சட்டப் பேரவைத் தேர்தல் 2016: ஆம் ஒரு தலித் தலைவர் ராஜதந்திரி ஆனார்!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்கிற இந்தக் கோரிக்கை குறிப்பிட்ட சிலருக்குப் பதவி வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படுவதல்ல. மாறாக, விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவேயாகும். குறிப்பாக, தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மக்கள் அதிகார வலிமை பெற வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில்தான் கூட்டணி ஆட்சி முறையை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்.

அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் அது எதேச் சதிகாரமாக எளிய மக்களின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறது. எளிய மக்கள் அதிகார வலிமையற்றவர்களாகத் தொடர்ந்து நசுக்கப்படுகின்றனர். ஆகவே, எளியோரை வலியோராக மேம்படுத்துவதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமானதாகும்.

எனவே தான் ஒருகட்சி ஆட்சிமுறைக்கு மாறாக, பல்வேறு கட்சிகள் இடம் பெறும் கூட்டணி ஆட்சி முறையை தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தொடர்ந்து உரத்து முழங்கி வருகிறோம்”

2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது பிறந்த நாளை கூட்டணி ஆட்சிக்கான மாநாடாக நடத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன். அப்போது வெளியிட்ட அறிக்கை இது. இந்த மாநாடு தான் 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின் விதிகளை மாற்றப் போகிறது என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

கூட்டணி மாநாட்டுக்குப் பிறகு, மக்களை பாதித்த பிரச்சினைகளை முன்வைத்து இந்த மாநாட்டில் பங்கேற்ற இடதுசாரிகள், மதிமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து போராடின. இந்த இணைவை முதலில் தள்ளி நின்று பார்த்த திமுக, இவர்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தது. இது ஒருவகையில் கூட்டணி ஆட்சி அமைக்க திமுக கொடுத்த சமிஞ்கையாக மேற்கண்ட கட்சிகள் பார்த்தன. அடுத்தடுத்த கட்டங்களில் திமுக, கூட்டணி ஆட்சி கோரிக்கைகளை பொருட்படுத்த தயாராகவில்லை என உணர்ந்த மதிமுக, விசி, இடதுசாரி கட்சிகள் திமுகவில் இருந்து விலக ஆரம்பித்தன.

இந்த விலகல் ஆரம்பமானது மது ஒழிப்புப் போராளி சசி பெருமாள் மறைவுக்குப் பிறகுதான். மதிமுக, விசி, இடதுசாரிகள், மமக ஆகிய கட்சிகள் மதுவிலக்குப் போராட்டத்தை முன்னெடுத்த போது, திமுக அதில் இணைந்துகொள்வதில் ‘ஈகோ’ பார்த்தது. ஆனால், திமுகவும் அந்தப் பிரச்சினையை முன்னெடுக்கத் தயங்கியது. திமுகவினரின் வசம் இருந்த மதுபான ஆலைகள் பற்றிய அச்சமும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இன்னொரு பக்கம். மதிமுக,விசி, இடதுசாரிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு சொல்லிக்கொண்டு, அவர்களுடன் சேராமல் தேமுதிக தனித்து போராட்டங்களை முன்னெடுத்தது. திமுகவின் நிலைப்பாடு இந்த ஐந்து கட்சித் தலைவர்களை மக்கள் நலக் கூட்டியக்கம் தொடங்க வைத்தது.

இந்தக் கூட்டியக்கம், கூட்டணியாக மாறும் காலக்கட்டத்தில் மமக, ‘இவர்களுக்கு பூத் ஏஜெண்ட் போடக் கூடா ஆள் இல்லை, அவர்களோட இணைந்து தேர்தலில் போட்டிப் போடுவது சாத்தியமில்லை’ என்று விலகியது. மக்கள் நலக் கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் என்ற நான்கு கட்சிகளைக் கொண்ட தேர்தல் கூட்டணியாக மலர்ந்தது.

