மாரிமுத்து என்ற யூமா வாசுகியின் கவிதைகளில் தேவதைகளூம், குழந்தைகளும் முத்தமிட்டபடி பிரியத்துடன் வருகிறார்கள். பிரச்சாரம்/முழக்கங்கள் இல்லை. குழந்தைகள் ஆசையுடன் நம்மிடம் விளையாடுகிறார்கள். காதலிகள் ரகசியமாக கவிதைக்குள் நுழைந்து நம்மை தொட்டு அரவணைக்கிறார்கள். முயல்களும்/மான்களும் சட்டென கவிதையிலிருந்து குதித்து நம் மடியில் உட்கார்கிறது. காதலியின் பிரிவின் ஆற்றாமையை ஒரு பறவையின் வாயிலாக உணரமுடியும். நிகழ்காலத்தை மறக்கச்செய்து, கடந்தகாலத்தின் ஏக்கத்தை ஒரு வண்ணத்துப்பூச்சி நினைவுப்படுத்துகிறது. சட்டென, ஒரு டுலிப் மலர் கவிதையிலிருந்து முளைத்து நம் ஆன்மாவை ஆழமாக தொட்டு வருடுகிறது. பெயர் சொல்லமுடியாததும், குறிப்பிடமுடியாத ஒரு அந்தரங்க உரையாடலை இக்கவிதைகள் வாசிப்பவர்களிடம் நடத்துகிறது. வேட்கையும், விரகதாபங்களும் மரமாக உருப்பெற்று கவிதை கனவில் ஒரு ஒவியத்தை தீட்டுகிறது. தலை சிறந்த கவிஞர்கள்/எழுத்தாளர்கள் ஒரு வரிக்காக தவம் கொண்டு காத்திருக்கிறார்கள். ரில்கே சொன்னதுபோல், அந்த ஒரு வரி அல்லது எளிய கவிதையை எழுதினால் போதும், பேனாவை தூக்கியெறிந்து கமண்டலத்தை தூக்கிக்கொண்டு காசிக்கு கிளம்பிவிடலாம். போதும் இந்த வாழ்க்கை! இத்தகைய அபூர்வமான ஒரு கவிதை யூமா எழுதியுள்ளார். ”இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து” என்ற கவிதையை வாசித்தால் இழந்த காதலி/காதலன் முத்தமிடுவான்/ள். சாவடி!
யூமா வாசுகியின் மூன்று கவிதைகள்.
(1) ஒரு மனிதன் முயலாக
“ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி
ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற
சிறுமி புவனா கேட்கிறாள்
‘முயல் என்ன செய்கிறது?’
அவளைக் கவர்வதற்காக
அறையினுள் ரகசியமாக
ஒரு முயல் வளர்ப்பதாகச் சொல்லியிருந்தேன்.
‘முயல் சாப்பிடுகிறது’
என்னும் பதிலில் திருப்தியுற்றவளாய்
விளையாடப் போனாள்
‘எங்கே முயல்? காட்டு பார்க்கலாம்’
என்று அடுத்த நாள் வந்தாள்
ஆப்பிள் தின்றபடி.
‘பெரிய முயல் கடித்துவிடும்’ என்று சொல்ல
சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்
அவள் சொல்லித்தான் நான் முயல் வளர்ப்பது
மற்ற சிறுவர்களுக்கும் தெரிந்தது
வாசலில் கூட்டமாய் வந்து நின்று
‘என்ன செய்கிறது முயல்’ என்பவர்களுக்கு
பல தடவைகள் அறைக்குள் எட்டிப் பார்த்து
முயல் பற்றிய நிலவரத்தை தெரிவித்தேன்
நாளாக,
அப்படியொரு முயல் இங்கே இல்லை
எனும் உண்மை புரிந்தாலும்
நான் வீட்டைப் பூட்டிப் புறப்படும்போது
என்னையே முயலாக்கி
புவனா கேட்கிறாள்,
‘முயல் எங்கே போகிறது..?’
நீண்ட கைகளை ஆட்டி
பஞ்சு ரோமத்தைச் சிலிர்த்து
மிரண்ட விழிகளால்
குறுகுறுப்பாகப் பார்த்து
முயல் சொல்கிறது…”
(2) மறுபடியும் வந்திருக்கிறேன்
உன் வீடுள்ள தெருவை இம்முறையும் கண்டுபிடித்தேன்
தெருமுனைக் கடையில் டீ அருந்திக் கூடுதலாக
ஒரு சிகரெட் அருந்தும் நேரமே தாமதித்தேன்
நீ பணிமுடிந்து திரும்பும்போது எதிர்ப்பட்டு விடக்கூடாது
என்பதற்காக
ஓய்வுநாளாகப்பார்த்து வந்திருக்கிறேன்
கனவில் நீ மரமாக நேற்று தோன்றினாய்
எதிர்ப்பதுபோல தழுவும் இலையடர்த்தியை விலக்கி
உடல் கீறும் கிளைகளைப் பற்றியேறினேன்
தாக்குவதுபோல் பூங்கொத்துகளை வீசி
தொட்டுக்கொள்கிறாய் என் ரத்தத்தை
உன் அடங்காத ஆசையினால் மேலும்
அவ்வளவு கிளைகள் தோன்றின – அவ்வளவையும் அணைத்து
ஆவேசமாக நான் மேலேறினேன்
பலம் தீர்ந்தும், பரவசம் மேலும் கிளைகள் கேட்கிறது.
