பெங்களூரு கழிவில் மிதக்கும் நகரம்!

வா. மணிகண்டன்
வா. மணிகண்டன்
அல்சூர் ஒரு காலத்தில் தமிழர்களின் பேட்டை. இப்பொழுதும் கூட தமிழர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் இங்கே ஒரு வீடு வைத்திருந்தாராம். பங்களா. அவரிடம் சாவியை வாங்கிக் கொண்டு அந்தக் காலத்து நடிகர்கள் வந்து குடித்து கும்மாளமடித்துவிட்டுச் செல்வார்களாம். மலை வாசஸ்தலத்தைப் போன்ற குளிரும் மரங்களும் பெங்களூருவை நோக்கி நடிகர்களை ஈர்த்திருக்கின்றன. அவை தவிரவும் ஏகப்பட்ட காரணங்கள் இருந்திருக்கக் கூடும். யாருக்குத் தெரியும்? கும்மாளமடிப்பதோடு நில்லாமல் வீட்டை நாறடித்து விடுவார்களாம். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு ‘இவனுக சங்காத்தமே வேண்டாம்’ என்று கவிஞர் வீட்டை விற்றுவிட்டார்.
இதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுது அலுவலகத்தைவிட்டே வெளியில் வர முடிவதில்லை. கசகசப்பும் சூடும் ஆளைச் சுருட்டிவிடுகின்றன. பொழுது சாயாமல் வெளியே செல்வதில்லை. ஆனால் நேற்று செல்ல வேண்டியிருந்தது. அல்சூர் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துப் போயின. பெங்களூரை ஏரிகளின் நகரம் என்பார்கள். திரும்பிய பக்கமெல்லாம் ஏரிகள்தான். ரியல் எஸ்டேட்காரர்கள் மூடியவை போக மிச்சமிருக்கும் அத்தனை ஏரிகளிலும் சாக்கடைகளைக் கலக்குகிறார்கள். அல்சூர் ஏரியும் விதிவிலக்கில்லை. அப்படிக் கலந்த சாக்கடையில் என்ன வந்ததோ தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கான மீன்களுக்கு பால் ஊற்றிவிட்டார்கள். வெக்குடு வெக்குடு என நடை வைத்தால் அலுவலகத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில் ஏரியை அடைந்துவிடலாம். நான் செல்லும் போதே நிறைய ஆட்கள் மீன்களை வழித்துச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அதன் பிறகும் ஏகப்பட்ட மீன்கள் மிதந்தன. வழித்துச் சென்ற ஆட்கள் மாநகராட்சியின் ஊழியர்களாக இருக்கக் கூடும் என நினைத்தேன். ஆனால் மீன் வியாபாரிகளாம். திக்கென்றிருந்தது. எத்தனை பேருக்கு வயிற்றுப் போக்கும் வாந்தியும் வரப் போகிறதோ தெரியவில்லை.
எங்கள் வீட்டுப் பக்கத்திலும் ஒரு ஏரி இருக்கிறது. நாங்கள் குடி வந்த புதிதில் பரிசலில் சென்று மீன் பிடிப்பார்கள். இப்பொழுது யாரும் மீன் பிடிப்பதில்லை. திடீரென்று ஒரு நாள் சிலர் வந்து ஏரியில் ஒரு துளையிட்டு சாக்கடை வழியாக தண்ணீர் வெளியேறும்படி செய்தார்கள். ‘எதுக்கு ஏரி நீரை சாக்கடையில் வெளியேற்றுகிறார்கள்’ என்று குழப்பமாக இருந்தது. ஆனால் எளிமையான சித்தாந்தம். வேறொரு சாக்கடை வழியாக வரும் கழிவு நீர் ஏரியில் கலக்கிறது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே போகும் அல்லவா? அதனால் இன்னொரு பக்கம் துளையிட்டு இன்னொரு சாக்கடையில் திறந்துவிடுகிறார்கள். இந்தச் சாக்கடை இன்னொரு ஏரியில் கலக்கும். அந்த ஏரியில் திறந்துவிடப்படும் நீர் மற்றொரு ஏரியில் கலக்கும். சங்கிலித் தொடர் இது.
