ஜி. கார்ல் மார்க்ஸ்

ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் இளைஞர்கள். இதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடுபவர்களும் இளைஞர்கள் தான். அவர்களில் மெத்தப் படித்தவர்களும் உண்டு. இத்தகைய கொலைகள் தமிழகத்துக்கு புதிது என்பது போல பலர் கண்டுபிடித்து எழுதுகிறார்கள். கொலைகள் பழையவை தான். ஆனால் அவற்றை பதிவு செய்யும் CCTV கேமராக்கள் மட்டும் தான் நமக்குப் புதியவை. அது தான் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம். எல்லாவற்றையும் பார்த்துக் கடக்கும் நமக்கு, பதிவு செய்யப்பட்ட நேரடியான கொலைக்காட்சி அச்சமூட்டுகிறது.
ஆனால் இந்த அச்சத்தில் வேறுபாடு உண்டு. அதுவும் மிகப்பெரிய வேறுபாடு. கொலை செய்யப்படும் இளைஞன், மற்றெல்லோருக்கும் ஒரு உயிர். ஆனால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவனுக்கும் அங்கே துடித்தது அவனது சொந்த உயிர். அதனால் அவன் அடைவது பதட்டமோ, பயமோ மாத்திரம் அல்ல. ஆழ்ந்த கசப்பு. தன்னால் வெளிவரவே முடியாத பிறப்பின் போதாமை தரும் கசப்பு அது.
இத்தகைய கொலைகளை சாத்தியப்படுத்தியத்தில் சாதி வெறிக்கு மட்டுமல்ல, அதைத் தாங்கிப் பிடித்திருக்கிறஅதிகாரத்துக்கும் பொறுப்புண்டு. இங்கு சாதி உணர்வு என்பது, அதிகாரத்தோடும் வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த கொலையைக் கண்டிப்பதில் எல்லா கட்சிகளும் தடுமாறுகின்றன? மனிதாபிமானத்துக்குள் பதுங்குகின்றன. ஏனெனில் இங்கு அதிகாரம் என்பது உயர்சாதியினரின் கைகளிலேயே இருக்கிறது.
ஒரு விவாதத்துக்காக நான் இதைக் கேட்கிறேன். வங்கிக் கொள்ளையில் பிடிபட்ட நால்வரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்று, மற்ற கொள்ளையர்களை அஞ்சச் செய்தது போல இப்போது பிடிபட்டிருக்கும் கொலையாளிகளைக் கொன்று ஜெயலலிதா அரசு ஏன் மற்றவர்களை அச்சமூட்ட முயலவில்லை? இதற்கு முன்பும் கூட கவுரவக் கொலைகளை கூலிகள் செய்தபோது அரசு ஏன் தனது மூர்க்கத்தைக் காட்டவில்லை? சமீபத்திய யுவராஜ் விவகாரம் வரை அரசின் கரங்கள் ஏன் மென்மையாகவே இருக்கின்றன? ஏனெனில் இங்கு அரசு என்பது கொல்லும் தரப்பாக இருக்கிறது. இது எல்லாருக்குமான அரசு அல்ல. இந்த ஜெயலலிதா அரசு முதல் சென்ற கருணாநிதி அரசு வரை. அடுத்த தேர்தலில் அமைய இருக்கும் அரசு கூட அப்படித்தான் இருக்கும்.
அதனால் தான் கொலையாளிகள் அவ்வளவு நிதானமாக செயல்படுகிறார்கள். தயக்கமே இல்லாமல் அவர்கள் உதிரிகள் தான். இத்தகையவர்களின் உருவாக்கத்திற்கு, தனிப்பட்ட எந்த கட்சியையும் பொறுப்பாக்க முடியாது. இதுவொரு மதிப்பீட்டு வீழ்ச்சி. ஒரு சிவில் சமூகமாக நாம் மிக ஆழமாக சிதைந்து போயிருக்கிறோம் என்பதன் அறிகுறி இத்தகைய கொலைகள்.
சாதி மற்றும் அதிகாரம் என்று வருகிறபோது அவை எப்போதும் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்பவை. அதனால் தான் ஜெயலலிதாவால் சங்கராச்சாரியாரைக் கூட பகைத்துக் கொள்ள முடியும். ஆனால் தேவர் சாதி கொலையாளிகளைக் கொன்று தேவர்களை பகைத்துக் கொள்ள முடியாது. இதே தான் கருணாநிதிக்கும். அவரால் சங்கராச்சாரியாரையும் பகைத்துக் கொள்ள முடியாது. சாதிகளையும் பகைத்துக் கொள்ள முடியாது. ஆக, இவர்களால் சாதிக் கொலைகளைத் தடுத்துவிட முடியும் என்று நினைப்பது அறிவீனம் என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. ஆக, தீர்வை நோக்கி நகர வேண்டுமானால் வெளிப்படையாக நாம் உரையாடல்களைத் தொடங்க வேண்டும்.
