சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!: குட்டி ரேவதி

 • ‘நான் உயர்சாதி’ என்ற அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்டாமைத்தனத்துடனும், ‘நான் பெரிய முற்போக்காளராக்கும்’ என்ற தொனியுடனும் ஓடிவந்து பதிவிடுபவர்கள் எவரிடமும் இதுகாறும் குறைந்தபட்ச சாதிமறுப்பு உணர்வைக்கூடப் பொதுவெளியில் நான் பார்த்தே இராததால் இதை எழுத வேண்டியிருக்கிறது.

*நான் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், எல்லோரும் நான் பிறந்து வந்த சாதியை அறிவார்கள் என்ற புரிதலுடன்தான் நான் இந்த உலகத்தில் வாழ்கிறேன். ஏனெனில், எல்லா சமூகத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் அந்த விழிப்புடன் தான் எல்லாமே அணுகப்படுகின்றன என்பது யாரும் அறியாதது அல்ல. நானும்.

 • எந்த அளவிற்கு ‘நான் இந்தச் சாதியுடையவள்’ என்று ஒருவர் சொல்கிறாரோ, அந்த அளவிற்கு, ‘நான் சாதியற்றவள்’ என்று சொல்வதும் இந்த அவலமான உலகத்தில் ஒரு சுவாரசியமான புனைவு. அந்தப் புனைவை நானும் ‘எனக்கு நானே’ ஏற்படுத்திக்கொண்டு தான் வாழ்ந்துவருகிறேன். ஏனெனில், அப்படி சொல்லிக்கொள்வது என் வாழ்விலும் சமூக முற்போக்குத் தளங்களில் ஒரு சொகுசாக இருக்கிறது. அவ்வளவே. ஆனால், அது குறித்த பொதுவெளி உரையாடலுக்குக் கூட, நீங்கள் சாதிமறுப்பு நாட்டாமைகளின் கடவுச்சீட்டிற்குக் காத்திருக்கவேண்டும். உண்மையில் இதைப்பிற, பெண்ணிய விவாதங்களில் இதற்கு முன் எந்தப் பெண்ணியவாதியும் முன்வைத்ததில்லை. முன்வைக்கவும் முடிந்ததில்லை. அதற்கான வாய்ப்பையும் பெண்ணியவாதிகள் ஏற்படுத்திக்கொண்டதில்லை. மிகவும் வசதியாக ஒதுங்கிக்கொள்வார்கள், அல்லது மறந்துவிடுவார்கள். கடந்துசென்ற, ‘பெண்கள் தினத்திலேனும்’ யாரேனும் முன்வைத்தார்களா, என்ன. அட, போங்கப்பா!

 • எல்லாப்பெண்ணிய நாட்டமைகளும் ஓடிவந்து, நாட்டாமை தொனியிலேயே இதை என்னிடம் கேள்வி கேட்பது மிகவும் வியப்பானது, திகைப்பானது. இவ்வளவு காலம் உண்மையிலேயே இவ்வளவு சாதிய மறுப்பாளர்கள் பெண்ணியவாதிகளாய் இருந்திருக்கிறார்களா என்று அறிய நேர்ந்ததும் என் நல்வாய்ப்பே.

 • பெண்ணியவாதிகளின் பசப்புகளும் பாசாங்குகளும் உலகம் அறிந்தது. ஓர் ஆணிடம் என்றால், அவர் ‘ஆணாதிக்கவாதி’ என்று முகத்திற்கு நேரேயே ஒரு கருத்தை முன்வைக்கமுடியும். எதிர்ப்பைப் பதிவுசெய்யமுடியும். ஆனால், பெண்ணியவாதிகள் அவரவர் வாடகைக்கு வாங்கிய சாதிக்குடைகளின் கீழ் ஒளிந்து கொண்டுதான் பெண்ணியவாதத்தையே நிகழ்த்துவார்கள். பெண்ணிய, முற்போக்கு ஒருமை இல்லாதவர்கள். அடுத்தடுத்த பெண்களை, ஆண்களின் அதே வன்மத்துடன் எதிர்கொள்வதில் ஈடுஇணை இல்லாதவர்கள். பாருங்கள். எல்லோரின் உரையாடலையும் சென்று மீண்டும் வாசியுங்கள். அவரவர் சாதிமுகங்கள் அதில் பளபளக்கும். அதிகாரமும் வியர்க்கும். அவரவர் கோட்டைகளும் எல்லைகளும் கூடத்தெளிவாகும்.

