
இன்று காலை தான் இப்போது.காம் என்ற இணையதளத்தின் பெயரில் வெளியிடப்பட்டிருந்த படங்களை பார்க்க நேர்ந்தது. பல பெண்ணிய செயற்பாட்டாளர்கள் ‘நான் உயர் சாதிப் பெண்’ ‘நான் ஆதிக்க சாதிப் பெண்’ என்று அறிமுகமாகி ‘இருந்தாலும்’ ஆணவக்கொலையைக் கண்டிக்கிறேன் என்று முடியும் வாசகங்களுடன் அவர்களின் படங்களும் அதில் இருந்தது. அந்த ‘ஆதிக்க சாதி ஆணவ விளம்பரத்தில்’ வந்திருந்த பெண்களில் சிலரின் செயல்பாடுகளை அறிந்தவன் என்ற முறையில் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு விசாரித்ததில் தான் பல பெண்கள் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக அந்த இணையதளம் நடத்துவதாக சொல்லியிருந்த இணைய பரப்புரைக்கு மட்டுமே ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் இந்த குறிப்பிட்ட வன்மம் மிகுந்த பரப்புரைக்கு அல்ல என்று விளக்கம் அளித்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. இணையவெளியில் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் சந்தித்த அந்த படங்களும், காணொளியும் நீக்கப்படாமல் இன்னும் அந்த தளத்தில் அப்படியே இருப்பதை பார்க்கிறேன். அந்த இணையதளத்தின் நோக்கம் தான் என்ன?
எந்த வரட்டு சாதி ஆணவத்திற்கு கொலை செய்கிறோம் என்று சொல்லி தங்களை சாதிவெறியர்கள் நியாயப்படுத்துகிறார்களோ அதேயளவு வன்மத்தை, சமூக தீங்கை அந்த இணையதளத்தின் செயல் நிகழ்த்தியுள்ளது. இந்த சமூகத்தில் ஆதிக்க சாதியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் அவளும் ஒடுக்கப்பட்டவளே, தலித் பெண்கள் அவர்களைக் காட்டிலும் இரட்டை ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். சாதிய சமூகத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் அவளும் தீட்டானவளே. அந்தந்த சாதிகளின் தூய்மையை தங்கள் கருப்பையில் பாதுகாக்கும் ஒரு உடைமையாகத் தான் பெண் வைக்கப்பட்டிருக்கிறாள். தலித் ஆணோடு இணைந்ததால் போலியான அவர்களின் சாதித் தூய்மை கெட்டுவிட்டது என்று சொல்லியே திவ்யா கவுசல்யாக்களின் தாலியை அந்த பெண்களின் குடும்பத்தினரே அறுக்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க தங்களை ஆதிக்க சாதி, உயர் சாதிப் பெண் என்று அவர்கள் எப்படி அழைத்துக் கொள்ள முடியும்? அதுவும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக நடத்தப்படுவதாக சொல்லப்படும் பரப்புரையிலேயே அப்படி பயன்படுத்துவது எவ்வளவு முட்டாள்தனமான செயல்?
தலித் பெண் செயற்பாட்டாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள் தங்கள் ஒடுக்கப்பட்ட சாதிப் பெயரை பொதுவில் சொல்வதையும், ‘நான் ஆதிக்க சாதிப் பெண்’ என்னும் செயலோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. பார்க்க கூடாது. எந்த அடையாளம் இழிவானதாக சொல்லப்படுகிறதோ, எந்த ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரால் மற்றவர்களை (ஆதிக்க சாதியினரையும்) ஆபாசமான வார்த்தைகளால் திட்ட பயன்படுத்தப்படுகிறதோ அதையே தலித் பெண்கள் தாமாக பிரகடனப்படுத்துவது சாதி ஆதிக்க திமிர்த்தனத்திற்கு எதிரான கூரிய ஆயுதமாக மாறுகிறது ஆனால் தலித்தல்லாத பெண்கள் தங்களை ஆதிக்க சாதியென்றும், தங்கள் சாதிப் பெயரையும் சொல்வது அவர்களின் சாதித் திமிராகத்தான் அமையும். சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சிந்தனையுள்ள தலித்தல்லாத பெண்கள் ஒன்று செய்யலாம். தந்தை பெரியார் சொன்ன ‘சொந்த சாதிக்கு துரோகியாக இருப்பது’ என்பதை நடைமுறைப்படுத்த அவர்கள் தங்களின் சாதிப் பெயரை சொல்லி, அந்த சாதியின் ஆதிக்கப்போக்கை அம்பலப்படுத்தலாம், கண்டிக்கலாம், எதிர்க்கலாம். இது அந்தந்த சாதிகளில் உள்ள சாதிவெறி கும்பலை தனிமைப்படுத்தி, அப்புறப்படுத்தும். இதுவே இன்றைக்கு தேவையான பரப்புரை.
தங்கள் சாதி ஆதிக்க போக்கை வெளிப்படுத்தி, எதிர்ப்புகளை மீறி இன்னும் அவற்றை நீக்காமல் வைத்திருக்கும் இப்போது.காம் இணையதளத்திற்கு என் கடும் கண்டனங்கள். அந்த இணையதளம் உடனடியாக அப்படங்களை நீக்கி தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்.
முகப்புப் படம்: கீதா இளங்கோவன்