உயர்பதவியில் இருப்பவர்கள் இன்னமும் பிரபுத்துவ மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கூறினார். நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பணி ஓய்வுபெற்றதையடுத்து, அவருக்கு பிரிவு உபசார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமை வகித்தார். தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில், நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பேசியதாவது:
பொதுவாக உயர் பதவியில் இருப்போர் ஒருபிரபுத்துவ மனப்பான்மையில் இருப்பது வருத்தத்துக்குரியது. சுதந்திரத்துக்கு முன்பு இந்தியா ஆங்கிலேயர்களாலும், பல அரசர்களாலும் ஆளப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் வெள்ளையர் வெளியேறினர். அரசர்களின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. ஆனால் நீதித்துறையில் மட்டும் ஏனோ நீதிபதிகளை நீதியரசர்கள் என அழைப்பதை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை.
இடைநீக்கத்தை விலக்க வேண்டும்:
நான் நீதிபதியாக பதவியேற்ற போதும், பணி நிறைவு செய்யும்போதும் வழக்குரைஞர்கள் இடையே சுமூகச் சூழல் இல்லை. 2009-ஆம் ஆண்டு, வழக்குரைஞர்கள்-போலீசார் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தின் காயம் ஆறாத நிலையில் நான் பதவியேற்றேன்.தற்போது 40-க்கும்மேற்பட்ட வழக்குரைஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பணிநிறைவு செய்கிறேன். தமிழகத்தில் விசாரணைக்கு முன்பே 40-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, வழக்குரைஞர்கள் மீதான இடைநீக்கத்தை பார் கவுன்சில் விலக்கிக்கொள்ள வேண்டும். வரலாறு காணாத அளவில் தற்போது தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் சுமார் 40 முதல் 50 சதவீத நீதிபதிபதவிகள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பதவிகளை நிரப்பும்போது சமூக நீதியின் அடிப்படையில் அனைத்து பிரிவினரும் நீதிபதியாகும் வகையில் நீதிபதி பதவிகள் நிரப்பப்பட வேண்டும்.
இதற்கு நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியத்தில் அனைத்துப் பிரிவினரும் இடம்பெற வேண்டும். கருத்துரிமையை அச்சுறுத்தும் சட்டங்கள்: பேச்சுரிமையும், கருத்து சுதந்திரமும் ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அங்கங்கள். அவைஅவசியம் காக்கப்பட வேண்டும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ளது போல நமது நாட்டிலும் முழுமையான பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(2)-ல் கண்டுள்ள வரம்புகள் நீக்கப்பட வேண்டும். இதன்மூலம் கருத்துரிமையை அச்சுறுத்தும் பல சட்டங்கள் செயலற்றுப் போகும் என்றார்.
நீதிபதி ஹரிபரந்தாமனின் ஓய்வையடுத்து, உயர் நீதிமன்றத்தில் தற்போது 35 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
தீக்கதிர்