வில்லவன் இராமதாஸ்
கண்ணையா குமாரின் உரை பாமரத்தனமானதாக இருப்பதாகவும் அதனை உணராமல் பலரும் பரவசத்தோடு பதிவதாகவும் சில (இடதுசாரிகள்) பதிவுகளை காண நேர்ந்தது. மேலும் இப்படி உருவான முன்னாள் மாணவர் தலைவர்கள் கடைசியில் இந்த அமைப்போடு சமரசம் செய்துகொண்டதாகவும் சில தரவுகள் பகிரப்பட்டிருக்கின்றன (அசாம் கன பரிசத் கட்சி ஒரு மாணவ தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி).
இவற்றை முரட்டுத்தனமான மறுப்பது சரியாக இருக்காது. முதலில் பாமரத்தனம் என்பது ஆட்களைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவின் சிறந்த மார்க்சியவாதியை தெரிவுசெய்து பேசவைத்தாலும் அது கார்ல் மார்க்சின் அறிவோடு ஒப்பிடுகையில் பாமரத்தனமாகவே இருக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்னால் நான் கொண்டிருந்த கருத்துக்கள் எனது இன்றைய புரிதலின் வழியே பார்க்கையில் பாமரத்தனமாகவே இருக்கின்றன, இது எல்லோருக்கும் பொருந்தும். உங்கள் அறிவோ அல்லது எதிர்பார்ப்போ அதீதமானதாக இருக்கையில் இன்னொருவரது திறமையில் குறைகள் காண்பது தவிர்க்க இயலாது.
கண்னையாவின் பேச்சில் தவறான புரிதல்கள் இருந்திருக்கலாம், முரண்படவேண்டியவை இருந்திருக்கலாம் ஆனால் அதில் அதைத்தாண்டி கவனிக்க வேண்டியவையும் அங்கீகரிக்கவேண்டியவையும் பகிர வேண்டியவையும் ஏராளமாக இருக்கின்றன.
முதலில் இன்றைய மாணவர் சமூகத்தின் மீதிருக்கும் மோசமான பிம்பத்தை கண்ணையா உடைத்திருக்கிறார். ஆழமான புரிதலற்றவர்கள், எளிதில் பயந்துவிடுபவர்கள், பொறுப்பற்றவர்கள் என்பதாக நீளும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் தன் செயல்பாட்டால் பதில் சொல்லியிருக்கிறார். இந்துத்துவத்தின் புதிய சோதனைச்சாலையாக உள்ள டெல்லியில் காவிமயமான காவல் மற்றும் நீதித்துறையினால் அச்சுறுத்தப்பட்ட பிறகும் அவர் தன் குரலை இன்னும் உரக்க ஒலித்திருக்கிறார். பாதுகாக்க மறுத்து ஒதுங்கிய போலீஸ், கேமராக்களுக்குகூட பயப்படாமல் வெறித்தனமாக தாக்கிய பா.ஜ.க குண்டர்கள் இன்னமும் அதிகாரத்தோடு உள்ள டெல்லியில் நின்றுதான் இவற்றை அவர் பேசுகிறார். அவர் பாமரத்தனமாக பேசுகிறாரா அல்லது அறிவுஜீவித்தனமாக பேசுகிறாரா என்பதெல்லாம் அந்த காவி குண்டர்களுக்கு புரியாது, சாதி ஆதிக்கத்துக்கு எதிராகவும் கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் பேசும் எல்லோரும் அவர்கள் பார்வையில் ஒழிக்கப்படவேண்டியவர்கள். அந்த சூழலிலும் அவர் அஞ்சாமல் பேசுகிறார்.
கம்யூனிசம் தலித்தியம் ஆகியவை ஒரு தீண்டத்தகாத சொல்லாக இருக்கும் உயர்கல்விக் கூடங்களில் இருந்து ஜெய் பீமும் லால் சலாமும் ஒலிக்கிறது. மாணவன் போராடி கைது செய்யப்பட்டால் எதிர்காலம் பாழாகிவிடும் எனும் மிரட்டல் எல்லா மட்டத்திலும் உள்ள ஒரு நாட்டில் ஒரு பிஎச்டி மாணவன் ஜாமீனின் வந்த சில மணிநேரங்களில் அதே வாக்கியங்கள் பேசுகிறான். நீதிமன்றம் மறைமுகமாக சொல்கிறது நீ அரசியல் செய்யாதே என்று, உள்துறை அமைச்சர் நைச்சியமாக சொல்கிறார் நீ படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்று… ஆனாலும் இந்த இளைஞன் தன் அரசியலை இன்னும் தீவிரமாக பேசுகிறார்.