 • சாதிய ஒழிப்பிற்கான, சர்வ அதிகாரத்தையும் அதற்கான தடிகளையும் யார் உங்களிடம் தந்தது. எந்தச் சாதி அதிகாரத்தின் பேரில் அதைக் கையில் எடுத்துக் கொண்டு பேசுகிறீர்கள்? அந்தத் தடியின் பின்னால், சாதி அதிகாரத்தை ஒழிப்பது குறித்த விவாதத்தையே நீங்கள் தான் மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருப்பது போன்ற தொனி, மிகவும் மிரட்டலாக இருக்கிறதே. உங்கள் இமேஜைக் கொஞ்சம் சரிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில், அதில் ‘பார்ப்பனீய’ வாடையும் இதுவரைப்பொத்தி வைத்திருந்த ஒற்றை அதிகாரமுகமும் வெளிப்படையாகிறது. இதில் நீங்கள் எங்கே சாதியற்றவர் ஆகிறீர்கள்? யார் உங்கள் கையில் ‘அம்பேத்கரை’ ஒரு சிலையாக்கிக் கொடுத்தது?

 • சாதிமறுப்பு நடவடிக்கைகளை, தலித் மக்கள் மட்டுமே செய்யவேண்டும் என்றால், ‘தலித் அல்லாத’ சாதி ஒழிப்பு நடவடிக்கையில் முழுமுனைப்புடன் ஈடுபடுபவர்களை, முற்போக்குப் பெண்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள். அம்பேத்கரைக் குத்தகை எடுத்திருப்பவர்கள் மட்டுமே சாதிய மறுப்பு நடவடிக்கைகள் செய்யலாம் என்றால், முதலில் நீங்கள் அம்பேத்கரை முழுமையாக வாசித்துவிட்டு வந்து பணியாற்றுவது தானே சிறப்பாக இருக்கும்.

 • ‘இப்போது.காம்’ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நீங்கள் தான் என்னை சாதி அடையாளத்துடன் பார்க்கிறீர்கள். ஏனெனில், இதுவரை நீங்கள் அப்படித்தான் பார்த்துவந்திருக்கிறீகள். பெண்களைச் சாதியாக பார்க்கும் மனம், பார்ப்பனீய மனம். அது என்னைச் சாதியில்லாதவள் என்று அம்பேத்கர் அறிவியலின்படிக் கூட ஏற்கத்தயங்குகிறது. உங்கள் மனதில் உள்ள சாதியத்தந்திரங்களும் மாய்மாலங்களும் ‘மேனிப்புலேஷன்களும்’ வெளிப்படையாகின்றன, என்பதை முழுமனதுடன் நீங்கள் இப்பொழுதாவது ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

 • இதுவரை, படைப்பிலும் எழுத்திலும் நான் முன்வைத்துவந்த, என் சாதிமறுப்பு முன்மொழிதல்களை சமூகத்தின் எல்லா இடங்களிலும் கவனமாகப் புறக்கணித்துவிட்டு, இந்த இடத்தில்வந்து தங்களைச் சாதியமறுப்பாளராக முன்வைப்பது குறித்த உங்கள் பாசாங்குகளை நான் அறியும்போது உங்கள் ஒப்பனை ஒரு நீர்கோலம் அழிவதைப் போல கலைவதை உணர்கிறேன். வன்மையான கண்டனங்களை முன்வைக்கிறேன். வட்டத்தை வரைந்து கொண்டு, சமூகத்தளங்களில் வீறு கொண்டு எழுதி முன்னகரும் பெண்களை வட்டத்திற்கு வெளியே நிற்கச்சொல்லும், தங்கள் தங்கள் சாதிகளின் வன்முறைகளிலிருந்து வெளியேறத்துடிக்கும் பெண்களை ஒற்றைமுனை சாதிஅதிகாரத்தால் கண்டிக்கமுயலும், உங்களின் தடிகள், காவல்துறையின் தடிகளை விட வன்மம் நிறைந்தவை.

