் விதிக்கும் நிபந்தனை முதல் காரணம். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கிடைத்த அனுபவம் அவரை அப்படி பேச வைக்கிறது.

கருணாநிதிக்கு அடிப்படையில் இந்த யோசனைக்கு ஆட்சேபம் இல்லை. “ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்கு பெரிய யுத்தம் நடத்தியாக வேண்டும். அதில் நமக்கு உதவ யாரெல்லாம் வருகிறார்களோ அத்தனை பேரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். போரில் ஒரு துரும்பும் உதவும் என்பதால் எவரையும் அலட்சியம் செய்யலாகாது. எதிரியையும் குறைத்து மதிப்பிடலாகாது” என்பது அவரது நிலைப்பாடு.

எனவேதான், பழம் நழுவி பாலில் விழ இருக்கிறது என்று சொல்லி அடுத்த இரு நாட்களிலேயே விஜயகாந்த் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு மூக்குடைத்த பின்னரும், வறட்டு கவுரவம் பாராமல் மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார். திமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தாமல் தனது மூச்சு நிற்கக்கூடாது என அவர் உறுதியாக இருக்கிறார்.

ஆனால் ஸ்டாலின் அத்தகைய மன நிலையில் இல்லை என்பதுதான் வெளிப்படையாக பேசப்படாத உண்மை.

கூட்டணி ஆட்சி என்பதை ஸ்டாலின் ஏற்கவே இல்லை. அட, கலைஞர் மீண்டும் முதல்வர் என்பதைக்கூட அவரால் ஜீரணிக்க இயலவில்லை என்கிறார், கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர்.

“தலைவர் உடல் நலம் குன்றிய சூழலில், தளபதி மிகவும் சிரமப்பட்டு கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். அழகிரி தொடங்கி தமிழரசு வரையில் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வளர்த்து வைத்திருந்த கோஷ்டிகளை காலி செய்து, போட்டி அதிகார மையங்களை தகர்த்து, மாவட்ட செயலாளர் என்ற பெயரால் ஆதிக்கம் செலுத்திய குறுநில மன்னர்களை மண்டியிட வைத்து, கட்சி நிர்வாகத்தை கைப்பற்றியிருக்கிறார். அவரே முதல்வராகும் பட்சத்தில் அரசு நிர்வாகத்தில் தலையீடுகள் இல்லாமல் செயல்பட இது உதவும். மாறாக மீண்டும் கலைஞர் முதல்வரானால் தளபதியின் பிடி தளரவும், அதிகார மையங்கள் மீண்டும் தலை தூக்கவும் ஏதுவாகும். பத்தோடு பதினொன்றாக ஆவதில் தளபதிக்கு விருப்பமில்லை” என்று விளக்கினார் அந்த பிரமுகர்.

மற்றொரு முக்கிய நிர்வாகி இன்னும் ஓப்பனாக பேசினார்.

“தலைவர் மறுபடி முதல்வராக வந்துவிட்டால் அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் ஆதிக்கம் திரும்பவும் தலைதூக்கும். அதை தவிர்க்கும் உறுதி தலைவருக்கு கிடையாது. அவர் பாசத்துக்கு அடிமை. இந்த நிலையில் கூட்டணி ஆட்சிக்கும் ஒப்புக் கொண்டால், முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு தேமுதிக, காங்கிரஸ் தலைவர்களுக்கு அடுத்தபடியாகத்தான் திமுககாரனுக்கு கிடைக்கும். அது கட்சியையும் ஆட்சியையும் அழித்துவிடும் என்று ஸ்டாலின் நம்புகிறார்” என்று விஜயகாந்த் வருகையை ஸ்டாலின் எதிர்ப்பதற்கான காரணத்தை விவரித்தார் அவர்.

நமக்கு நாமே திட்டத்தில் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பதாக ஸ்டாலின் கருதுகிறார்.

”அட்லீஸ்ட் நமக்கு 5 சதவீதம் வாக்குகள் அதிகமாகி இருக்கு. இதுவே நாம் ஆட்சியை பிடிக்க போதுமானது. காங்கிரஸ் நம்மோடு வந்திருப்பதுகூட போனஸ் மாதிரிதான். இதற்கு மேல் இங்கே யாருக்கும் இடம் கொடுக்க தேவையில்லை. விஜயகாந்தே வரவில்லை என்று சொன்னபிறகு நாம் அழைப்பது வேலியில் போகிற ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்டுக் கொள்வது மாதிரி” என்று தற்போது தனக்கு நெருக்கமாக இருக்கும் இளம் ஆலோசகர்களிடம் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது நல்லது என மாவட்ட செயலாளர்கள் யாரும் வெளிப்படையாக கருத்து கூறுவதைக்கூட ஸ்டாலின் விரும்பவில்லை. ஞாயிறன்று நடந்த செயலாளர்கள் கூட்டத்தின் தொடக்கத்திலேயே, “கூட்டணி விஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2 தொகுதியாவது ஜெயிக்க நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை மட்டும் இங்கே சொல்லுங்கள்” என்று கறாராக பேசியுள்ளார்.

