நேற்று நள்ளிரவில் சங்கரின் உடலைப் போலீசார் அடக்கம் செய்துள்ளனர். போலீசைப் பொறுத்த மட்டில் அவர்களுக்குஎவ்வளவு சீக்கிரம் பிரச்சினை இல்லாமல் விஷயத்தை முடிக்க முடியுமோ அவ்வளவு சீ்கிரம் முடிப்பது என்பதில்தான் குறியாய் இருப்பார்கள். அதுதான் இங்கு நடந்துள்ளது.
ஏழரை இலட்சம் ரூ இழப்பீடு தருவதாகவும், முதற்கட்டமாக ஐந்தே முக்கால் லட்சம் ரூ உடன் தருவதாகவும் சொல்லி செக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.. ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரும் இருந்துள்ளார். சங்கருடைய அப்பாவையும் தம்பியையும் கிட்டத்தட்ட வற்புறுத்தி அடக்கம் செய்வதற்கு சம்மதம் பெறப்பட்டுள்ளது. சமூக அக்கரை உள்ள தோழர் ஒருவர் இந்த விவரங்களைச் சொன்னார். சங்கரின் தம்பியிடம் விசாரித்தபோது , “என்ன செய்வது எல்லோரும் சொன்னாங்க,செக்கை வாங்கிக்க வேண்டியதாப் போயிட்டு” என்று கூறி இருக்கிறார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சங்கரின் மனைவிக்கு அருகில் அவரது உறவினர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரையும் பறிகொடுத்து, ஆதரவான யாரும் அருகில் இல்லாத கொடுமை. காவலுக்கு இருக்கும் போலீசார் அவரது உணர்வுகளை மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தார்களா தெரியவில்லை. கண்முன் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தன் கணவர் இறந்துவிட்டார் எனும் செய்தி தனக்குத் தெரியும் என அவர் கூறியுள்ளார்.
மருத்துவர்களைப் பொறுத்த மட்டில் யாராவது ஒருவர் மட்டும் பார்க்கலாம் எனச் சொன்னதால் தலித் விடுதலைக் கட்சித் தலைவர் செங்கோட்டையன் மட்டும் உள்ளே சென்று ஆறுதல் கூறி வந்துள்ளார்.
கௌசல்யாவின் தந்தை சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தியோடு கொலைகாரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இருவர் விசாரிக்கப்படுவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
எனக்குத் தகவல் கிடைத்தவுடன் சில பத்திரிகையாள நண்பர்களுக்குத் தகவல் சொன்னேன். DGP, Home Secy, சம்பவ இடத்தில் சட்டம் ஒழுங்குப் பொறுப்பேற்றிருந்த IG ஆகியோருக்கு,
“Sir, a humble request. I am Prof A.Marx, a human rights activist. The girl whose husband Sankar was murdered yesterday in Udumalpet wants to see her husband’s body once before he is crimated. She is now in a hospital in Coimbatore and I understand that she is fit enough for travel.Please do something sir”
எனக் குறுஞ் செய்தி அனுப்பினேன். (நேரம் இரவு மணி 10 – 50). அந்த நேரத்தில் அதுதான் செய்ய முடிந்தது. ஒரு வேளை அங்கு அக்கறையுள்ள தோழர்கள் போதிய அளவில் இருந்திருந்தால் சங்கரின் மனைவி வரும் வரை அடக்கம் செய்யாமல் தடுத்திருக்கலாம்.
கௌசல்யாவை நினைத்தால் இன்னும் வருத்தமாக உள்ளது. 19 வயது. கண்முன் கொடூரமாகக் கணவனும் கொல்லப்பட்டு, தன் வீட்டாரின் ஆதரவும் இல்லாமல்…
முகப்புப் படம்: இ.பாலகுமார்