ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
அன்பார்ந்த சந்திரசேகர் ராவ்காரு,
தங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள இன்று (புதன்) முழுவதும் முயற்சி செய்தேன். பல செய்திகள் அனுப்பப்பட்டும், உங்கள் ஊழியர்கள் அவற்றைப் பெற்ற போதிலும் பதிலேதும் இல்லை. உங்களைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இக்கடிதத்தை மிகவும் மனவேதனையுடனும் கோபத்துடனும் எழுதுகிறேன். குறிப்பாக, தியாகி பகத்சிங் நினைவு தினத்தன்று இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுவதில் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகிறேன். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக நேற்றைய செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் காவல்துறையினர் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக மாணவிகள் மீது காவல்துறையினர் இழி வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்குதலை நடத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குழாய்களில் தண்ணீர் வராமல் அடைத்து வைத்திருக்கின்றனர்; மாணவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு வைஃபி இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன, விடுதி மெஸ்ஸில் உணவு பரிமாறப்படாமல் மாணவர்கள் பட்டினி போடப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மாணவர்களே உணவைத் தயார் செய்கையில் அவர்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் தொடுத்துள்ளனர். விடுதிகளை மூடிவிடுமாறு துணை வேந்தர் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.நாட்டின் உன்னதமான பல்கலைக் கழகங்களில் ஒன்றாகத் திகழும் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் மாணவர் சமுதாயத்தினர் மீது தெலுங்கானா காவல்துறையினர் மேற்கொண்டுள்ள கொடூரமானத் தாக்குதல் கண்டு நாட்டிலுள்ள எங்களைப் போன்ற பெரும்பாலானோர் அதிர்ச்சியடைந்து திடுக்கிட்டுள்ளோம். துணை வேந்தரின் தகாத நடவடிக்கைகள்தான் ரோஹித் வெமுலா தற்கொலைக்குத் தள்ளப்பட்டதற்கும், அதனைத் தொடர்ந்து அவர் விடுப்பில் செல்வதற்கும் காரணங்களாகும். இத்தகு சூழலில் துணை வேந்தருக்கு எதிராக செயல்படுவதற்குப் பதிலாக தெலுங்கானா காவல்துறையினர் மாணவர்கள் மீது தங்கள் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டியுள்ளனர்.
துணைவேந்தர் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியதற்கு எதிராக மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கு தொடரப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். மாநில அரசின் ஒப்புதலுடன் காவல்துறையினர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைதான் துணைவேந்தர் மீளவும் திரும்பி வருவதற்கு வசதி செய்து தந்திருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. பல்கலைக் கழக அகடமிக் கவுன்சில் கூட்டம் மார்ச் 24 (வியாழன்) அன்று பொறுப்பு துணை வேந்தரின் தலைமையில் நடைபெற இருந்தது என்றும், துணை வேந்தர் திடீர் என்று திரும்ப வந்து அதனை ரத்துசெய்துவிட்டார் என்றும் எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. மேற்படி அகடமிக் கவுன்சில் கூட்டத்தில், வளாகத்தில் பாகுபாடு எதிர்ப்புக் குழு அமைக்கப்படுவது தொடர்பாகவும், பல்கலைக் கழகத்தின் அனைத்துக் குழுக்களிலும் போதுமான அளவிற்கு தலித்/பழங்குடியினர் பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்திடுவது தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி உதவித்தொகையை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட இருந்தது.
இந்த நிலையில் துணை வேந்தர் திரும்பிவந்ததே தனக்குத் தெரியாது என்று பொறுப்புத் துணைவேந்தர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் கணிசமான அளவிற்கு வாழும் தலித்/பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னுடைய தலைமையின்கீழ் தெலுங்கானா அரசாங்கம் விளங்கும் என்று உங்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் அரசாங்கமும், நிர்வாகமும் துணை வேந்தரின் முடிவுகளுடன் நிச்சயமாக ஒத்துப்போக முடியாது. அப்படியிருந்தும் தெலுங்கானா போலீஸ், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராகக் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதலை நடத்தி இருக்கிறதே ஏன்? ரோஹித் வெமுலாவின் மரணத்தால் ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்து இன்னமும் மீளாத மாணவர்கள் மீது இத்தாக்குதல் நடந்திருக்கிறது. பல்கலைக் கழக சம்பவங்களுக்குக் காரணமான துணைவேந்தருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் திரும்பவும் வலியுறுத்துகிறேன்.
பல்கலைக் கழக மாணவர் சமுதாயத்தின்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உங்கள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது கடமையாகும். காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளான 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஊடகங்கள் வாயிலாகத் தெரியவருகிறது. அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட வேண்டும். துணை வேந்தருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு மத்திய பல்கலைக் கழகமாக இருப்பதால், அவரை நீக்குவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்திட வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.