மூன்றாயிரம் ரூபாயில் ஜீவனம் செய்யும் ஏழைக்குடும்பத்து இளைஞனின் குரல் நாட்டில் உள்ள கோடானுகோடி ஏழை மக்களுக்காக ஒலிக்கிறது. உயர்கல்வி பயிலும் தலித் மாணவர்களுக்கு தூக்குக் கயிறை தயாராக வைத்திருக்கும் தேசத்தில் ஒரு தலித் மாணவனின் குரல் கண்டு காவிக்கூடாரம் பதறுகிறது. கண்ணையாவின் பேச்சைக் கொண்டாட வேறொரு காரணமும் வேண்டுமா என்ன?
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தலித் மக்களை தலைவராக்காது எனும் கருத்து விஷமத்தனமாக பரப்பப்படும் தேசத்தில் கம்யுனிசம் பேசும் ஒரு தலித் இளைஞனை ”ஒரு தலைவன் உருவாகிவிட்டான்” என்கின்றன ஊடகங்கள். அதனை பெருமகிழ்ச்சியோடு பகிர்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.
பாஜக முதல் குப்பை தமிழ் சினிமாக்கள் வரை அனைவரும் சேர்ந்து அச்சுறுத்தும் வார்த்தையாக மாற்றிய ஆஸாதி எனும் சொல்லை மக்களுக்கு மீட்டுக்கொடுத்திருக்கிறார் கண்ணையா குமார்.
ஒடுக்கப்படும் மற்ற மாணவர்களுக்கு ரோகித்தைபோல வாழ்வை முடித்துக்கொண்டு போராட வேண்டாம், சிறைக்கு சென்று இன்னொரு வாழ்வை துவங்கும் போராட்ட வடிவத்தை கையிலெடுக்கலாம் எனும் நம்பிக்கையை கண்னையா கொடுத்திருக்கிறார்.
பெரும்பான்மை உள்ள ஆணவத்தில் செயல்படும் பாசிஸ்டுகளின் பிடரி மயிரை பிடித்து உலுக்குகிறான் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்திருக்கும் இளைஞன். கொண்டாட ஏன் தயங்கவேண்டும்?
கண்ணையா கருத்துகள் எதிலேனும் முரண்படுகிறீர்களா, தவறில்லை. அவர் தேர்தல் அரசியலால் தடம் மாறிவிடுவார் என்கிறீர்களா, மறுப்பதற்கில்லை. ஆனால் தலித்களை கம்யூனிசத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் தேசந்தழுவிய கபடத்தனத்தின்மீது விழுந்திருக்கும் முதல் அடிதான் கண்ணையா குமாரின் பேச்சும் அவருக்கு எழும் ஆதரவும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிக வலுவாக இருந்தது தலித் மக்களிடம்தான். கம்யூனிசத்தை வலுவிழக்க வைக்க எடுக்கப்பட்ட அதிமுக்கிய நடவடிக்கை தலித் மக்களை கம்யூனிசத்தில் இருந்து விலக்கி வைப்பது. அதற்காகவே அதுவரை ஒதுக்கிவைக்கப்பட்ட தலித் கட்சிகள் ஊக்குவிக்கப்பட்டன. தலித் மக்களிடம் செயல்பாடும் என்.ஜி.ஓக்களுக்கு திடீர் ஆதரவு கிட்டியது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தலித் மக்களுக்கு எதிரானவை எனும் பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது. அது ரோகித் வெமுலா தற்கொலை வரை நீடிக்கிறது (கம்யூனிச இயக்கங்கள் அங்கீகரிக்க மறுத்ததுதான் ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளியது என சொன்ன தலித் இயக்க நண்பர்களும் இருக்கிறார்கள்).
