சென்னை அடுத்த கேளம்பாக்கம் படூரில் உள்ள ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக மாணவர்களிடம், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக தேர்வு கட்டணம், கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து, கடந்த வாரம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைகழக நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு பேட்டியளித்த நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர், “இண்டர்னல் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் ரூ. 8000 கட்டினால் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்கிற நிலை இருந்தது, இப்போது அதை ரூ. 13000 என்று ஏற்றியிருக்கிறார்கள். இந்தப் பணத்தைக் கட்டாவிட்டால் அடுத்த செமஸ்டருக்குத் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என கல்லூரி நிர்வாகம் சொல்லிவிட்டது” என்றார். மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை இப்போதே கட்டச் சொல்லி நிர்வாகம் கேட்பதாகவும் மாணவர்கள் சொல்கின்றனர்.
இந்நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை மாற்றிக் கொள்ளச் சொல்லி மாணவர்கள் தரப்பில் கேட்டபோது எந்தவித பதிலும் அளிக்காத காரணத்தால், பல்கலைகழக கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள், மேஜை மற்றும் நாற்காலிகளை மாணவர்கள் அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் அனைத்து மாணவர்களையும் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் பல்கலைகழக நிர்வாகத்தின் தரப்பில், மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.