பெங்களூர் உண்மையிலேயே நாறிக் கொண்டிருக்கிறது. டன் கணக்கான குப்பைகளை புறநகர் கிராமங்களில் குவிக்கிறார்கள். சில கிராமங்களில் எதிர்ப்பு பெருகவும் நகரங்களிலேயே ஆங்காங்கு கொட்டி வைக்கிறார்கள். பிரதான சாலைகளில் செல்லும் போது இவை கண்களுக்குப் புலப்படுவதில்லை. பிரதான சாலைகளின் சந்துகளிலும் பொந்துகளிலும் நிரப்பி வைக்கிறார்கள். வாழ்வதற்கு தகுதியற்ற நகரங்களின் பட்டியலைத் தயாரித்தால் பெங்களூர் விரைவில் சேர்ந்துவிடும் என நம்பலாம். முப்பது வருடங்களில் ஒரு ஊரை சீரழித்து சின்னாபின்னப்படுத்தி நாறடித்த பெருமை நமக்கு மட்டுமே உரித்தாகுக.
தொலையட்டும்.
அல்சூர் ஏரிக்கு மாநகராட்சி ஊழியர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். இனி யாரையும் மீன் வழிக்க அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி அதிகாரிகள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் ஏரிக்குள் யாரும் சென்றுவிடாதபடிக்குத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அது செல்லப்பனுக்கு பெரிய தொந்தரவாக இருந்தது. செல்லப்பன் மீன் வியாபாரி. அல்சூரில் மீன் கிடைப்பதாக யாரோ தகவல் கொடுக்க பொம்மசந்த்ராவிலிருந்து மிதிவண்டியில் வந்திருந்தான். பொடியன். பதினைந்து வயதுக்குள்தான் இருக்கும். எப்படியும் இருபது கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் அது. அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருந்தவனை ஏரிக்குள் விடாமல் தடுத்தால் கடுப்பாகத்தானே இருக்கும்? அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக அலை மோதிக் கொண்டிருந்தான்.
‘இந்த மீனை விக்கப் போறியா தம்பி?’ என்றேன்.
ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு ‘ஆமாம்’ என்றான்.
‘நீ எந்த ஊரு?’
‘கிருஷ்ணகிரி பக்கம்…’ அதற்கு மேல் பேசுவதற்கு விருப்பமில்லாதவனாக இருந்தான்.
ஏரிப்பக்கமாக சில செய்தியாளர்கள் வந்திருந்தார்கள். வேறு சில கல்லூரி மாணவர்களும் வந்திருந்தார்கள். சாம்பிளுக்காக சில மீன்கள் தேவைப்படுகிறது என்று மாணவர்கள் கேட்டார்கள். ‘ஒரு மீனைக் கூட நீங்க எடுக்கக் கூடாது’ என்று மாநகராட்சி ஊழியர் கர்ஜித்தார். அதற்கு மேல் சுவாரசியமான சம்பவம் ஏதும் நடக்கப் போவதில்லை எனத் தோன்றியது. கிளம்புவதற்கு ஆயத்தமான போது செல்லப்பனும் இனி மீன்களை வழிக்க வாய்ப்பேயில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கக் கூடும். மிதிவண்டியை கிளப்பினான்.
‘கிருஷ்ணகிரியில் மீன் கிடைக்காதா?’ என்று மீண்டும் பேச்சைத் தொடர விரும்பினேன். அந்தக் கேள்வியின் அர்த்தம் ‘எதற்காக பெங்களூரில் இருக்க?’ என்று கேட்பதுதான். அவன் எப்படிப் புரிந்து கொண்டான் என்று தெரியவில்லை. ‘உங்க ஊரில் உங்களுக்கு வேற வேலை கிடைக்காதா?’ என்றான். அவர் சலிப்பையெல்லாம் என்னிடம் காட்டுவதாகத் தோன்றியது. ‘அப்படி இல்லை’ என்று சிரித்து சமாதானப்படுத்தினேன். அந்த பதில் அந்தச் சமாதானம் அவனுக்குத் திருப்தியளித்திருக்கக் கூடும்.
அவன் வசிக்கும் அதே பொம்மசந்த்ராவில் திருவண்ணாமலைக்காரர்கள் கோழி கொண்டு வந்து விற்றதாகச் சொல்லிவிட்டு ‘வெடக்கோழி வேணும்ன்னு கேட்டேன்…எல்லாமே சேவலா கொடுத்துட்டு போய்ட்டாங்க’ என்றேன். அதன் பிறகு வழிக்கு வந்துவிட்டான். சிரித்துக் கொண்டே ‘இந்த ஊர்ல ஈஸியா ஏமாத்திடலாம்’ என்றான். ஐடிக்காரர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் சொல்லியிருக்க வேண்டும்.