தலித் மக்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைமைக்கு வராமல் போயிருக்கலாம், ஆனால் அவர்களுக்காக உளமாற போராடியவர்கள் கம்யூனிஸ்ட்கள்தான். கீழத்தஞ்சை மாவட்டத்தில் தலித் மக்களை ஒடுக்கிய பண்ணையார்களை அழித்தொழிக்க கிளம்பியவர்களில் பலர் ஆதிக்க சாதியில் பிறந்த கம்யூனிஸ்கள்தான். இடதுசாரி இயக்கங்களில் சிலகாலம் மட்டும் இருந்தவர்கள்கூட சாதியத் திமிர் அற்றவர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். கள்ளர் சாதியில் பிறந்த வெங்கடாசலம் எனும் கம்யூனிஸ்ட் தோழர் தலித் மக்கள் உரிமைக்காக உழைத்ததன் காரணமாக தன் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப்பட்டார். அவர் நினைவாக தங்கள் பிள்ளைகளுக்கு வெங்கடாசலம் என பெயரிடும் பழக்கம் தஞ்சை தலித் மக்களிடம் இருந்தது. ஏன் ஒரு தலித்தை தலைவராக்க மறுக்கிறீர்கள் என கேள்வியெழுப்ப எல்லா நியாயமும் நமக்கு இருக்கிறது. ஆனால் அதுமட்டுமே கம்யூனிசத்தை விட்டு விலகுவதற்கான நியாயமான காரணமாக இருக்க முடியாது.
தலித் மக்கள் பங்கேற்பு கம்யூனிஸ்ட் இயக்கங்களில் குறைந்து தலித் இயக்கங்களுக்கு போனதால் இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமல்ல. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை தலித் – வன்னியர் கலப்பு மணம் தருமபுரியில் மிக சாதாரண நிகழ்வு. இன்று அது ஊரையே அழித்துவிடும் அளவுக்கான பிரச்சினை. காரணம் இந்த வட்டாரங்களில் செல்வாக்காக இருந்த இடதுசாரிகள் எண்ணிக்கை குறைந்துபோனதுதான். நாமெல்லோரும் உழைப்பாளிகள் எனும் கம்யூனிச வர்க சிந்தனை சாதிய உணர்வை ஒரு பீத்துணியைபோல ஒதுக்க வைக்கும். அந்த சிந்தனைக்கு களம் இல்லாத போது மக்களிடம் சாதிய உணர்வும் மத உணர்வும் ஊடுருவுகின்றன. இதன் முதல் மற்றும் பிரதான பலியாடுகள் தலித் மக்களும் சிறுபான்மை மக்களும்தான்.
கண்ணையாவுக்கு கிடைத்திருக்கும் இந்த வெளிச்சம் ஒடுக்கப்பட்ட மக்களிடம் கம்யூனிசத்தை மீண்டும் கொண்டுசேர்க்க கிடைத்த ஒரு வாய்ப்பு. பள்ளி கல்லூரிகளிலேயே இந்துத்துவத்துக்கு அடியாட்களையும் கொடையாளிகளையும் உருவாக்கும் ஏ.பி.வி.பி போன்ற குண்டர்படைகளை அம்பலப்படுத்தி இடதுசாரி சிந்தனையை கல்வி நிலையங்களில் முன்னெடுக்க இது சரியான காலம். ஆகவே, அதற்கு ஒரு களம் அமைத்த கண்ணையாவை கொண்டாடுங்கள்… ஆனால் அதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். இந்தியாவை சூழும் காவி இருளில் கண்ணையா ஒரு சிறு வெளிச்சம்தான். அதனை நாம் செல்ல வேண்டிய பாதையில் பயணிக்க பயன்படுத்துவோம், கொண்டாடிவிட்டு ஓய்வெடுக்க அல்ல.
வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர். இவருடைய வலைத்தளம் https://villavan.wordpress.com.
முகப்புப் படம்: Tanushree Bhasin
கண்ணையா குமார் தலித் என தவறாக எழுதப்பட்டுவிட்டது, உண்மையில் அவர் பூமிகார் சாதியை சேர்ந்தவர்.
கண்ணையாவின் சாதி பற்றிய தவறான தகவலுக்கு பொறுப்பேற்கிறேன். ஆனால் அதனை மாற்ற இயலாது, காரணம் கட்டுரை முழுதும் அந்தக்கண்னோட்டத்தில் எழுதப்பட்டது. கட்டுரையில் உள்ள ஏனைய செய்திகள் சொல்லப்படவேண்டியவை என நினைக்கிறேன். ஆகவே கட்டுரையை அப்படியே வைத்திருக்கிறேன். நிகழ்ந்த தவறுக்கு மன்னிக்கவும் தோழர்களே..
LikeLike