சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த வின்சென்ட் சுமதி தம்பதியின் 3-வது மகனான 17 வயது முகேஷ், ஒரு சுமை தூக்கும் தொழிலாளி. வெள்ளிக்கிழமை இரவு, நள்ளிரவு 11 மணி அளவில் அப்பகுதிக்கு வந்த போலீஸார், வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த முகேஷை அடித்து உதைத்து காருக்குள் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவரது தலை, முகம் என உடம்பு முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
பிறகு, ‘நாம் தேடிவந்தது இவன் அல்ல’ என்று பேசிக்கொண்ட போலீஸார், முகேஷை துரைப்பாக்கம் அருகே சாலையிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். சாலையில் கிடந்தவரை அருகே இருந்தவர்கள் மீட்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்றி, அவரது வீட்டில் கொண்டுவந்து விட்டுள்ளனர்.
காயம் இருந்ததால் முகேஷை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். ‘போலீஸ் அடித்த தால்தான் காயம் ஏற்பட்டது என்று கூறக்கூடாது’ என அங்கு புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீஸாரும் அவர்களை வற்புறுத்தியுள்ளனர்.
வேளச்சேரி காவல் நிலையத்தில் இருந்து பேசிய ஒரு போலீஸ்காரர், ‘சம்பவம் குறித்து பிரச்சினை கிளப்பினால், முகேஷ் மீது பல வழக்குகள் தொடருவோம்’ என்று மிரட்டியிருக்கிறார்.
இந்நிலையில், முகேஷை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தாயார் சுமதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பத்திரிகையாளர் அ. குமரேசன், “சட்டத்துக்குப் புறம்பாகத்தான் இதெல்லாம் நடக்கிறது என்றால், சட்டத்தை அவமானப்படுத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை?” என கேட்கிறார்.
“சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த 17 வயது தலித் சிறுவனை வெள்ளிக்கிழமை (மார்ச் 11) இரவு 11 மணிக்கு வீட்டிலிருந்து போலிஸ்காரர்கள் பிடித்துச்சென்று அடித்து உதைத்திருக்கிறார்கள். போகிற வழியிலேயே, தவறான ஆளைப் பிடித்து வந்துவிட்டதாகப் பேசிக்கொண்டு, சிறுவனை வழியிலேயே கல்லும் முள்ளும் நிறைந்த இடத்தில் ரத்தக்காயங்களோடு போட்டுவிட்டு, பெருந்தன்மையோடு பத்து ரூபாய் கொடுத்து, “பஸ் பிடித்து வீட்டுக்குப் போய்விடு… நடந்ததை வெளியே சொல்லாதே…” என்று சொல்லிவிட்டுப் போனார்களாம். பையனின் முணகல் கேட்டு வழியில் சென்றவர்கள் உதவிசெய்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அடிபட்ட சிறுவனின் தந்தையிடம், “இதைப் பிரச்சனையாக்கினால் பையன் மேல நிறைய கேஸ்களைப் போட்டுவிடுவோம்,” என்ற போலிஸ் ஸ்டேஷனிலிருந்து அன்பான அறிவுரை கூறினார்களாம்.
சரியான பையனைத்தான் பிடித்துச் சென்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம், இப்படிக் கொண்டுசெல்லும் வழியிலேயே அடித்து உதைத்துக் காயப்படுத்தும் அதிகாரத்தை போலிஸ்காரர்களுக்கு யார் கொடுத்தது?
அந்தப் போலிஸ்காரர்கள் அப்போது குடித்திருந்ததாகக் கூறப்படுகிறது. குடிப்பதற்கு ஊற்றிக்கொடுத்த யாரோ ஒரு ஆசாமிக்கு விசுவாசமாகத்தான் இந்த அதிகார மீறல் நடந்ததா?
சிறார்ப் பருவத்தில் இருப்போர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சட்ட விதிகளைத் தூசியென மதித்து ஒதுக்கும் துணிவு எப்படி வந்தது?
சட்டத்துக்குப் புறம்பாகத்தான் இதெல்லாம் நடக்கிறது என்றால், சட்டத்தை அவமானப்படுத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை?
ரோஹித் வெமுலா, முகேஷ் என யாரானாலும் அதிகாரக் கரங்கள் இப்படிக் குதறுவதற்குத்தான் நீளுமா?
சாதிய இழிவுகளும் அதிகார மீறல்களும் ஒழிக்கப்பட்ட பெருமைமிகு நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பைப் பகிர்ந்துகொண்டால் அது தேசப்பற்றா, தேசத்துரோகமா?” என்று கேள்வியை முன்வைக்கிறார் அவர்.