ஆயிரம் காரணங்கள் அடுக்கினாலும் இதுவரை ஒரு கண்டனமும் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் படுகொலைக் பற்றி வாய் திறக்காதது எரிச்சலாக இருக்கிறது. இன்றும் திறக்கவில்லை எனில் திமுக இன்று வாக்கு வங்கியைக் கண்டும் அஞ்சும் கட்சி என்று தாரளமாக எண்ணிக்கொள்ளலாம்.
பெரியாரின் படங்கள் எல்லாம் கட்சி போஸ்டர்களில் குறுகிக் கொண்டே வந்து, இன்று காணாமலேயே போய்விட்டது ஒரு குறியீடு என்று தெரியாமல்போயிற்று .
கேப்டனின் கூட்டணிக்காக, ஜாக்டோ போராட்டத்திற்காக, அமிர்தலிங்கம் மனைவிக்காக, இந்திய அணி கோப்பையை வென்றதற்காக எல்லாம் அறிக்கை சூடாக வரும்வேளையில், மண்ணில் சுட சுட கொட்டப்பட்ட ரத்தத்திற்காக இதுவரை வாய்திறக்காதது கடுப்பாக இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் அதிமுக , ஜெயா ஏன் துரிதமாக பதிலளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய வாய்கள் கொஞ்சமாவது கலைஞரையும், ஸ்டாலினையும் கேட்க வேண்டும்.
அறிக்கை விட்டால் அதை அரசியலாக்கிவிடுவார்கள் என்றால், அப்புறம் என்ன ராஜதந்திரி, பழுத்த அரசியல்வாதி என்று அடைமொழி எல்லாம் ? “மின்சாரம் உற்பத்தி செஞ்சி மின்மிகை மாநிலம் ஆக்க என்கிட்ட திட்டம் இருக்கு..ஆனா வெளிய சொன்னா காப்பி அடிச்சிடுவாங்க” என்று சொன்ன கேப்டனின் அறிக்கைக்கும், அறிக்கைவிட்டா அரசியலாகிவிடும் என்று அனுதாபிகள் விடும் அறிக்கைக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது??
இன்றும் அறிக்கை வரவில்லை எனில் கேவலம். அறிக்கை மட்டுமல்லாது, இழப்பீடு, சாதி சங்கங்கள் கலைக்கப்படும் என்ற ஸ்திரமான தேர்தல் அறிக்கைகளை உடனே தேவை. இன்றேல் மன்னார்குடி கும்பல் என்று அதிமுவை திட்டுபதற்கு கூட திமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை.
உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்.