புதியவன்

ராபர்ஸ் ஃப்ராஸ்டின் கவிதையை பகிர்ந்தபோது, நண்பர் ஒருவர், “அக்னிபத்” கவிதையையும் தமிழில் தாருங்களேன் என்று கேட்டார். அக்னிபத் கவிதை ஹரிவன்ஷ்ராய் பச்சன் எழுதியது. இந்தியில் மிகப்பிரபலமான கவிதை. அப்படியே தமிழில் தருவது சாத்தியமே இல்லை. முயற்சி செய்திருக்கிறேன்.
இந்தத் தமிழாக்கம் உலகின் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்
*
மரங்கள் வளர்ந்தோங்கி நிற்கலாம்
அடர்ந்தும் வலுவேறியும் இருக்கலாம்
ஒற்றை இலையின் நிழலையும்
கேட்காதே தேடாதே மயங்காதே
நீ பயணிக்க வேண்டியது நெருப்புப் பாதை
ஒருபோதும் களைத்து விடாதே
ஒருபோதும் வளைந்து விடாதே
ஒருபோதும் திரும்பி விடாதே
உறுதி கொள் மனவுறுதி கொள் உடலுறுதி கொள்
நீ பயணிக்க வேண்டியது நெருப்புப் பாதை
கண்ணீர் வியர்வை குருதியில் குளித்தும்
லட்சியம் நோக்கி நடக்கிற மனிதனைக்
கண்ணுறும் காட்சி மகத்தான காட்சி
நட, முன்னே செல், முன்னேறு,
நீ பயணிக்க வேண்டியது நெருப்புப் பாதை.
புதியவன், எழுத்தாளர்.