என் களைப்பில் கவனம் வைத்து நீ கிளைப்பதை நிறுத்தினாய்
உச்சிக்கிளையில் நான் அமர விந்து பொங்கியது
உன் உடலின் ஒரு இடமும் விடாமல் அது பரவுகிறது
நீதான் தடவிக்கொள்கிறாய்
விந்து பட்ட இடமெல்லாம் நிறம் வெளிற ஒரு
ஸ்படிக மரமானாய்
உச்சிக்கிளையை மெல்ல வளைத்து
தரையில் சிந்திய ஒரு துளியையும் நீ உறிஞ்சியபோது
நாற்காலியிலிருந்து எழுந்து நிற்பதுபோல்
தரைக்கு வந்தேன்
உன் ஸ்படிக உடல் ஊடுருவி
வெளியைப்பார்த்த்துபோலவே – இந்தக்கட்டிடங்களை ஊடுருவி
உன் சமீபம் உணர்கிறேன்
எப்போதாவது நீ கனவில் வருகிறாய் – நான்
வெகுதொலைவு கடந்துவந்து இங்கு நின்றுவிட்டுப் போகிறேன்
சென்றமுறை திரும்பிப் போக முடியாமல்
அகாலத்தில் குடித்த மதுவெல்லாம் கண்ணீராய் வழிய
இந்த ஊரின் தெருக்களை விடியும்வரை
வலம் வந்த்து போலன்றி
பேருந்து நிலையத்தில் அமர்ந்து இதை எழுதக்கூடிய அளவிற்கு
துக்கம் குறைந்திருக்கிறது
(3) இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருக்கிறேன்.
அறைக்குள் அடிவைத்ததுமே தெரிந்துவிட்டது,
சந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது விளக்கு வெளிச்சம்.
சிறு மாற்றமுமில்லை – எப்படி விட்டுச்சென்றேனோ அப்படியே
சற்றும் பிசகாமல் இருந்தன எல்லாம்.
தரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல்
நீ நுழைந்து சென்றிருக்கிறாய்.
உன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை
உன் மணம் இல்லை – உடனே படும்படி
உன் கடிதமெதுவும் காணவில்லை ஆயினும்
உன் வருகையை நான் உணர்கிறேன்
எனக்கான செய்தியை அனைத்து
உடுப்புகளின் பைகளிலும் தேடுகிறேன்
அயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை ரசித்து
புத்தகங்களுக்கும் பெட்டியிலும் துழாவுகிறேன்
தலையணை உறைக்குள், பாயின் அடியில்,
போர்வை மடிப்பில், ஏமாற்றம்.
குப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து
கசங்கிக் கிடந்த தாள்களைப் பிரிக்கிறேன்
ஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை – ரகசிய
பென்சில் கிறுக்கல்கள் ஏதுமற்றிருக்கிறது
புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்.
உன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி
பல தடவைகள் சோதித்தாகிவிட்டது
சொற்ப பொருள்களையும்.
புதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று.
கடைசியாக கண்ணாடியின் பின்புறம் பார்த்து
விளக்கணைத்துச் சாய்கிறேன்
ஒருக்கால் நீ வந்திருக்கவில்லையோ?
பிரமைதானோ?
இந்த அறையின் இருட்டு நிசப்தம்
இன்றவள் வந்தாள் என்றொலிக்கிறதே
நீ வந்திருந்தால் வழக்கம்போல
அறை கொஞ்சம் ஒழுங்குபட்டிருக்கும்.
புரளும்போது கைபட்டுத் தண்ணீர் சாடி விழுகிறது.
பாயில் பரவுகிறது நீரின் குளிர்மை.
காலையில் நான் புறப்படுகையில்
காலியாகத்தானிருந்தது சாடி.
நனைகிறேன்.
முகப்புப் படம்: புதூர் சரவணன், நன்றி: குங்குமம்
யூமா வாசுகியின் சில நூல்கள்: மஞ்சள் வெயில், இரவுகளின் நிழற்படம், உயிர்த்திருத்தல்