‘செத்த மீனை எடுத்துட்டு போய் நீ ஏமாத்துற மாதிரியா?’ என்று கேட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் கடுப்பாகிவிடுவான் என்று எதுவும் கேட்கவில்லை.
செல்லப்பனின் குடும்பம் கிருஷ்ணகிரியில் இருக்கிறது. இவன் மட்டும் வியாபாரத்திற்காக பெங்களூரு வந்துவிடுகிறான். இரண்டு மூன்று பையன்கள் வீடு பிடித்துத் தங்கியிருக்கிறார்கள்.  வெள்ளிக்கிழமை விடுமுறை. வியாழன் இரவு கிளம்பிச் சென்றுவிட்டு சனிக்கிழமை மதியமாக மீண்டும் பெங்களூர் வந்துவிடுகிறான். ஒரு தங்கை இருக்கிறாள். அவள் படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.
‘நீ எத்தனாவது படிச்சிருக்க?’ என்றேன். ஏழாவதோடு நிறுத்திவிட்டான்.
‘படிக்கிறயா?’ – எனது இந்தக் கேள்வியை அவன் பலமுறை எதிர்கொண்டிருக்கக் கூடும்.
‘நிறையப் பேரு இதைக் கேட்டிருக்காங்க…அதெல்லாம் ஆகாது…அப்பன் வேலைக்குப் போறதில்லை…குடிகாரன்…அம்மாவுக்கும் கஷ்டம்…யாரு பார்த்துக்குவாங்க?’ – சில பொடியன்கள் இளம் வயதிலேயே மிகத் தெளிவாக பேசுவார்கள். வாழ்க்கை குறித்தான தெளிவான பார்வை இருக்கும். அவர்களிடம் பேசி சமாளிக்க முடியாது.
‘படிக்கிற செலவுக்கு மட்டும் ஏதாச்சும் ஏற்பாடு செஞ்சு தர்றேன்’ – மனதுக்குள் கர்மவீரர் காமராஜர் என்கிற நினைப்பில் திரியக் கூடாது. திரிந்துவிட்டேன்.

‘கவர்ண்மெண்ட் இஸ்கூலுக்கு நீங்க என்ன செலவு பண்ணப் போறீங்க?’ என்று கேட்டு பல்பு கொடுத்தான். வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டோமோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே சர்வசாதாரணமாக ‘படிப்பே இல்லாம பொழைச்சுடுவேன்’ என்றான். அதற்கு ‘நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க’ என்று அர்த்தம். அடங்கிக் கொண்டேன்.

அவன் சொல்வது சரிதான். பிழைப்புக்கும் படிப்புக்கும் பெரிய சம்பந்தமில்லை. அவனுடைய செல்போன் ஒலித்தது. எடுத்து பேசினான். ‘பீப்… அவன் சொன்னான்னு நம்பி வந்தேன்….ஒரு மீனைக் கூட எடுக்க உடமாட்டேங்கிறானுக’ சைக்கிளை மிதித்தான். அவன் யாரைத் திட்டினான் என்று தெரியவில்லை. இதுவரை பேசிக் கொண்டிருந்த ஒருவனிடம் தலையையாவது அசைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்கிற யோசனை கூட இல்லாமல் செல்கிறான் என்றால் என்னையும்தான் திட்டுகிறான் என்று அர்த்தம். அப்பொழுது பின்ணனியில் தென்பாண்டிச் சீமையிலே பாட்டு ஒலித்ததா அல்லது மனப்பிராந்தியா என்று தெரியவில்லை. சிச்சுவேஷனல் சாங்.

அவன் சென்ற பிறகும் ‘இல்லிந்த்ர பேடா’ என்று மாநகராட்சி ஊழியர்கள் கத்திக் கொண்டேயிருந்தார்கள். வேடிக்கை பார்க்கவும் மீன்களைப் பொறுக்கவும் கூட்டம் வந்து கொண்டேயிருந்தது.
வா.மணிகண்டன், எழுத்தாளர். இவருடைய வலைத்தளம் நிசப்தம். சமீபத்திய நூல் மசால்தோசை 38 ரூபாய்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.