இப்போதைய சாதிக் கொலைகளின் மூர்க்கத்துக்கு ஒரு முக்கியமான காரணம், வெகுமக்கள் மத்தியில் நிகழும் அரசியல் நீக்கம். இது முதலாளித்துவத்தின் கொடை. இன்று வெகுஜனக் கட்சியில் இருக்கும் ஒரு தொண்டனுக்கு தனது கட்சியின் கொள்கை என்ன என்று தெரியத் தேவையில்லை. தெரிவதும் இல்லை. இதன் நீட்சியாக உருவாகி வந்திருக்கும் சாதி கட்சிகளில், இந்த ‘கொள்கை நீக்கம்’ என்பது ஒரு தகுதியாகவே கடைபிடிக்கப்படுகிறது. கம்யூனிசம், திராவிடம் போன்ற லட்சியவாத கோட்பாடுகளில் தேய் வழக்காக ஆகிப்போயுள்ள சூழலில், எல்லா சமூக இயக்கங்களும் ஓட்டுப் பொறுக்கும் அரசியலை நோக்கி நகர்ந்து விட்ட நிலையில், இங்கு எஞ்சியிருக்கும் உதிரிகள் மிக எளிதாக சாதி சார்பானவர்களாக மாறிவிடுகிறார்கள்.
ஏனெனில் சாதிக் கட்சி என்று வருகிறபோது, அதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. பிறப்பிலேயே தகுதியுடன் பிறந்து விடுகிறபோது பிறகென்ன தகுதி வேண்டியிருக்கிறது. மதத்துக்கும் இதுதான். ஆக ஒரு சாதிக்கட்சி மிக விரைவாக உதிரிகளை ஒன்றிணைக்கிறது. வெகுஜன கட்சிகளுக்கு சவால் விடுக்கிறது. இயல்பாகவே இங்கு நிலைத்திருக்கும் சாதி உறுதியாக்கம் அவர்களின் ஒன்றிணைவை எளிதாக்குகிறது. இந்த ஒன்றிணைப்பு தான் அதிகாரத்தை நோக்கி நகரும் வழி என்று ஆகிவிட்ட பிறகு, அது மக்களிடம் மூர்க்கமான பிளவை முன்வைக்கிறது. இந்த சாதிய மூர்க்கத்தின் முன் வெகுஜன அரசியல் மண்டியிடுகிறது. ஜெயலலிதாவின், கருணாநிதியின் மவுனத்துக்குப் பின்னால் இருப்பது இந்த மண்டியிடும் மனநிலை தான்.
பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் போன்றவற்றை அரசியல் வழிமுறையாகக் கொண்ட இயக்கங்கள் தேர்தல் அரசியலின் பால் வேகமாக நடந்ததும், ஆனால் சமூகத் தளத்தில் அவை விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப யாருமே இல்லாது போனதும் நம் சூழலில் மிகப்பெரிய இழப்பு. இங்கு ஒப்புமைக் கருத்தியலே இல்லை. அதற்கு நாம் காந்தியையோ, பெரியாரையோ, அம்பேத்கரையோ நோக்கிதான் போக வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த கருத்தியல்களை முன்னெடுக்கும் தேர்தல் சாராத வெகு மக்கள் இயக்கங்கள் இன்று நம்மிடம் இல்லை. அந்த பெரும் வெற்றிடத்தை சாதி வெறிக் கட்சிகள் பங்கு போட்டுக் கொள்கின்றன. மதிப்பீடுகள் சிதைகின்றன.
அதிகாரத்தை நோக்கிப் போகும் எந்த கட்சியும், மண்டியிடத்தான் வேண்டும். அதன் மூலம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு பலன்களும் உண்டுதான். ஆனால் அவை மட்டும் போதாது. ஒரு வெகுஜன இயக்கம் அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரும்போது நிலவும் வெற்றிடத்தை நிரப்பும் ஆக்கப்பூர்வமான இயக்கங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இந்த கொலைகளைக் கட்டுபடுத்தும் சக்தி அவற்றிற்கு மட்டுமே உண்டு.