பழைய சம்பவங்களையும் நம்மிடம் நினைவுகூர்ந்தார், அந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒரு முக்கிய நிர்வாகி.

”திமுக ஆட்சியில் இருக்கும் போதே, அதாவது 2008ம் ஆண்டிலேயே முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்று தலைவருக்கு பிரஷர் கொடுத்தார் தளபதி. கடுப்பான தலைவர் தனது சீனியர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை அழைத்து விஷயத்தை சொல்லி, பொதுக்குழு செயற்குழுவில் கிளப்ப சொன்னார். இதனால் அப்போது ஸ்டாலின் அடங்கிப்போக நேரிட்டது. அந்த கோபத்தை இன்று வரையில் வீரபாண்டியார் குடும்பத்தினர் மீது காட்டி வருகிறார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் செயலாளர் நியமிக்கப்பட்டாலும், வீரபாண்டி ராஜா மட்டும் இன்னும் பொறுப்பாளராகவே இருக்கிறார்” என்றார் அவர்.
இன்றுள்ள நிலைமை வேறுதானே என்று கேட்டபோது, “ஆமாம். இப்போது கட்சி நிர்வாகிகள் அனைவரும் தளபதி பின்னால் நிற்கிறார்கள். தொண்டர்கள் எல்லாம் தலைவர் பின்னால் நிற்கிறார்கள்” என்று சொன்னார் அவர்.

விஜயகாந்த் மட்டுமல்ல. வைகோ, திருமாவளவன், சரத்குமார் ஆகியோரும் திமுக கூட்டணிக்கு வருவதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என்கிறார்கள்.

”ஓராண்டு முன்பு தமிழரசு மகன் அறிவுநிதி திருமணத்தில் வைகோ கலந்து கொண்டார். அவரும் திமுக கூட்டணிதான் என்று முடிவு எடுத்த நிலையில், ‘வைகோ கூட்டணியில் இருந்தால், தேர்தலுக்கு பின் முதல்வராக வருவதற்கு தடையாக இருப்பார் என்ற எண்ணத்தில் அவரை அவமரியாதை செய்து அனுப்பிவிட்டார். திருமாவளவன், ‘கூட்டணி ஆட்சி’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு நடத்திய போது, வைகோ கலந்து கொள்ள மறுத்துவிட்டார். ஸ்டாலின் புறக்கணிப்பதை அறிந்த பின்னர்தான், மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இணைந்தார். அதுதான் மக்கள் நல கூட்டணியாக உருவாகியுள்ளது” என்ற அந்த நிர்வாகி, தொடர்ந்தார்.

”திருமாவளவன் இருக்கும் வரையில் திமுக கூட்டணிக்கு வரமாட்டேன் என்று துரைமுருகனிடம் ராமதாஸ் ஒருமுறை சொன்னார். அதை துரைமுருகன் ஸ்டாலின் காதில்போட, அதையே சாக்காக்கி தலைவரிடம் சொல்லி திருமாவளவனையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்’’ என்றார்.

இம்மாத தொடக்கத்தில்கூட திருமாவளவனுக்கும் ஸ்டாலினுக்கும் நெருக்கமான ஒருவர் ஸ்டாலினிடம், ‘நீங்கள் வெளிப்படையாக அழைப்பு விடுத்தால் திருமா வந்துவிடுவார்’ என்று சொல்ல, “அவர் வந்தால் வட மாவட்டங்களில் தலித் வாக்குகள் நமக்கு கிடைக்கும். ஆனால் மற்ற சமூகத்தினரின் வாக்குகளை இழக்க நேரிடுமே’என்று சொல்லி மறுத்து விட்டாராம்.

இதே போல அதிமுக அணியில் ஒதுக்கப்பட்ட சரத் குமாரும் முதலில் திமுக கூட்டணிக்காக தூது அனுப்பியுள்ளார். ”தென் மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் சரத்துக்கென சில ஆயிரம் ஓட்டுகளாவது இருக்கிறது. பெரிய பத்திரிகையின் சப்போர்ட் அவருக்கு இருக்கிரது. பிரசாரத்துக்கும் வசதி. அவரை சேர்த்துக் கொண்டால் அந்த சீமையில் மொத்த இடங்களையும் திமுக கூட்டணி அள்ளிவிடலாம்” என்று தூதுவர் சொன்னபோது, ”சரத்தெல்லாம் சந்தையில் விலை போகாத பொருள். பழைய ஞாபகத்தில் பேசாதீர்கள்” என்று சொல்லி விட்டாராம் ஸ்டாலின்.

