ஹைதராபாத் பல்கலைக் கழக ஆய்வாளர் ரோஹித் வெமுலா கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். ரோஹித் உள்பட தலித் மாணவர்கள் ஐவரை பல்கலைக் கழகம் மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றியது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தொடர்ந்து கடிதங்கள் எழுதியதன் காரணமாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்கலை வேந்தருக்கு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான்குக்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதினார். இதன் பின்னணியில் பாஜக எம்பி தத்தாத்ரேயா இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. பல்கலை துணை வேந்தர் அப்பா ராவ், ஆய்வுக்கான ஊக்கத் தொகையும் நிறுத்தினார். இந்நிலையில் ரோஹித் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டார்.
ரோஹித் தற்கொலை விவகாரம், அனைத்து பல்கலைக் கழகங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்த நிலையில், பல்கலை வேந்தர் அப்பா ராவ் காலவரையற்ற விடுப்பில் சென்றார். அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பின், துணைவேந்தர் அப்பா ராவ், பணிக்குத் திரும்புவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பினார். அப்பா ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் தங்கள் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், அவர்களை குண்டுகட்டாக தூக்கி, கைது செய்தது போலீஸ்.