டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரத்தில் முன்னுக்கு கொண்டு வரப்பட்ட தேசவிரோதிகள் பழியும் வழக்கும் இருக்கும் பொழுதே, அதே ஸ்மிருதி இராணி அமைச்சகம் இன்னொரு தாக்குதலை கருத்துரிமை படைப்புரிமை மீது தொடுத்திருக்கிறது.
உருது மொழி படைப்பாளர்களை முன் வைத்து தாக்குதல் தொடுத்துள்ளது. உருதுமொழியில் வெளி வந்த படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு The National Council for Promotion of Urdu Language (NCPUL) என்ற அரசு சார்பான அமைப்பு இருக்கிறது. இது அனுப்பி இருக்கும் சுற்றறிக்கை மற்றும் படிவத்தில், தங்களின் உருதுமொழி படைப்பிலக்கியம் அரசை அரசின் கொள்கையை விமர்சிக்காத படைப்பு என்று எழுதி இருவரின் சாட்சி கையொப்பம் வாங்கி இதோடு இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்க ஆணையிடுகிறது. படைப்பின் மீது நிகழ்த்தப்படும் காவிஅரசின் இந்த அத்துமீறலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் மும்பை வாழ் உருது மற்றும் ஆங்கில படைப்பிலக்கியவாதி ரஹ்மான் அப்பாஸ்.
இவர் தம் படைப்பிற்காக மராட்டிய மாநில அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். மோடி அரசின் சகிப்பின்மையை எதிர்த்து சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்பாளிகள் விருதுகளை திருப்பித் தந்து போராடிய பொழுது, தம் விருதை திருப்பி தந்த இரண்டாவது படைப்பாளி இவர். சென்னையில் சரிநிகர் மேடை(2015 september) , படைப்பாளிகளை ஆதரித்து கூட்டறிக்கை வெளியிட்ட பொழுது, அதில் கலந்து கொண்டு பேசியவர். இவர் முகநூலில் இது குறித்து பதிந்த செய்தியை நாம் படித்து, அவருக்கு உடனே தொடர்பு கொண்டு பேசினேன். என் கருத்தை ஆலோசனையை கடிதம் வழியும் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதன் படி தமிழ்நாட்டின் சார்பான மத்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் டி. கே. ரங்கராஜன் அவர்களுக்கு நடந்தை ஒரு மெயிலாக அனுப்பி வைத்திருக்கிறார் ரஹ்மான் அப்பாஸ். தோழர் டி.கே.ஆர், ரஹ்மானிடம் கனிவாக பேசி, இதை அமைச்சரின் பார்வைக்கும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்வதாக சொல்லி இருக்கிறார்.
மத்திய அரசின் இந்த இழிசெயல் எழுத்துரிமையை படைப்புரிமையை பறிக்கும் செயலாகும். இதை எதிர்த்து வலுவான குரல் ஓங்கி எழும் பட்சத்தில் இந்த சுற்றறிக்கை தடுத்து நிறுத்தப்படும். இல்லை எனில் நாடு முழுவதும் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உண்டு. நூலகத்திற்கு நூலை வாங்கக் கோருவதில், மாநில மைய அரசின் விருதுகளுக்கான போட்டிகளில், நூல் வெளியிட அரசின் நிதி உதவி கோரும் நேரத்தில், இம்மாதிரியான அரசின் எரிச்சலூட்டும் விதிகள் நடைமுறைப்படுத்தப்படலாம். அரசாங்கத்தின் மீதான மாற்றுக் கருத்தை வைப்பதற்கு அனைத்துக் குடிமக்களுக்கும் உரிமை உண்டு. மாற்று கருத்து வைத்திருப்போரை தேசத்திற்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தும் செயலை வன்மையாக் கண்டிப்போம்.
இரா.தெ.முத்து, தமுஎகச துணை பொதுச்செயலாளர்; எழுத்தாளர்.