 • சாதிஒழிப்பிற்கு, ‘தலித்’ பிரிவைச் சேர்ந்த கருத்தியலாளராகவோ அல்லது, ‘சாதியற்றவர்’ என்று கூக்குரலிட்டுக்கொள்வதோ மட்டுமே போதுமானது இல்லை. சமூகத்தின் குறுக்குவெட்டில் இறங்கி, சாதி நிறைந்த சமூகத்திடம் சாதிபற்றிய உரையாடல்களை நிகழ்த்தும் பெருமனம் இல்லாத, ‘எக்ஸ்க்ளூசிவ்னெஸ்’ சாதிமறுப்பு போலித்தனமானது, கண்டனத்திற்குரியது. தான் மட்டுமே தலைவராகவேண்டும் என்ற ஆசைகொண்டது. யாரையும் உள்ளடக்கிக்கொள்கிற, எவரையும் உள்ளடக்கிக் கொள்ளும் மனமற்ற, சிந்தனையற்ற போக்கு, அதே பார்ப்பனீய போக்கு தான் இன்னும் இன்னும் வன்முறைகளை அதிகப்படுத்துகிறது.

 • இன்றைய தினத்தில், ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. படைப்பாளியும் அரசியல் தலைவருமான சிவகாமி அவர்களுடன் இரண்டு வருடங்கள் தொடர்ந்து களப்பணியில் பணியாற்றி வந்தக் காலத்தில், வம்படியாய் என்னை சிவகாமியிடமிருந்து பிரித்தார்கள். ஒரே காரணம், ‘தலித் அல்லாதவர்’ அந்தத் தலைவருடன் இணைந்து பணியாற்றத் தகுதியற்றவர் என்பது தான். இத்தனைக்கும் சிவகாமி அவர்களுடன் என்னுடைய களப்பணியும் உறவும், எந்தத் தரச்சோதனைக்கும் தயாரானது.

 • இத்தனை வருடங்களும் எப்படிப் பெண்ணியவாதிகள், பார்ப்பனீய சிந்தனைப் பதிப்பகங்களுடனும், படைப்பாளிகளுடனும் ‘க்யூ’வில் நின்று தங்கள் பெண்ணியவாதத்தைத் தொடர்ந்தபோது, நான் மட்டும் எதிர்த்திக்கில் நின்று தொடர்ந்தேனோ அது போலவே இனியும் என் உரையாடல்களையும் விவாதங்களையும் தொடர்வேன். இப்படியான, ஒரு நகைமுரணான சம்பவம் (இப்போது.காம்) தரும் வாய்ப்பிற்காக நான் மிகவும் காத்திருந்தேன் என்று தான் சொல்லவேண்டும். ‘பெண்ணியவிவாதமும்’ அதன் பாசாங்குகளும் இதனால் வெளிச்சத்திற்கு வருகின்றன.

 • நான் நாசமாகப் போவது இருக்கட்டும். (முதலில், ‘நாசமாய்ப் போவது’ என்று பேசுவது பகுத்தறிவு வாதமும் அன்று. உங்கள் பகுத்தறிவுவாதத்திற்கு அழகும் அன்று.) நான் ஒழிக்க முடியாது போன சாதிஆணவக் கொலைகளை நீங்களேனும் ஒழித்தால், ஒரு சாதாரணக் குடிமகளாக நான் உங்களுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.

 • இந்த இலட்சணத்தில் ‘ஆண்’சாதிமறுப்பாளர்களின் குறுக்கீடுகள் வேறு.
  வாருங்கள். உரையாடலைத் தொடர்வோம்.

குட்டி ரேவதி, எழுத்தாளர்; திரைப்பாடலாசிரியர்.

முகப்புப் படம்: RR Srinivasan.

One thought on “சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!: குட்டி ரேவதி

 1. Miga miga nermaiuana pathu.oru murpokku sinthnaiyalarin

  Maganagairunthalum,antha’ exclusive’ group,ennai muganoolil migavumaruvaruppaga path I saitharkal.onum perisa naan solavilai.idaoothukeedu patrkia en sonthakaruthai solliirunthan.atheru than ithanai vanmam,aabasa pathivugalum

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.