என் முதல் பணியை வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகராகத்தான் தொடங்கினேன்.அதில் நான் கண்ட அனுபவங்கள் ஒரு முழு வாழ்க்கைக்குப்போதும். காவல்துறை, நீதிமன்றம்,அரசு மருத்துவமனை தீக்காயத்துறை, பிணவறை என்று சகல சிக்கல்களும் நிறைந்த துறை அது.
அதில் ஒரே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு உயர்த்திக் கொண்ட சமூகத்தைச்சேர்ந்த பெண். இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறித் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையின் மூலம் தற்காலிகத் தங்கும் விடுதிக்கு அழைத்து வரப்பட்டார்கள்.காரணம் கணவர் தொடர்ந்து குடித்து குடி நோயாளியாய் மாறிப் போயிருந்தார். சம்பவத்தன்று குடித்து விட்டு 13 மற்றும் 10 வயது பெண் குழந்தைகளின் முன் பாலியல் வல்லுறவு கொண்டிருக்கிறார். மறுத்த மனைவியை பலமாக அடித்திருந்தார். குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தன. அதன் பின் பல்வேறு நடவடிக்கைகள், ஆற்றுப் படுத்தல் எல்லாம் நடந்தது.
இதை ஏன் நான் பகிர்கிறேன் என்றால் மனேகா காந்தி குறிப்பிடுவது போல் திருமணத்திற்குள் பாலியல் வல்லுறவு என்பது ஏழைகளின் மத்தியில், படிப்பறிவு அற்றவர்கள் மத்தியில் மட்டும் நடப்பதல்ல. சமீபத்தில் குடும்ப வன்முறைக்கு உள்ளான மிகப் பிரபலமான பாலிவுட் நடிகைகளைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தேன். அது ஒரு மிகப் பெரிய பட்டியல். பணமும், புகழும் உள்ள பெண்களுக்கே அதுதான் நிலை. அதில் கணவர் மட்டுமல்லாமல் இணைந்து வாழும் ஆண்களிடமும் வன்முறைக்கு ஆளாகியிருந்தனர். எனவே திருமணத்திற்குள் பாலியல் வல்லுறவை கலாச்சாரப் போர்வையில் நியாயப்படுத்துவது அக்கிரமம்.
Marital Rape is a serious crime.Don’t ever justify it in the name of culture and mindset !
கீதா நாராயணன், சமூக செயற்பாட்டாளர்.