“ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்?

புத்தக வெளியீடுகள் அதிகமாக நடக்கும் காலக்கட்டங்களில் சர்ச்சைகளுக்கும் குறைவு இருப்பதில்லை. அண்மையில் கோவையில் உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு விழா நடத்தியது. இந்த விழாவில் உயிர்மை மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.  இந்தக் குழு கோவை அருகே மசினகுடியில் தங்கியிருந்தபோது, அங்கு நடந்த விவாதத்தில் சாருநிவேதாவை, குமரகுருபரன் அடிக்க கிளம்பியதாக சமூக வலைத்தளங்களில் எழுதிய சிலர், குமரகுருபரனை ‘200 கிலோ’ என உருவத்தைப் பற்றிய தாழ்ந்த பதிவுகளையும் எழுதினர்.

இந்த சர்ச்சைகள் குறித்து மனுஷ்ய புத்திரன்  தன்னுடைய முகநூல் பக்கத்தில்,

“உயிர்மை விழாக்களின் பின்புலத்தில் சிலசர்ச்சைகள் கடந்த காலங்களிலும் உருவாகியிருக்கின்றன. அவையும் சேர்ந்த்துதான் ஒரு இலக்கிய உரையாடல் என்ற அளவில் சிறு வருத்த்துடன் அவற்றை கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் சிலர் திட்டமிட்ட வகையில் உயிர்மையின் மேடைகளை தங்களது சொந்த அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தால் அதை சகித்துக்கொள்ள வேண்டும் எனக்கு எந்த அவசியமும் இல்லை. உயிர்மையோடு தொடர்புடைய எழுத்தாளர்களுக்கு இடையே என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உயிர்மை என்ற களத்திற்குள் யாருக்கும் எந்த அவமதிப்பும் அதே களத்தில் இருக்கும் வேறு யாராலும் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறேன்.

என்னை அவர்கள் விமர்ச்சிக்கலாம். ஆனால் உயிர்மை என்ற களத்தை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக தனிப்பட்ட உரையாடல்களை திரித்தும் மிகைப்படுத்தியும் மேடைகளில் சொல்வது, சக எழுத்தாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி ஒரு கசப்பான சூழலை உருவாக்குவது, தங்கள் சொந்தப் புண்களுக்கான இடமாக உயிர்மை மேடையை பயன்படுத்துவது, தனக்கு அநீதி இழைக்கப்பட்ட்தாக கட்டுக்கதைக்ளை உருவாக்கி போலி அனுதாபம் தேடுவது போன்றவற்றை தொடர்ந்து உயிர்மையின் பின்புலத்தில் தந்திரமாக செய்ய முயன்றால் அதை இனி சகித்துக்கொள்ளப்போவதில்லை அற்ப அரசியல் செய்யும் நபர்களால் உயிர்மை பல நண்பர்களை இழந்திருக்கிறது. போலி அங்கீகாரங்களின் போலி பதக்கங்களை தனக்குத்தானே சூடிக்கொள்வதற்கோ அல்லது அவற்றை பிறருக்கு மாட்டிவிட்டு ஆள் சேர்ப்பதற்கோ உயிர்மை ஒரு இடமல்ல. மிகுந்த கசப்புடன் இதைப் பதிவு செய்கிறேன்” என எழுதியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாக, சாருநிவேதிதா தன்னுடைய வலைப் பக்கத்தில்,

“இதுவரை முகநூலில் மனுஷ்ய புத்திரன் என்னைத் திட்டி பல பதிவுகள் போட்டிருக்கிறார்.  நாலைந்து ஆண்டுகளாக.  அவ்வப்போது அவற்றை எனக்கு நண்பர்கள் அனுப்பி வைப்பதும் உண்டு.  நான் எதற்குமே பதில் எழுதியதில்லை.  எதிர்வினை ஆற்றியதில்லை.  இப்போதும் அதேபோல் என்னைத் திட்டி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.  என் பெயர் இல்லாவிட்டாலும் அது நான் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  நான் யாருடைய புத்தக வெளியீட்டுக்கும் செல்ல விரும்புவதில்லை.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு உயிர்மை எழுத்தாளரின் புத்தக வெளியீட்டுக்கு வர இயலவில்லை என்பதை மிகுந்த பணிவுடன் ஹமீதுக்குத் தெரிவித்தேன்.  அந்த நாவல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதே காரணம்.  ஆனால் அதை நான் மேடையில் சொல்ல விரும்பவில்லை.  ஏனென்றால் எந்த எழுத்துமே ஒரு மாபெரும் உடல் உழைப்பையும் மனத் தயாரிப்பையும் கொண்டிருக்கிறது.  எனக்குப் பிடிக்காவிட்டால் என்ன, குடியா மூழ்கி விடும் என்பதே என் கருத்து.

