இன்றைய தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும் தவிர்க்கப்படாமல் வந்திருக்கும் செய்தி “மாணவனுடன் ஓடிய ஆசிரியர் கைது”; “ மாணவனுடன் ஓடிய ஆசிரியை சிக்கினார்” என்று இந்தச் செய்தியில் தொடர்புடைய பெண்ணை மிகக் குறிய மனோபாவத்துடன் எதிர்மறையாக எழுதியிருந்தனர். எந்தவொரு ஊடகமும் இதிலிருந்து தப்பவில்லை. விட்டால், இவர்களே தீர்ப்பு எழுதி, அந்தப் பெண்ணை கல்லால் அடித்துக் கொள்ளுங்கள் என தாலிபான் பாணியில் உடனடி நீதியும் தண்டனையும் அளித்திருப்பார்கள்.
அந்தப் என்ற பெண், எம். எஸ்ஸி படித்தவர். இவருடைய வயது என்ன என்பதை ஒரு ஊடகம் 29 என சொல்லிகிறது. ஒரு ஊடகம் 23 வயது என்கிறது. அவரவருக்குக் கிடைத்த ‘செய்தி’படி அவரவருடைய வக்கிரத்தின் அளவுப்புப் படி அந்தப் பெண்ணின் வயதை எழுதியிருக்கிறார்கள். அதுபோல, அந்த இளைஞர், பத்தாம் வகுப்புப் படிப்பவர்கள். பத்தாம் வகுப்பு படிப்பவர் என்பதாலேயே அவருடைய வயது 15 அல்லது 16 இருக்கலாம் என்கிற முடிவுடன் எழுதுகிறார்கள். அடுத்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் போட்டு, வக்கிரத்தை வெளிப்படுத்துகிறவர்கள், ஆணின் பெயரைக் கூட எழுத தயங்குகிறார்கள்.
இந்த ஊடகங்கள் தரும் உடனடி தீர்ப்புகள் இவைதான்.
- அந்தப் பெண் பாலியல் இச்சை கொண்டவர். அந்தப் பையன் அப்பாவி. அந்தப் பெண் தான் பையனை ‘மயக்கி’ அழைத்து போயிருக்கிறார்.
-
அந்தப் பெண் 29 வயதாகியும் திருமணமாகாமல் இருந்ததால்தான் மாணவனை இழுத்துக் கொண்டு போய்விட்டார். (உண்மையில் அந்தப் பெண் யூகேஜி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பவர். அவர் பணியாற்றிய பள்ளியில் அந்த இளைஞன் படித்திருக்கிறார்)
ஒரு ஆணும் பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த இளைஞனுக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை. ஆனால் 16 வயது நிரம்பிய ஆண் பாலியல் உறவு கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. எனவே, இது அவர்கள் இருவருடைய தனிப்பட்ட முடிவு; தேர்வு. விஷயம் அதோடு முடிந்துவிட்டது.
ஏதோ மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்துவிட்டது போல ஊடகங்கள் அவர்கள் இருவரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி, குறிப்பாக அந்தப் பெண் குறித்து அவதூறுகளை செய்வது எவ்வகையான ‘தாலிபானிய’ ஊடக அறம்? அவர்கள் ஊரைவிட்டுப் போனதிலிருந்து தனிப்படை அமைத்துத் தேடிய போலீஸைவிட ஊடகங்களின் ஃபலோ அப் துரத்தல்கள்தான் அதிகமாக நடந்தன.
தமிழகத்தில் எத்தனை படுகொலை, கொடூர குற்ற வழக்குகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றன. அவற்றையெல்லாம், தோண்டித் துருவிப் பார்த்தனவா இந்த ஊடகங்கள்? ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டால் அவளுடைய படத்தைப் போடக்கூடாது என்பது ஊடகங்களுக்கு நீதித்துறை வகுத்திருக்கும் விதி. ஆனால், தமிழகத்தின் நம்பர் ஒன் நாளிதழ் தினத்தந்தி, அந்தப் பெண்ணின் புகைப்படம், குறிப்பாக பாலியல் வல்லுறவால் உருக்குலைந்த பெண்ணின் படத்தைப் போட்டு, அந்த சம்பவம் நடந்த விதத்தை உச்சுக்கொட்டிக் கொண்டு எழுதுகிறது. அந்தப் பெண்ணின் முகவரி முதல் கொண்டு எல்லாவற்றையும் அந்தச் செய்தியின் ஊடாக சொல்லிவிடுகிறது. டெல்லியில் பாலியல் வல்லுறவு ஆளாக்கப்பட்டு உலகம் முழுவதும் கண்டனத்துக்கு உள்ளான அந்தப் பெண்ணின் பெயரைக்கூட இன்னமும் சொல்லாமல் நிர்பயா என்று எழுதுகிறவர்கள்தான், நாமக்கல்லில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால் அவரைப் பற்றி முழுவிலாச கதையை எழுதுகிறார்கள்.
இவர்களின் ஊடக அறம் என்ன? மக்களின் செய்தி நுகர்வு இப்படித்தான் இருக்கிறதா? பாலியல் வல்லுறவுகளை பற்றி விவரணையாக எழுதுபவர்களையும் ரசித்து படிப்பவர்களையும் பாலியல் வல்லுறவுகளைச் செய்யும் குற்றவாளிகளுடன் ஒப்பிடலாமா? இந்தக் கூட்டு மனநிலையை எப்படி வரையறை செய்வது?
முற்போக்காளர்கள் என்று கருதுபவர்கள் கூட தினமலர் வார்த்தைகளில் தான் எழுதுகின்றனர். தாலிபான் அறம், தாலிபான் பாணி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் மிக மோசமான கொடுமையான தீர்ப்புகளும், செயல்களும் சாதிவெறியர்களாலும், மதவெறியர்களாலும் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் நடத்தப்படவே இல்லையா? நடத்தப்பட்டுள்ளது என்பது இதழியலாளர்கள் அறிந்தது தான். ஆனால் இஸ்லாமைக் குறி வைத்து மேற்கத்திய ஊடகங்களில் சியோனிஸவாதிகளும் இந்திய ஊடகங்களில் பார்ப்பனீயவாதிகளும் எழுதி எழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைத் தான் இந்த மாதிரியான சொல்லாடல்கள் நிரூபிக்கிறது. பார்ப்பனீயம் தொடர்ச்சியாக வெற்றிபெற்றே வருகிறது எல்லா இடங்களிலும்..
LikeLike
உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. உங்களுடைய கருத்தில் உடன்படுகிறோம். இனி இப்படியான சொல்லாடல்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறோம். நன்றி…
LikeLike
தாலிபான் பெண்களை ஒடுக்கியதுதானே? அதைத்தானே எழுதியிருக்கிறீர்கள்? உண்மையைச் சொன்னால் யாருக்கு என்ன பிரச்சினை? நீங்கள் ஒன்றும் இஸ்லாம் பெண்களை ஒடுக்கியது என்று சொல்லி ஒரு மதத்தையே தாக்கவில்லை. பயங்கரவாதிகள் வேறு, சாதாரண மனிதர்களின் மத நம்பிக்கை வேறு. முன்னதைக் கண்டிக்கவே வேண்டும். ‘தாலிபானியம்’ என்ற சொல்லாடலையே தொடர்ந்து பயன்படுத்துங்கள்!
LikeLike
மிக்க
நன்றி.
LikeLike