தேர்தல் வருவதை ஒட்டி, சென்னை முழுவதும் சிதைந்து சீரழிந்து கிடந்த சாலைகளை செப்பனிடும் பணியில் சென்னை மாநகராட்சி மும்முரமாக இறங்கியுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சியின் ஆர்வக்கோளாறு காரணமாக, காயாத பச்சை சிமென்ட்டில் கால் பதித்து நடந்து, வழுக்கி விழுந்து என்று, பொது மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர்.
அமிஞ்ஜிக்கரை பகுதியில் உள்ள அருணாச்சலபுரத்தில் இரண்டு நாட்களுக்கு முன், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவில் சாலை போடத்துவங்கி, அதிகாலை நான்கு மணியளவில் அந்த பணியை முடித்திருக்கின்றனர் மாநகராட்சி ஊழியர்கள்.காலையில் வீட்டை விட்டு வெளியே வந்த, அந்த பகுதிவாசிகள், தங்கள் வீடுகளின் முன்னால் பதிக்கப்பட்டிருந்த, காயாத சிமின்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வேறு வழியில்லாமல், அந்த காயாத சிமின்ட்டில் கால் பதித்து, கால் புதைத்து, கால் வழுக்கி என்று பல சாகசங்களை செய்தபடியே நடந்து சென்றுள்ளனர். அது மட்டுமல்லாமல், அந்த சாலை முழுவதும் கால்தடங்கள் பதிந்து, புதிய சாலை மாதிரி அல்லாமல், சிதைந்த சாலை போல காட்சியளிப்பதையும் மேல உள்ளே புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.
****
அது மட்டுமல்லாமல், முக்கிய பகுதிகளில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களில் மட்டும் புத்தம் புதிய சாலைகள் போட்டுவிட்டு, பிற பகுதிகளை அம்போவென விட்டுச்செல்வதும் நடக்கிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
****
அது மட்டுமல்லாமல், ஆறு மாதத்திற்கு முன்னர் போடப்பட்ட புதிய சாலைகள் மீதே, மீண்டும் புதிய தார் பதித்து, சாலைகளின் உயரத்தை அதிகரித்து விடுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
****
கேகே நகரில் முக்கிய சாலையை புதுப்பித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், அவசரத்தில் மழை நீர் செல்வதற்கான குழிகளை கூட தார் வைத்து அடைத்து சென்றிருப்பதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். ஐந்து வருட ஆட்சியின் கடைசி ஒரு மாதத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும் இது போன்ற செயல்களால் அதிருப்திதான் ஏற்படும் என்றும் சென்னை நகர மக்கள் கூறுகின்றனர்.
*Source: with Inputs from DC, TOI.