சரவணன் சந்திரன் நூல் வெளியீட்டுக்கு மனுஷ் அழைத்தே தான் போனேன்.  எனக்கு நேரமே கிடையாது. ராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  கோவை வரை செல்ல வேண்டும்.  எல்லாவற்றையும் மனுஷின் மீது கொண்ட அன்பினால் மட்டுமே செய்தேன்.  என் மனதில் தோன்றியதைப் பேசினேன்.  அதில் அவருக்கும் மற்றவர்களுக்கும் மனம் புண்பட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.  அதற்காக மனுஷ்ய புத்திரனிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  அவருடைய உயிர்மை மேடையை என் புகழைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்தியதற்காகவும் மன்னிப்புக் கோருகிறேன்.

uyirmmai

ஆனால் மறுநாள் இரவு மசினக்குடியில் 200 கிலோ கொண்ட ஒருவர் என்னை நோக்கிக் கெட்ட வார்த்தைகளை வீசியபடி பாய்ந்து வந்தது என் கனவு அல்ல.  ஜெயமோகனின் நூறு சிம்மாசனங்கள் என்ற கதை பற்றி மிக மென்மையாக என் மாற்றுக் கருத்தை முன் வைத்ததற்காகத்தான் அவர் அப்படி ஓடி வந்தார்.  என் ஆசானையா அவமதித்தாய் தே… மகனே…  என்னை அவர் அடித்திருந்தால் எனக்கு இந்நேரம் ஜெயமோகன் இரங்கல் கட்டுரை எழுதியிருப்பார்.  சரி, 200 கிலோ கொண்ட மனிதர் ஒருவர் உங்களை நோக்கிக் கெட்ட வார்த்தைகளை வீசியபடி ஓடி வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.  நான் என்ன செய்தேன் தெரியுமா?  ”லூசா நீங்க, என் மகன் இல்லியா நீங்க?  இப்படியெல்லாம் நடக்கலாமா?  போய் உக்காருங்க.”  இப்படிச் சொன்னது என் கோழைத்தனமா, உயிர்ப் பயமா, அல்லது ஞானமா என்று எனக்கு இப்போதும் தெரியவில்லை.  இன்று காலையில் நடைப் பயிற்சிக்குப் போகும் போது கூட அடித்து விடுவார்களோ என்று பயந்து கொண்டே தான் போனேன்.

மனுஷ்ய புத்திரனிடம் மன்னிப்புக் கோருகிறேன்.  அவர் மேடையை என் புகழைப் பரப்பப் பயன்படுத்தியதாக அவருக்குத் தோன்றும்படி நடந்து கொண்டதற்காக.  மன்னிப்பு ஏற்கப்பட்டதா அல்லது தண்டனை உண்டா என்றும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  நட்புக்கும் புத்தக விற்பனைக்கும் சம்பந்தம் இருக்காது என்றும் நம்புகிறேன்.

மேலும், உயிர்மைக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் தொல்லை கொடுப்பவனாகவும் அற்பனாகவும் இருக்கிறோம் என்பதால்தான் உயிர்மையிலிருந்து நான் நாலைந்து ஆண்டுகளாக ஒதுங்கி ஓரமாக இருந்தேன்.  மனுஷ்ய புத்திரன் தான் அன்புடன் அழைத்தார்.  போனேன்.  எனக்கு யாருடைய அழைப்பும் அங்கீகாரமும் தேவையில்லை.  உயிர்மை இல்லாவிட்டால் இன்னொரு பதிப்பகம்.  என்னுடைய புத்தகங்களை நானே தான் பதிப்பித்தும் விற்றும் வாழ்ந்தேன்.  உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாக்களுக்குச் செல்வதை நான் தவிர்த்தே வருகிறேன்.  அன்பாக வற்புறுத்துவதால் மட்டுமே சென்று கொண்டிருந்தேன்.  இனிமேல் வற்புறுத்தி அழைத்தாலும் செல்ல மாட்டேன்.  ஏனென்றால் எல்லா மேடைகளையும் என் புகழைப் பரப்பவே பயன்படுத்தும் வியாதி வந்து விட்டது எனக்கு” இப்படி எழுதியிருந்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சையில் தொடர்புடைய எழுத்தாளர் குமரகுருபரன் என்ன நடந்தது என்பதை எழுதியிருக்கிறார்.

