(பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு தூக்கிலிடப்பட்டதைப்பற்றி பாபாசாகேப் மராத்தி இதழான ஜனதாவில் எழுதியது
ஜனதா 13 ஏப்ரல், 1931)
பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலப்பட்டுவிட்டார்கள். சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேய காவல்துறை அதிகாரியையும், சர்மன் சிங் என்னும் சீக்கிய சிப்பாயையும் கொன்றதாக அவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், பனாரஸ் காவல்துறை கண்காணிப்பாலரை கொலை செய்ய முயற்சித்தது, அசெம்ப்ளியில் குண்டு வீசியது, மௌலிமியா கிராமத்தில் ஒரு வீட்டை கொள்ளையடித்தது உட்பட மூன்று, நான்கு குற்றச்சாட்டுகளும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் குண்டு வீசிய குற்றத்தை பகத் சிங் தாமாகவே ஒப்புக் கொண்டுவிட்டார். இந்த குற்றத்திற்கு அவரோடு சேர்த்து பட்டுகேஷ்வர் தத்துக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. சாண்டர்ஸ் கொலையை பொறுத்தமட்டில் ஜெய்கோபால் என்னும் பகத் சிங்கின் தோழன், பகத் சிங் மற்றும் தோழர்கள் இணைந்து அந்த கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டுவிட்டார். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசானது பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரில் எவரும் இந்த வழக்கில் ஈடுபடவேயில்லை. மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்து, ஒருமித்த கருத்தில் தூக்கு தண்டனையை விதித்தது.
பேரரசுக்கும், வைஸ்ராய்க்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்றும், தேவைப்பட்டால் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் படி தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் என பகத் சிங்கின் தந்தை வேண்டுகோள் விடுத்தார். முக்கியமான தலைவர்கள் பலரும் அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்தனர்.
பகத் சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட இந்த தூக்கு தண்டனை காந்திக்கும், இர்வினுக்கும் நடந்த ஒப்பந்தத்தில் விவாதத்திற்கு வந்திருக்க வேண்டும். லார்டு இர்வின் இது தொடர்பாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்ற போதிலும், இடைக்காலத்தில் காந்தியின் உரை, இர்வின் தன் வரம்புக்குட்பட்டு மூன்று இளைஞர்களை காப்பாற்ற தீவிர முயற்சி எடுப்பார் என்று நம்பிக்கை தருவதாக இருந்தது. ஆனால், இந்த ஊகங்களும், எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் வீணாய் போயின. லாகூர் மத்திய சிறையில் 23 மார்ச், 1931ல் மாலை 7 மணிக்கு தூக்கிலப்பட்டு கொலை செய்யப்பட்டனர். தங்களை விடுவிக்க வேண்டும் என்று எவரொருவரும் கெஞ்சவில்லை.
ஏற்கனவே வெளியிடப்பட்டதை போல, தூக்கிலிட்டு கொல்வதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது கடைசி வார்த்தை நிறைவேற்றப்படவில்லை, தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருந்தனர். துப்பாக்கி குண்டுகளால் கொல்லப்பட்டிருந்தால், நீதிமன்றத்தில் தீர்ப்பை மீறியதாய் ஆகியிருக்கும். ஆகையால், நீதிதேவதையின் கட்டளையில் அச்சுபிசகாமல் அப்படியே நிறைவேற்றிவிட்டனர்.
யாருக்காக இந்த பலி?
