
பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் கேட்டால் ‘compounding’ என்கிற ஒரு பதத்தினை சொல்லுவார்கள். அதாவது உங்களுடைய பணம் பெருகுவது என்பது ஒரு மல்டிப்ளையர் எஃபெக்ட்.
ரூ. 100க்கு 10% வருடாந்திர வட்டி என்றால்
முதல்வருடம் 100+10 = 110
இரண்டாம் வருடம்110+11 (10% of 110) = 121
மூன்றாம் வருடம் 121+12.1 = 142.1
இது தான் காம்பவுண்டிங். வட்டியும், வட்டிக்கான வட்டியும், அதற்கான வட்டியும் தொடர்ச்சியாக உங்கள் முதலீட்டினை மேலேற்றும். இதனால் தான் நெடுநாளைய திட்டங்களில் பணவரவு அதிகம்.
மத்திய தர வர்க்கத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை ஏப்ரலிலிருந்து 8.7%லிருந்து தடாலடியாக 8.1% ஆக குறைத்திருக்கிறது. அதாவது ஒரே ஷாட்டில் 0.6% காலி. பார்வைக்கு இது வெறும் 0.6% ஆனால் இதன் நீண்டகால பாதிப்பு அதிகம். மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம்.
10% என்பதற்கு பதிலாக 0.6% குறைத்து 9.4% என்று வைத்துக் கொள்வோம்.
முதல் வருடம் 100+9.4 = 109.4
இரண்டாம் வருடம் 109.4+10.28 = 119.68
மூன்றாம் வருடம் 119.68+11.24 = 130.92
142.10 வர வேண்டிய இடத்தில் 130.92 மூன்று வருடங்கள் கழித்து வரும். உங்களுடைய வாழ்நாள் சேமிப்பில் அரசாங்கம் கிட்டத்திட்ட 11.18 விழுங்கிவிட்டது. அதாவது உங்களுடைய ஆரம்பநிலை முதலீட்டில் கிட்டத்திட்ட 11.18% ஸ்வாஹா இதை 20 – 30 வருடங்களுக்கு கணக்கு போட்டால் நீங்கள் சேமிக்கும் தொகையை முன்வைத்து சில பத்து இலட்சங்களிலிருந்து பல கோடிகள் வரை காணாமல் போகும்.
இந்தியாவின் சராசரி பணவீக்கம் 6%; பாதுகாப்பான முதலீட்டின் வட்டி விகிதம் 8.1% ஆக பணவீக்கம் சாப்பிட்டது போக மிச்சமிருப்பது 2.1%. ஒரு வேளை உங்கள் முதலீடு 5 கோடிகள் இருந்தால் இந்த வித்தியாசம் வருடத்திற்கு ரூ. 10,50,000. மாதத்துக்கு ரூ. 87,500 இதை வைத்துக் கொண்டு அடுத்த 15 வருடங்கள் சென்னை மாதிரியான ஒரு பெருநகரத்தில் வாழலாம். ஆனால் எல்லோராலும் 5 கோடி முதலீடோ, சேமிப்போ செய்ய முடியாது.
அப்படியென்றால் என்ன செய்வீர்கள்?
1 ) கடன் வாங்குவீர்கள். கடன் சுழற்சியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்
2 ) அதிக இலாபம் வரும் என்று சொல்லப்படும் திட்டங்களில்முதலீடு செய்வீர்கள்.
இது ஒரு மாஸ்டர் ப்ளான். கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்க உறுதியளிக்கும் திட்டங்களின் வட்டி விகிதத்தினைக் குறைப்பது. பணவீக்கம் தடாலடியாக இந்தியாவில் குறையப் போவதில்லை. இந்த அரசு உறுதி திட்டங்கள் குறைவான ரிட்டர்ன் வழங்கும் போது, ஈக்விட்டி, ஸ்டாக் மார்க்கெட் என ஒரு போலி நிதி ஆலோசக கும்பல் உருவாகும்.
‘எதுக்கு சார் ஃபிக்சட் டெபாசிட்ல போடறிங்க. ரியல் எஸ்டேட்ல போடுங்க. ஸ்டாக் மார்க்கெட்ல போடுங்க. செம்மரம் ஆஸ்திரேலியால என்ன ரேட்டு போகுது தெரியுமா, அதுல இன்வெஸ்ட் பண்ணுங்க. பெரிய கம்பெனி சார் அது. BBB+ ரேட்டிங். அதனோட கடன் பத்திரத்துல போடுங்க”
மத்திய தரவர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கு தெரியாத ரிஸ்க் முதலீடுகளில் காசு போட ஆரம்பிப்பார்கள். Fly by Night operatorsகளுக்கு ஜாக்பாட் அடிக்கும். போட்ட ரிஸ்க் முதலீடு முழுமையாக வராத காரணத்தினால் கடன் வாங்க ஆரம்பிப்பார்கள்.
இதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகள், இடைத்தரகர்கள் வட்டியை ஏற்றுவார்கள். வாழ்நாள் முழுக்க நீங்கள் கடனாளியாகவே இருந்து, கடனாளியாகவே வாழ்ந்து, கடனாளியாகவே சாவீர்கள். ஒரு வேளை வீடு வாசல் நிலம் வாங்கி வைத்திருந்தால் அதையும் reverse mortgage செய்யுங்கள் என்று சொல்லி அதையும் பிடுங்குவார்கள்.
தனியார் முதலாளிகள் கொழிப்பார்கள். பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி முனையம் என எல்லாமும் கடை விரித்து உங்களின் கோவணத்தை கூட வாங்கிக் கொண்டு காசு கொடுப்பார்கள். சராசரி இந்தியன் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் புழுங்கி புழுங்கி அவமானத்தில் உழன்று நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து எல்லா ‘தற்காலிக சந்தோஷங்களுக்கும்’ (குடி, சீட்டு, சாராயம், போதைப் பொருள்) அடிமையாகி செத்துப் போவான். இது தான் உலகமெங்கிலும் நடந்தது. இப்போது இந்தியாவில் நடக்க ஆரம்பிக்கும். இந்தியா வெகு சீக்கிரத்தில் வெளிற ஆரம்பிக்கும். இந்த நாட்டின் எதிர்கால குடிமகன்கள் இந்த அரசாங்கத்தின் புண்ணியத்தில் ‘கடன்காரர்களாக மட்டுமே வாழ்ந்து’ சாவார்கள்.
புண்ணியவான் PPFல் மட்டும் கை வைக்கவில்லை. எங்கெல்லாம் எளிமையான மக்கள் வங்கிகளில் பாதுகாப்பான முதலீடாக வைப்பார்களோ அங்கெல்லாம் கை வைத்து எதிர்காலத்தினை சூன்யமாக்கி இருக்கிறார்கள்.
கிஸான் விகாஸ் பத்திரம் – 8.7% லிருந்து 7.8%
வருட டெபாசிட் (1 வருடம்) 8.4% – 7.1%
வருட டெபாசிட் (2 வருடங்கள்) 8.4% – 7.2%
வருட டெபாசிட் (3 வருடங்கள்) 8.4% – 7.4%
வருட டெபாசிட் (5 வருடங்கள்) 8.5% – 7.9%
தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (5 வருடங்கள்) 8.1%
சீனியர் சிட்டிசன் திட்டம் (5 வருடங்கள்) 9.3% – 8.6%
பெண் குழந்தைகள் திட்டம் 9.2% – 8.6%
Recurring டெபாசிட் (5 வருடங்கள்) 8.4% – 7.4%
18 – 30 வயதுக்குள் என் டைம்லைனில் இருக்கும் நண்பர்களுக்கு (பையன்/ பெண்கள் வைத்திருக்கும் பெரியவர்களுக்கும்) என்னுடைய unsolicited advice.
படியுங்கள். இந்த நாட்டில் இருக்காதீர்கள். வெளியேறுங்கள். இந்த தேசம் உங்களை கசக்கிப் பிழிந்து சக்கையாக்கி, கனவுகளை சுட்டெறித்து சாம்பலாக்கி, மயிராக ஊதி விட்டு, உங்கள் எதிர்காலத்தை நாசமாக்கி விட்டு போய்க் கொண்டேயிருக்கும். இது மோடி அரசின் சிக்கலாக மட்டும் சொல்லவில்லை. இதை முன்னெடுத்தால் அடுத்து வரும் எந்த அரசாங்கமும் இதை மாற்ற முன்னெடுக்காது. இதில் புவி அரசியல், வல்லரசு கனவுகள், FDI கோஷங்கள் என நிறைய இருக்கிறது. அடுத்த 15 – 20 வருடங்கள் கொடுமையானதாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. உங்களின் இளமையை இந்த அதிகாரப்பசிக்கு பலியாக்காதீர்கள். நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து வெளியேறுங்கள். இது உங்களுக்கான நாடல்ல.
இந்த தேசம் எத்தனையோ வெளிநாட்டு படையெடுப்பினையும், ஆக்ரமிப்பையும் பார்த்திருக்கிறது. ஆனால் ‘தேச பக்தர்கள்’ என்கிறப் போர்வையில் இந்த அரசு சுரண்டுவதைப் போல, ஆக்ரமிப்பதைப் போல, அழிப்பதைப் போல ஒரு நாளும் கண்டதில்லை.
வயிறெரிந்து சாபமிடுகிறேன் அப்பாவி, எளிமையான, ஒன்றும் தெரியாத மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் உங்களை வரலாறும், இந்த தேசமும் மன்னிக்கவே மன்னிக்காது.
நரேன் ராஜகோபாலன், சமூக-பொருளாதார விமர்சகர்.