
தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இனி ஜெயா அரசு காபந்து அரசுதான். இன்னுமா விகடனாருக்கு பயம்?
அண்ணன் ப.திருமாவேலன் அவர்கள் இவ்வார விகடனில் எழுதியிருக்கும் ’இன்னும் எத்தனை நாடகங்கள்?’ கட்டுரை, ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஈழப்பிரச்சினையில் ஒரே தராசில் சரிக்கு சமமாக நிறுத்திவைக்க முயற்சிக்கிறது. மநகூ என்கிற அதிமுகவின் ‘பீ’ டீம் செய்யும் அதே வேலையைதான் விகடனும் செய்கிறது.
ஈழப்பிரச்சினையில் கலைஞர் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேரெதிரான கருத்தை ஜெ. சொல்லுவார் என்று கட்டுரை சொல்கிறது. உண்மைதான். கலைஞர் இதைப்பற்றி வாயை திறந்தாலே, ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அம்மையார் ஓலமிடுவது வாடிக்கைதான். ஆனால், அதே ஜெ. நாடகத்துக்காகவாவது ஈழத்தமிழர் மீது அக்கறை கொள்வது போல நடவடிக்கைகள் எடுத்தபோது, அதை கலைஞர் எப்போதாவது எதிர்த்ததுண்டா? சட்டமன்ற தீர்மானமாக இருந்தாலும் சரி. பிரதமருக்கு கடிதமாக இருந்தாலும் சரி. ஈழ ஆதரவு என்றால், அதை ஜெ. செய்வதாகவே இருந்தாலும் கலைஞர் தொடர்ச்சியாக ஆதரித்துதானே வந்திருக்கிறார்? பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி இருக்கும் யாராவது இதை மறுக்க முடியுமா?
2000ஆம் ஆண்டு திமுக அமைச்சரவை எடுத்த முடிவை இப்போது விமர்சிக்கிறது விகடன். அன்று இருந்த சூழல் என்ன, இன்று இருக்கும் சூழல் என்ன. பிரச்சினை உச்சநீதிமன்றம், குடியரசுத்தலைவர் என்று மேக்ரோ சைஸில் இருந்தபோது நளினிக்கு மட்டுமாவது தண்டனையை குறைத்தாரே கலைஞர்? அதை மறுக்க முடியுமா? அதனால்தானே ’கலைஞரின் கைமாறு’ என்று ’கண்ணம்மா’ படத்தை முன்வைத்து விமர்சித்து மீண்டும் திமுகவை பயங்கரவாதக் கட்சியாக மக்களிடையே பிரச்சாரம் செய்தது அதிமுக. ஈழத்தமிழருக்காக உயிரையே விட்டு விட்டதை போல இன்று ஒப்பாரி வைக்கும் கட்சிகளும் தலைவர்களும் அன்று புரட்சித்தலைவி ஈழத்தாயின் அணிவகுப்பில்தானே அட்டெண்டன்ஸில் நின்றுக் கொண்டிருந்தார்கள்?
முத்துக்குமாரின் தியாகத்தை அதிமுகவுக்கு ஆதரவான அரசியல் ஆதாயமாக மாற்றியவர்கள் இன்று அவனது பெயரை உச்சரிக்க தகுதி கொண்டவர்கள்தானா?
பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு இழுத்து வந்து தூக்கில் போடவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவையும், என் தேசத்து இராணுவமாக இருந்தாலும் எம் இனத்தை கொன்றுவிட்டு வந்தவர்களை வரவேற்க செல்ல மாட்டேன் என்று முழக்கமிட்ட கலைஞரும் ஒன்று என்று சொல்லுபவர்கள் அயோக்கியவர்கள் அல்லாமல் வேறு என்ன?
2006-11 காலத்தில் ஈழப்பிரச்சினையை முன்வைத்து கலைஞரை மிகக்கடுமையாக வசைபாடியவர்களை நோக்கி, ஜெ. பற்றி எதுவும் சொல்வதில்லையே என்று கேட்டால், “இப்போது ஆட்சியில் இருப்பவரை பற்றிதான் விமர்சிக்க முடியும்” என்று சப்பைக்கட்டு கட்டினார்கள்.
2011ல் இருந்து கலைஞரா ஆட்சியில் இருக்கிறார்? ஜெயலலிதாவின் ஈழத்தாய் நாடகங்களை பற்றி பேசும்போதும் கூட கலைஞரை துணைக்கு இழுத்துக் கொள்ளுவது என்பது பச்சையான வைகோத்தனம். திராவிட இயக்கத்தை வேரறுக்க பார்ப்பனீயம் வகுத்த திட்டங்களின் செயல்பாடுகள்தான் எம்.ஜி.ஆரும், வைகோவும். அவர்களை போலவே செயல்படுபவர்களும் பார்ப்பனீயத் திட்டத்தின் அங்கங்கள்தானோ என்றுதான் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.
விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்றும் கலைஞர்தான் தண்டிக்கப்பட்டார். அவர்களை ஆதரிக்கவில்லை என்றுகூறி தமிழினத் துரோகி ஆக்கப்படுவதும் அவர்தான். ஒரு பிரச்சினையில் ஒரே தலைவரின் மீது இருவேறு நேரெதிர் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்றால் அது கலைஞரின் மீதுதான்.
2009ல் திமுக மீது வைக்கப்பட்ட ஈழவிமர்சனங்களை அக்கட்சியினரோ, அக்கட்சியின் அனுதாபிகளோ சரியான முறையில் எதிர்கொள்ளவில்லை. அந்த சூழல் அப்படி. இன்றைய சூழல் வேறு. ஈழம் என்கிற கருத்தாக்கத்தை வணிகமாக்கி கொழித்துக் கொண்டிருப்பவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டிய கடமை நிஜமான இன உணர்வாளர்களுக்கு இருக்கிறது. வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன், சீமான் என்று அந்தப் பட்டியல் நெடியது. இவர்களால் ஈழத்தமிழர்களுக்கு கிஞ்சித்தும் பிரயோஜனமில்லை என்றாலும், ஈழத்தின் காட்பாதர்களாக இவர்களை கட்டமைப்பது திராவிட சமூகநீதி செயல்பாடுகளை முடக்க நினைக்கும் பார்ப்பன சதி என்பதை அம்பலப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.
அதன் முதல்படியாக ‘ஜெ.வும் கலைஞரும் ஒன்று’ என்று பம்முபவர்கள் அயோக்கியர்கள் என்பதை தரவுகளோடு ஒவ்வொரு முறையும் உரக்கச் சொல்லுவோம்!
யுவகிருஷ்ணா, பத்திரிகையாளர்; வண்ணத்திரை இதழின் ஆசிரியர்.