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் இருக்கும்போது, விஜயகாந்துடன் பேச கலாநிதி மாறனை ஸ்டாலின் அனுப்பியதே அவரது நோக்கத்தை தெளிவாக காட்டுகிறது அல்லவா என கேட்டார் இன்னொரு திமுக பிரமுகர்.

“அரசியல்வாதிகள் கவனமாக வார்த்தையை கையாளுவார்கள். ஆனால் தொழிலதிபர்கள் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுவார்கள். மனைவியிடம்கூட சொல்லாமல் ஆழ்வார்பேட்டைக்கு வந்த விஜயகாந்த் ஏற்கனவே 50 சீட் என்று பேசப்பட்ட நிலையில், கூடுதலாக வாங்க நினைத்திருக்கிறார். ஆனால் கலாநிதி ’50க்கு மேல் ஒரு சீட் தரமுடியாது. அமைச்சரவையில் இடம் கிடையவே கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் சென்னைக்கு வெளியே ஏதாவது ஒரு மேயர் சீட் மட்டும்தான் தர முடியும்’ என்று கண்டிப்பாக சொல்லியுள்ளார். அப்போதும் விஜயகாந்த், ‘போன தடவை காங்கிரசுக்கு 63 சீட் கொடுத்தீங்க. அதைவிட இங்க நாங்கதான் பெரிய கட்சி. எங்க ஓட்டு சதவீதமும் ஜாஸ்தி. அதனால அட்லீஸ்ட் 68 கொடுங்க. உங்களுக்கு மெஜாரிடி கிடைச்சுட்டா எங்களுக்கு அமைச்சரவைல பங்கு தர வேண்டாம். ஆனா உள்ளாட்சி தேர்தல்ல 30 சதவீதம் கொடுத்துருங்க. தாத்தாகிட்டயோ மாமாகிட்டயோ கேட்டு சொல்லுங்க’’ என பொறுமையாக சொல்ல, ’அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. நான் சொன்னதுதான் ஃபைனல்’என்று கலாநிதி சொல்ல, அதோடு பேச்சுவார்த்தை முறிந்தது’’ என்றார்.

இந்த தகவலை தேமுதிக தரப்பில் ஒரு நிர்வாகி உறுதி செய்தார்.

“ஸ்டாலின் சொல்லாமல் கலாநிதி அப்படி பேசியிருக்க முடியாது. அதனால் அவரை அனுப்பியதே கேப்டனை சீண்டி விடத்தானோ என்னவோ” என்றார் அவர்

ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த ஒருவரிடம் பேசியபோது, ”ஒண்ணு தெரிஞ்சுக்குங்க. எங்க தளபதிக்கு பதவி ஆசையே இல்லை. ஆட்சியை பிடிக்கணும் அப்படீங்கிற எண்ணம் சுத்தமா கிடையாது. இந்த தேர்தல்ல தோத்தா என்ன ஆயிட போகுது? செயற்குழு பொதுக்குழுவை கூட்டி கட்சி தலைவரா ஆக்கிடுவாங்க. கட்சிய ஒழுங்கா நடத்தினா 2021ல் கூட்டணி இல்லாமலே முதல்வர் வேட்பாளரா தேர்தலை சந்திக்கலாம். இங்க தலைவருக்கு வயசான மாதிரி அங்க அம்மாவுக்கு நிறைய உடல் கோளாறுகள். அதனால அவங்க மறுபடி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றங்கள், குழப்பங்கள் வரலாம். அதுவரைக்கும் கட்சில குடும்பத்தினர் யாரையும் பவர் சென்டரா வரவிடாம பாத்துகிட்டா போதும்ல..” என்றார்.

தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிவிட்ட ஒரு முன்னாள் திமுக பிரமுகர் சொன்ன கருத்து வித்தியாசமாக இருந்தது.

”விட்டலாச்சாரியா படங்களில் ராணியின் உயிர் ஏழு கடல்தாண்டி ஏழு மலை தாண்டி காட்டுக்குள் ஒரு வண்டின் வயிற்றில் இருக்கிறது என்பார்கள். அது போல ஸ்டாலின் அரசியல் திமுகவின் அறக்கட்டளை சொத்துகளை மையமாக வைத்தே நடக்கிறது. ஆட்சி அதிகாரம் இல்லை என்றாலும், திக வீரமணி போல கட்சியை சமூக இயக்கமாக நடத்திச் செல்ல அவர் தயாராகி விட்டார்” என்று ஒரு போடு போட்டார்.

கூட்டணி விவகாரத்தில் ஜெயிக்கப் போவது கருணாநிதியா? ஸ்டாலினா?

– அனிருத்
நன்றி: நம்ம அடையாளம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.