நீதிதேவதையின் சொல்லுக்கு தரப்பட்ட மதிப்பாலும், பக்தியாலும் மக்களிடம் மதிப்பு கூடி, இந்த கொலையை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று அரசாங்கம் கருதுமேயானால் அது முற்றிலும் பிழையான புரிதலாகவே இருக்கும். இந்த பலிகளின் மூலம் ஆங்கிலேய நீதிபரிபாலன முறையின் பரிசுத்தத்தை காப்பதுதான் நோக்கமாக இருந்தது என்று மக்கள் கண்டிப்பாக நம்பப் போவதில்லை. ஆங்கிலேய அரசே தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்ள முடியாது எனும் போது, நீதி தேவதையின் மாண்பை எந்த முகமூடியின் மூலமும் காக்க முடியாது. இங்கிலாந்தில் மக்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் அச்சம் காரணமாகத்தான் இந்த பலிகள் நிகழ்ந்தன என்பது அரசுக்கும் தெரியும், உலகத்துக்கும் தெரியும். எவ்வித நிபந்தனையும் இல்லாமல், காந்தி போன்ற அரசியல் கைதியை விடுதலை செய்ததும், அவரோடு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டதும் ஆங்கிலேய பேரரசின் நன்மதிப்புக்கு குந்தகம் விளைவித்துவிட்டதாக கருதினர். நடப்பில் இருக்கும் தொழிலாளர் கட்சியின் கேபினட்டும், அதன் கண்ணசைவுக்கெல்லாம் ஆடிய வைஸ்ராயும்தான் இந்த அவமானத்திற்கு காரணம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் சில பிற்போக்கு தலைவர்கள் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.
இது போன்ற சூழலில், ஆங்கிலேய அதிகாரியை கொலை செய்த அரசியல் புரட்சிக்காரர்களுக்கு இரக்கம் காட்டுவதென்பது, எதிர்கட்சியினர் பற்ற வைத்துள்ள தீப்பந்தத்திற்கு எண்ணெய் வார்ப்பது போல ஆகிவிடும் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. தொழிலாளர் கட்சியின் நிலை என்பது ஏற்கனவே நிலையற்ற தன்மையில் இருந்தது. இதுபோன்ற சூழலில், தொழிலாளர் கட்சியின் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்டினால், ஆட்சிக்கு எதிராக மக்களின் கருத்தை மாற்றுவது அவர்களுக்கு எளிதாகிவிடும். இந்த தர்மசங்கடமான நிலையை தவிர்க்கவும், கன்சர்வேட்டிவ் கட்சியினரின் வாயை அடைப்பதற்காகவும் இந்த பலி கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த தூக்கு என்பதற்கு நீதியை காப்பதற்காகவெல்லாம் இல்லை. மாறாக, மக்களின் பொது கருத்தை திருப்திப்படுத்தத்தான் இந்த முடிவு.
இர்வினுடைய சொந்த முடிவுக்கு வாய்ப்பு இருந்திருக்குமெனில் தூக்கு தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக மாற்றியிருக்க முடியும். இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியும் அவரின் அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும். காந்தி-இர்வின் ஒப்பந்தத்திற்கு மக்கள் இடையே கூடுதல் ஆதரவு பெற அது உதவியிருக்கக் கூடும். இந்தியாவை விட்டு வெளியேறும் தருணத்தில் அந்த நற்பெயரை ஈட்டியிருக்கவே அவர் உறுதியாக விரும்பியிருப்பார். ஆனால், இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியாலும், சாதிய கண்ணோட்டத்தோடு இருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தாலும் அவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பார். ஆகையால், இங்குள்ள மக்களின் கருத்தை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸின் கராச்சி மாநாட்டிற்கு 2லிருந்து 4 நாட்களுக்கு முன்னால், பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் இர்வினின் அரசாங்கம் தூக்கு மேடையிலேற்றிவிட்டது. பகத் சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலப்பட்டதும், அதன் கால நேரமும், காந்தி-இர்வின் ஒப்பந்த்ததிற்கும், அதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கும் கடும் அவப்பெயரை உருவாக்கிற்று. காந்தி கூறியதை போல, இந்த கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, அரசு மிகப்பெரிய பிழையை செய்து விட்டது.
முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியினரின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என்ற காரணத்திற்காக, இங்குள்ள மக்களின் கருத்து என்னவாகும் என்பதை குறித்தோ, காந்தி-இர்வின் ஒப்பந்தத்திற்கு என்னவாகும் என்பதை குறித்தோ கவலைப்படாமல், பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் பலி கொடுத்துவிட்டனர். இது குறித்து, அரசு நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எப்படி முயன்றாலும், இதை மூடி மறைக்கவோ, பூசி மெழுகவோ முடியவே அதனால் முடியவே முடியாது என்பதைத்தான்.
மராத்தி மூலத்திலிருந்து ஆங்கில மொழியாக்கம்: ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: மகிழ்நன் பா.ம
நன்றி : மாற்று.காம்.