மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ‘இஸ்லாமியர் வாழ்வும் வகிபாகமும்’ என்ற கருத்தரங்கம் காவல் துறையால் இறுதி நேரத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், திவ்ய பாரதி தனது முகநூலில்,
‘சூல் வாசிப்பு தளம் சார்பாக இன்று நடக்க இருந்த முழு நாள் கருத்தரங்கிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு. கூடுதல் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
எதற்காக இந்தக் கருத்தரங்கம்?
சையது அப்துல் காதர் சொல்கிறார்:
நாளை காலை மதுரையில் ஒரு முழு நாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. “இஸ்லாமியர் வாழ்வும் வகிபாகமும்” என்கிற இந்நிகழ்வை மதுரையின் சூல் வாசிப்புத் தளம் ஏற்பாடு செய்திருக்கிறது. தோழர்கள் ரபீக் ராஜா, திவ்யா போன்றோரின் பெருமுயற்சியில், பல தடைகளைத் தாண்டி இக்கூட்டம் நடக்கிறது.
இஸ்லாத்துக்கும் இலக்கியத்துக்கும் என்ன தொடர்பு ? என்கிற பொதுவான கேள்வி, பல ஆதிக்க சக்திகளின் பரப்புரை எச்சமாக இன்றளவும் சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியர் வாழ்வியலையும் இஸ்லாமியர்களையும் அந்நியமாக பார்க்கும் போக்கிற்கு எதிரான ஒரு கருத்தியல் மாற்றம் இன்று தமிழகத்தில் மட்டுமல்ல. இந்திய அளவிலும் தேவைப்படுகிறது.
மலையாளத்தில் பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா பேசப்பட்ட அளவுக்கு இங்கு ஏன் தோப்பில் முகம்மது மீரானும், குளச்சல் யூசுப்பும், ஜாகிர் ராஜாவும் பேசப்படவில்லை என்ற கேள்வி என்னுள் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அங்கு “ஸ்மரக சிலஹல்” க்கு ஒரு விக்கிபீடியா பக்கமே உண்டு. (தமிழில் அது “மீஸான் கற்கள்” ஆக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது ) மற்ற நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளே கேட்பாரற்று கிடக்கும் சூழ்நிலையில், இஸ்லாமிய படைப்புகளின் கதியைச் சொல்லவே வேண்டாம்.
ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வாழ்வியலையும் கலை இலக்கிய படைப்புகளையும் பன்முகத்தன்மையையும் பேச ஒரு நாள் போதாது தான். ஆனால் அப்படியொரு நாள் இதுவரை சாத்தியமானதாக ஆகவில்லை. அதற்காகவே இந்த கருத்தரங்கம்”.