“இன்றும் சாரு நிவேதிதா இருநூறு கிலோ கறி பற்றி ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார் என்பதாலும், நிர்மலை மாதிரி நான் மதிக்கக் கூடிய அறியாத நண்பர்கள் சிலர் தொடர்ந்து அதை முன்வைத்துக் கொண்டே இருப்பதாலும் நான் முழுதும் எழுதி விடலாம் என்று நினைக்கிறேன்.

அன்றைய மசினக் குடி சந்திப்பில் சாருவுக்கு என் மேல் மிகப் பெரிய வருத்தம் இருந்தது அன்றைக்கும் வெளி வந்தது.

அவர் எப்போதும் கேட்கும், என்னை நெருக்கும் கேள்வி – நீ ட்ரான்ஸ் க்ரசிவ் எழுத்தை எழுதுகிறாய், எப்படி ஜெயமோகனை ஆசான் என்று ஏற்றுக் கொண்டு ருமையாக சொல்லிக் கொண்டும் இருக்கிறாய்? என்பதே.

அடுத்து அவர் பேசியது,

” நான் கேரளாவுக்குளாவது கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்று அங்கும் நான் போக முடியாத நிலைமை ஆகிவிட்டது.ஜெயமோகன் எழுதின நூறு சந்நினாதனங்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதென்ன கதை? ரவிக்குமார் பற்றிய – ஒரு பறப்பயலை = அவ்வாறு சொல்கிற கண்ணீர் கதை. நான் எழுதுகிற இலக்கியம் ஹெடொனிசம்.  இவர் கண்ணீர்க் கதைகளை எழுதி பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார்”

digi-jeya-008

நான் பறப்பய என்கிற அவரது வார்த்தைப் பிரயோகத்திற்கு கோபப் பட்டு எழுந்தேன். இதை கொங்கு வேளாள அல்லது ஆர் எஸ் எஸ் இடத்தில் அல்லது தினமணியில் பேசு – இங்கே அந்த வார்த்தையை உபயோக்கிக் காதே என்பது தான் நான் மேலும் சொன்னது.

உடனே கவிஞர் மனுஷ்ய புத்திரன் சாரு நிவேதிதாவைப் பார்த்து ” நீங்கள் எழுதிய ராசலீலா கண்ணீர்க் கதை இல்லையா? உங்கள் மனைவி பிள்ளை எல்லோரும் உங்களைப் பரிதவிக்க விட்டுப் போன விசயத்தை தானே அதில் எழுதி இருக்கிறீர்கள் சாரு,

தவிர கண்ணீர்க் கதைகள் இலக்கிய வடிவம் இல்லையா என்று கேட்டார்.”

சாரு உண்மையில் அன்று அந்த இடத்தில் மன்னிப்புக் கேட்டார்.

இது பிரச்சனையின் ஒரு பகுதி மட்டுமே”

இந்நிலையில் முகநூலில் வெளியான இந்தக் குறிப்புக்கு ஜ்யோவ்ராம் சுந்தர், “ரவிக்குமாரை பற நாயே என ஒருவர் சொன்னதை சாரு கோட் செய்யும்போது தவறாக புரிந்து கொண்டீர்களா?” என்ற பின்னூட்டத்துக்கு,

குமரகுருபரனின் விளக்கம், “இல்லை, அது அவர் தன் வார்த்தைப் பிரயோகத்திற்கு பின்னர் விளக்கமாக சொன்னது”.

சமீபத்தில் இலங்கை பத்திரிகையாளர் ஒருவர், எழுத்தாளர் ரவிக்குமாரை, “பற நாயே”என முகநூலில் கீழ்தரமான வார்த்தை பிரயோகத்தை செய்திருந்தார். அதை ஒட்டிய பதிவை தி டைம்ஸ் தமிழில் பகிர்ந்திருந்தோம். அந்த பதிவை சாருநிவேதிதா தன் வலைப்பக்கத்தில் பகிர்ந்து இலங்கை பத்திரிகையாளருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சாரு ‘பற’ என்கிற கீழ்தரமான வார்த்தை பிரயோகத்தை செய்திருக்கிறார். அதற்கு சாரு தரப்போகும் விளக்கம் என்ன?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.