கூட்டணி மலர்ந்த நேரத்தில் கிட்டத்தட்ட அத்தனை அரசியல் நோக்கர்களும் பத்திரிகைகளும் இந்தக் கூட்டணி தேர்தல் வரை நீடிக்காது என்று அடித்துச் சொல்லின. ஆனால் இந்த நான்கு கட்சித் தலைவர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை ஒவ்வொரு முறையும் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொண்டே இருந்தன.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட அமர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அதிமுகவின் மூன்றாண்டு ஆட்சி காலத்தில் மக்களை பாதிக்கும் எந்தவித பிரச்சினையிலும் அதிமுகவுக்கு நிகரான தொண்டர்களை வைத்துள்ள திமுக வினையாற்றவில்லை. இடதுசாரிகள், காங்கிரஸ், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் விமர்சித்த அளவுக்குக் கூட திமுக, அதிமுகவை விமர்சிக்கவில்லை. தேர்தல் நேர நெருக்கத்தில், தேர்தல் வெற்றியை ஒட்டியே திமுக தன்னுடைய அதிமுக எதிர்ப்பை முன்னெடுத்தது. சமூக ஊடக காலக்கட்டத்தில் இது மக்களுக்கு சந்தர்ப்ப வாதமாகத்தான் தெரிந்தது.

திமுகவின் பலவீனங்களை கணித்த திருமாவளவன், கூட்டணி ஆட்சி என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இடதுசாரிகளும் வைகோவும் அந்த பிரச்சாரத்தில் இணைந்தது இயல்பாக நடந்தது. திருமாவளவனின் கணிப்புதான் தேமுதிகவை மக்கள் நலக் கூட்டணி பக்கம் ஈர்த்திருக்கிறது.

மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏன் திருமாவளவன் முன்னிறுத்தப் படவில்லை என்கிற கேள்வியை பலர் கேட்கிறார்கள். விடுதலை சிறுத்தைகளின் இழப்பை விரும்பாத திமுகவினர் கிளப்பி விடுவதுதான் இந்தக் கேள்விகள். நாங்கள் போடுகிறது ஐந்தோ, பத்தோ தொகுதிகளை வாங்கிக் கொண்டு எங்களுக்காக தேர்தல் வேலை செய்யவில்லையே என்கிற ஆதங்கம்தான் இதில் அதிகமாக ஒலிக்கிறது. கூட்டணியில் ஒரே ஒரு அமைச்சருக்கு இடம் அளிக்கிறோம் என்று சொல்வதைக் கூட விரும்பாத திமுகவின் அனுதாபிகள்தான் மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளவன் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  எத்தனை பொய்யான ‘நலன்’ என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.

ஆம், திருமாவளவன் சிந்தனையும் செயல்திறனும் தலைமைப் பண்பும் மிக்கவர்தான். அதே போன்றே இடதுசாரிகளிலும் மதிமுகவில் வைகோவும் இருக்கிறார்கள். ஆனால், இந்த நான்கு கட்சிகளும் கடந்த காலங்களில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து, தங்களுடைய பலத்தை வேர் வரை கூட்டிக்கொள்ளவில்லை என்பது யதார்த்தம். தலித் கட்சி என்ற வகையிலே திமுக, அதிமுக விடுதலை சிறுத்தைகளை அணுகியது. மக்கள் முன் உள்ள பிம்பமும் அதுவே. (இந்த பிம்பத்திலிருந்து விசி மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.) இந்த பிம்பத்தை உடைக்க சில காலம் தேவைப்படுகிறது. இந்தக் கட்சிகளை வெகுமக்களிடம் சேர்க்க வெகுமக்களின் ஆதரவான முகம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் விஜயகாந்த்.

இந்த கணிப்புகளில் திருமாவளவன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி கட்சித் தலைவர்கள் சரியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார். விஜயகாந்துடன் கூட்டணி ஒப்பந்தம் முடிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புகூட கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் சாத்தியமே இல்லை என்று மறுத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.  இந்தக் கூட்டணி வெல்லுமா, ஆட்சியைப் பிடிக்குமா என்பதெல்லாம் இருக்கட்டும். மக்கள் நலக் கூட்டணி ஒரு மாதத்தில் பிரிந்து நாலாப்பக்கமும் சிதறிவிடும் என கணித்த அத்தனை பேரின் கணிப்புகளை தவிடு பொடியாக்கியிருக்கிறது திருமாவளவனின் கணிப்பு. அதிமுக, திமுக கட்சிகளே கூட்டணிகளைத் தீர்மானித்த வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. அதன் முழு காரணகர்த்தா ஒரு தலித் தலைவர், அவர் திருமாவளவன்!

2 thoughts on “சட்டப் பேரவைத் தேர்தல் 2016: ஆம் ஒரு தலித் தலைவர் ராஜதந்திரி ஆனார்!

  1. மிக அருமையாக, எதார்த்தமான பதிவு ….மிக்க நன்றி ….One thought on “சட்டப் பேரவைத் தேர்தல் 2016: ஆம் ஒரு தலித் தலைவர் ராஜதந்திரி ஆனார்!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.