ஜவஹர்லால் நேரு பல்கலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், பிரிட்டிஷார் ஆட்சியில், பகத் சிங் தேச விரோத வழக்கில் சிறை சென்றார். அதேபோல, கன்னையா குமார் சிறை சென்றிருக்கிறார் என்று கூறினார்.
சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதீய ஜனதாவின் ஷாநவாஸ் ஹூசைன், “பகத் சிங் நாட்டின் சுதந்திரத்திற்காக பாரத் மாதா கி ஜே எனக்கூறி சிறை சென்றார் என்றும் பகத் சிங்குடன், கன்னையா குமாரை ஒப்பிடுவது , சுதந்திர போராட்ட வீரர் மற்றும் தேசபக்தர்களுக்கு அவமானம்” என்றும் கண்டனம் வெளியிட்டார்.
இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மனீஷ் திவாரி “’இன் குலாப் ஜிந்தாபாத்; இந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்று மட்டுமே , பகத் சிங் முழங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல், இந்தியாவின் பிரபல வரலாற்று நூலாசிரியர் ராமச்சந்திர குஹா, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், நாட்டின் மூத்த வரலாற்றாசிரியர் ஹபீபின் கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் ““’இன் குலாப் ஜிந்தாபாத்; ஏகாதிபத்தியம் ஒழிக” என்று மட்டுமே பகத் சிங், தனது மரணத்தருவாயில் முழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
பகத் சிங் தூக்கிலடப்ட்டு இன்றுடன் 85 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1931 -ம் ஆண்டு இதே நாளில், பகத் சிங், ராஜ குரு, சுக் தேவ் என்ற மூன்று இளைஞர்களும் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததற்காக தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நாளில், பாரதீய ஜனதா இது போன்ற சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது வரலாற்று ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகப்புப் படம் உதவி: பகத் சிங் ஆய்வாளர் சமன் லால். பகத் சிங்குடன் தூக்கிடப்பட்ட சுக்தேவ் மற்றும் ராஜ்குரு படத்தில் உள்ளனர்.