தமயந்தி

உயிர்மையில் இமையத்தின் கதை படித்தேன்…துபாய்காரன் பொண்டாட்டி. பெண்களின் கதையை , வாழ்க்கையை பெண்கள் மூலமாகவே சொல்லி பெண்களை சாவடிக்கும் கதை.
இன்னொருவனுடன் இருந்த, அவனாலேயே அவமானப்படுத்தப்பட்ட துபாய்காரன் பொண்டாட்டி என்ன செய்ய வேண்டும்? அவனோடு படுத்தாயே என்று முலையை அடிக்க வேண்டும். தண்டவாளத்தில் தலை வைத்து சாக வேண்டும்.
துபாய்காரன் வீட்டுக்கு வருகிறான். எதுக்கு வருகிறான்.. விஷயம் தெரிந்தா என்று பயப்படும் பத்மாவதி இப்படி நினைக்கிறாள்…” எடுத்ததுமே அடிப்பானா……எது செய்தாலும் தடுக்க முடியாது. ஊர் மெச்ச தாலி கட்டியவன். அவனைக் குறை சொல்ல முடியாது”
அடுத்து மாலதி என்பவளும் இப்படி ஒருவனுடன் இருக்கிறாள். ஆனால் ” தெருவில் நடக்கும் போது உத்தமி தங்கம் மாதிரி நடப்பாள்”..
தொடர்பு வைத்துக் கொண்ட ஆண்கள் செருக்கோடு அலைவார்கள். படுத்ததைப் பற்றி பொதுவெளியில் கூச்ச நாச்சமின்றி பேசுவார்கள். ஆனால் பத்மாவதிகள் மட்டும் தண்டவாளத்தில் சாவார்கள்.
பத்மாவதியை அவள் புருஷன் கட்டினதுக்கு காரணம் இரண்டு. ஒன்று அவளுக்கு வடிவான முகம். அடுத்தது அவளுக்கு பெரிய முலை.
இப்படி தான் ஜெயகாந்தன் என்பவரும் பெண்கள் மேல் மட்டும் நீரூற்றி ஒரு டேஷ் கதையை எழுத அக்கினி பிரவேசமே என்று ஜக்கியின் உச்சநிலையை போல சமூகம் புரட்சி என்று ஏற்றது.
பெண்கள் வாழ்க்கையில் புகுந்து ஆண் பார்வையில் அவளை சாகடிப்பவர்களை மன்னிக்கவே முடியாது.
பி.கு. இந்தப் பதிவை என் சுயநினைவோடும் நீண்ட யோசனைக்குப் பிறகுமே எழுதுகிறேன். இமையத்தின் இக்கதைக்கு என் கண்டனங்கள். எனக்கு இதுகுறித்து அறிவுரைகள் தேவையில்லை.
தமயந்தி, எழுத்தாளர்; ஊடகவியலாளர்.