தொன்னூறுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரம் சமூகத் தளத்தில் ஏன் நெகிழ்வுகளை உண்டாக்கவில்லை என்பதை நாம் விவாதிக்க வேண்டும். அப்படியே நடந்த சில நெகிழ்வுகளிலும் கூட தலித்துக்கள் ஏன் பயன்பெற முடியவில்லை என்பதையும் நாம் கவனப்படுத்த வேண்டும். முதலாளித்துவம், ‘லட்சியவாத நீக்கத்தை’ தனது பண்பாகக் கொண்டது. இங்கு நிகழ்ந்த பொருளாதார முன்னேற்றங்களுக்கு நாம் கொடுத்திருக்கும் விலை என்பது, ஒரு பக்கம் கட்டற்ற சிந்தனையுள்ள மக்கள் திரளை உருவாக்கியதும் மறுபக்கம் எண்ணிலடங்கா உதிரிகளை உருவாக்கியதும் தான். ஆனால் இந்த இரண்டு தரப்புக்குமான உரையாடலையும், இணக்கத்தையும் நாம் தவற விடுகிறோம். இப்போது அதிகாரத்தில் இருக்கும் எந்த கட்சியும், இந்த பங்களிப்பை செய்யவே முடியாது. ஏனெனில் அவை கைகொண்டிருப்பது லட்சியவாதமற்ற அரசியல் மொன்னைத்தனம்.
சாதியப் படிநிலையை விதந்தோதுகிற, அதை பண்பாடு என்று கட்டமைக்கிற ஒரு வலது சாரி அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கிறது. லட்சியவாத நீக்கத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ கருத்தியலை அது தனது அரசியலுக்கு சாதூரியமாக பயன்படுத்துகிறது. தமிழில், சாதி வெறியர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிற கட்சிகளாக வெகுஜன அரசியல் சீரழிந்திருக்கிறது. அடிப்படையில் திமுக அனுதாபியும், அதிமுக அனுதாபியும் ஒரே நேரத்தில் கையைப் பிசையும் அபத்தம் அதனால் தான் இங்கு நிகழ்கிறது.
தேசிய அளவில் முற்போக்கு இயக்கங்கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன. தமிழக அளவில், மக்களிடம் பணியாற்றும் ‘தேர்தல் அரசியல்’ சாராத இயக்கங்களே இல்லை. இந்த வெறுமையைத்தான் பலரது கருத்துகளின் வழி நான் சமூக ஊடகங்களில் காண்கிறேன். . ஒரு அறிக்கையோடு மார்க்ஸியர்கள் மவுனமாகி விடுகிறார்கள். விஜயகாந்த், சீமான் போன்ற அரசியல் பொறுக்கிகள் சொல்வதற்கு ஒன்றுமே இருப்பதில்லை. சாதிய வன்மம் தலைவிரித்தாடுகிறது. ராமதாஸ் நிருபர்களின் கேள்வியை நக்கலாக எதிர்கொள்கிறார். மற்றைய சாதிக் கட்சிகள் இந்த வன்முறைக் கொலைகளைக் கண்டு உள்ளுக்குள் பூரிக்கின்றன. திருமாவளவனுக்கு தனது கூட்டணி உறுப்பினர்களுடன் இன்னும் இரண்டு கிலோமீட்டர்கள் நடப்பதைத் தாண்டி எந்த அரசியல் திட்டமும் கண்ணுக்குத் தெரியவில்லை.
அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று ஆகிவிட்ட நிலையில், சமூக இயக்கங்கள் என்பவை அதிகாரத்தை நோக்கி நகரும் படிநிலைகள் என்று ஆகிவிட்ட சூழலில், இங்கு ஒடுக்கப்பட்டவர்கள் எப்போதும் கைவிடப்பட்டவர்கள் தான். CCTV கேமராவை நிறுத்தி வைத்துக்கொள்வதுதான் அச்சமில்லாமல் வாழ்வதற்கான ஒரே வழி.
ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; சமூக அரசியல் விமர்சகர். இவருடைய வருவதற்கு முன்பிருந்த நிழல் (சிறுகதைகள்), சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டு நூல்கள் வெளியாக இருக்கின்றன. இரண்டும் எதிர் வெளியீடுகள்.
கொஞ்சம் நஞ்சமாவது சாதி ஒழிஞ்சிருக்குன்னா அதுக்குக் காரணமே முதலாளித்துவம்தான் (இந்தப் பதம் காலாவதியான மொழிபெயர்ப்பு என்பதை இப்போது விட்டுவிடுகிறேன்). முதலாளாத்துவம் வருவதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவம் இன்னும் கிராமங்களில் ஒழியாமல் இருப்பதால்தான் சாதி ஆதிக்கமே உயிர்வாழ்கிறது. முதலாளித்துவம் யார் என்ன சாதியில் பிறந்திருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவரவரின் உழைப்பு, திறமை இவற்றையே பார்க்கிறது. சங்கருக்கு முதலாளித்துவக் கம்பெனிதான் தகுந்த வேலையும் நல்ல சம்பளமும் தந்து உள்ளூர் ஆதிக்க சாதிக்காரர்களை அண்டிப் பிழைக்கத் தேவையற்ற சுதந்திர வாழ்வை அளிக்கும்.
LikeLike