கடன் தவணை கட்டவில்லை என்று விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸார் என செய்திகள் வெளியிடும் பல ஊடகங்கள், விவசாயி எந்த வங்கியில் கடன் வாங்கினார் என சொல்லவேயில்லை. ‘தனியார் வங்கி’ என்றே அந்த வங்கியை விளித்தனர். போலீஸாருக்கு மட்டும் பங்கு இருப்பதாகக் காட்டி, அந்த தனியார் வங்கியின் சரிபாதி குற்றத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. போலீஸ் தரப்பில் கருத்து கேட்ட ஊடகங்கள், அந்த தனியார் வங்கியிடம் கடன் தவணை கட்டத் தவறினால் இப்படித்தான் அராஜகத்தை ஏவி விடுவீர்களா என கேட்கவில்லை. இத்தனைக்கு அந்த விவசாயி கட்ட வேண்டியது ஒரே ஒரு தவணைதான். இதற்கு முன் அவர் சரியாக கட்டி வந்திருக்கிறார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை இங்கே தருகிறோம்:
“தஞ்சை மாவட்டம் சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பாலன் என்பவர் கோட்டாக் மகேந்திரா என்ற தனியார் நிதிநிறுவனத்திடம் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். வாங்கிய கடன்ரூபாய் 3,80,000, இதுவரை 6 தவணைகளில் ரூபாய் 4,11,200 ரூபாய் திரும்ப கட்டியுள்ளார். இன்னும் இரண்டு தவணைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இந்தநிலையில், நிதி நிறுவன வங்கி நிர்வாகம் காவல்துறையில் புகார் செய்துள்ளது. காவல்துறையினர் எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளாமல், மார்ச் 4ஆம்தேதி டிராக்டரில் சென்ற பாலனை பொது இடத்தில் கடுமையாக தாக்கி டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
காவல்துறையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்ட பாப்பாநாடு காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்த டிராக்டரை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். விவசாயியை அவமானப்படுத்தும் வகையில் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறையை ஏவிவிட்ட நிதி நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வற்புறுத்துகிறது”
‘அடிக்காதீங்க, அடிக்காதீங்க சார்’ என கதறும் விவசாயியை ஊரார் முன்னிலையில் அடித்து இழுத்துக் கொண்டுபோகிறது காவல்துறை. அப்பட்டமான மனித உரிமை மீறல் இது. வங்கி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறையை ஏவிட்டிருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி, உயர்நீதிமன்ற ஆணைப்படியே செயல்பட்டதாகக் கூறினார். இதே உயர்நீதிமன்றம்தான் திருநாள்கொண்டசேரியில் தலித் முதியவரின் பிணத்தை பொதுப் பாதையில் எடுத்துக்கொண்டு போய் புதைக்க உத்தரவு போட்டது. அந்த உத்தரவையும் மீறி காவலர்கள் வேறு பாதையில் முதியவரின் பிணத்தை புதைத்தார்கள். ஆக, காவல்துறை என்பது சாதியவாதிகளுக்கும், கார்போரேட்டுகளுக்கும் பாதுகாப்புக் கொடுக்கத்தானா?
குற்றச்செயல்களில் தொடர்புபடுத்தும் போது தனியார் கல்லூரி, தனியார் மருத்துவமனை, தனியார் வங்கி, தனியார் பள்ளி என குறிப்பிடுவது எவ்வகையான ஊடக அறம்? யாரைக் காப்பாற்ற இந்த அறம் முன்வைக்கப்படுகிறது? ஊடகங்கள் யாருக்காக செயல்படுகின்றன? நடுநிலை ஊடகம் என்பதன் பொருள் பெயரே குறிப்பிடாமல் குற்றவாளியை மூடி மறைக்க உதவுவதா?