“நான் ஏன் சீமானை எதிர்க்கிறேன்?”: வி. சபேசன்

வி. சபேசன்
வி.சபேசன்
வி.சபேசன்

சீமான் இரண்டு கோட்பாடுகளை கொச்சைப்படுத்துகிறார். ஓன்று திராவிடம் மற்றது தமிழ்த் தேசியம். இந்த இரண்டு கோட்பாடுகள் பற்றிய மிகத் தவறான விடயங்களை இளைஞர்களுக்கு சீமான் போதிக்கிறார்.

திராவிடத்தின் மீதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் பற்றுள்ள ஒருவன், இதை அலட்சியப்படுத்தி விட்டு கடந்து செல்ல மாட்டான். சீமானுக்கு எதிரான கருத்தியல் போரை நடத்துவான்.

தந்தை பெரியாரின் திராவிடக் கோட்பாடுகளில் தமிழ்த் தேசியமும் அடங்கி விடுகிறது. ஆயினும் திராவிடம் என்பது ஒரு மனிதனின் சுயமரியாதை, ஆரிய பார்ப்பனிய மேலாதிக்க எதிர்ப்பு, பெண் விடுதலை, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு என்பதாய் பரந்து விரிகிறது.

மிகச் சுருக்கமாய் சொல்லி விடுவது என்றால், மக்கள் கூட்டத்தினதும், தனி மனிதர்களினதும் சுயமரியாதை மிக்க விடுதலையை கோருவது திராவிடம். இது தமிழ்நாட்டிற்கானது மட்டும் அல்ல. ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்க்கின்ற எவனும் கையில் எடுக்கக்கூடிய ஒரு கோட்பாடு.

இத்தகைய ஒரு கோட்பாடு தமிழர் மண்ணில் உருவானது என்பது பற்றி தமிழர்கள் தாராளமாகப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அதற்கும் இன்று சீமான் சொல்கின்ற திராவிடத்திற்கும் சம்பந்தம் இல்லை. சீமான் திராவிடத்தை தலைகீழாக சொல்லிக் கொடுக்கின்றார்.

திராவிடம் பற்றி சீமான் இல்லாது, பொல்லாததை பேசுகிறார் என்றால் தமிழ்த் தேசியம் என்பதற்கோ மிக பலவீனமான, மலினமான ஒரு அர்த்தத்தை கொடுத்து, அதை கொச்சைப்படுத்துகிறார்.

தமிழ்த் தேசியம் என்பது என்ன? தேசியம் என்பது என்ன? தேசியம் என்பது நாடு நோக்கிய ஒரு சிந்தனை. தங்களை ஒரு நாட்டினர் என்று உணரும் மக்கள் கூட்டம், தமது பாரம்பரிய நிலப்பரப்பை இறைமையுடன் ஆள்வதை „தேசியம்’ என்று புரிந்து கொள்கிறேன்.

தந்தை பெரியார் ஏற்கனவே தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுத்திருந்தார். ஆனால் தமிழ்த் தேசியத்திற்காக ஒரு பெரும் போராட்டத்தினை நடத்தி அதற்கு முழுமையான வடிவம் கொடுத்தவர் தலைவர் பிரபாகரன்.

அடக்கப்படுகின்ற தமிழ் மக்கள் தமது தாயகத்தை முழு இறைமையுடன் ஆள்வதற்கான உரிமையை கோரி தலைவர் பிரபாகரன் ஒரு அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தை நடத்தினார். தமிழர்களுக்கான சுதந்திரத் தமிழீழத் தாயகத்தை அமைப்பது தலைவரின் தமிழ்த் தேசியப் போராட்டம்.

சீமான் சொல்கின்ற தமிழ்த் தேசியம்’ என்பது எது? சில குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே தமிழ்ச் சாதிகள் என்று கருதின்ற சீமான், அப்படி ஒரு சாதியை சேர்ந்தவராக தான் இருப்பதால், தான் தமிழ்நாடு என்கின்ற மாநிலத்திற்கு முதலமைச்சர் ஆவதே „தமிழ்த் தேசியம்’ என்கிறார்.

இதுவா தமிழ்த் தேசியம்?

ஈழத் தமிழர்களே! உங்களுக்கு திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அதில் தவறில்லை. ஆறுமுகநாவலர் வழிக் கல்வி முறையை கொண்டவர்கள் நீங்கள். திராவிடம் பற்றி அறியாமல் இருப்பது உங்களுடைய குற்றம் இல்லை.

ஆனால் ‘தமிழ்த் தேசியம்’ என்றால் என்னவென்று கூடவா உங்களுக்கு தெரியாது?

தமிழ்நாட்டில் ‘தமிழ்த் தேசியம்’ பேசுவதாக சொல்கின்ற சீமான் இதுவரை தமிழ்நாட்டின் எந்த உரிமைக்காக போராடியிருக்கிறார்? இந்தியாவிலே பிரிவினை பேசுவது குற்றம். பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்.

அப்படியிருந்தும் வைகோ ஆயிரம் முறை ‘இந்தியா உடையும்’ என்று சொல்லி விட்டார். ‘தமிழர்கள் இந்தியாவோடு இருப்பதை விரும்ப மாட்டார்கள்’ என்று பல முறை சொல்லி விட்டார். கட்சிகளை விடுவோம். திராவிட இயக்கங்களின் தலைவர்கள் அத்தனை பேரும் இதை சொல்லி விட்டார்கள்.

‘இந்தியா உடையும்’ என்றெல்லாம் சீமான் சொல்ல வேண்டாம். அது அவருக்கு சட்டச் சிக்கலை கொண்டு வரும் என்றால், அதை புரிந்து கொள்வோம்.

மாநில சுயாட்சிக்கோ, மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்திற்கோ, மாநிலத்தின் மேலதிக அதிகாரங்களுக்கோ குரல் கொடுப்பது சட்டப்படி குற்றம் இல்லை.

மாநில சுயாட்சிக்காக அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா வரை குரல் கொடுத்து விட்டார்கள். ‘நான் முதலமைச்சரானால் தமிழ்நாட்டிற்கு மாநில சுயாட்சி வாங்கித் தருவேன்’ என்று கூட சீமான் சொல்லத் தயங்குகிறார்.

மத்திய அரசாங்கத்திடம் இருந்து இந்த, இந்த அதிகாரங்களை நான் தமிழ்நாட்டிற்கு வாங்கித் தருவேன் என்று சீமான் பட்டியலிட்டதாகவும் தெரியவில்லை.

ஆளுனர் முறையை நீக்கப் போராடுவேன், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்கும் அதிகாரத்தை நீக்க வைப்பேன், மத்திய அரசு மாநிலத்தின் நீதி, நிர்வாகத்தில் கொண்டிருக்கும் அதிகாரங்களை இல்லாமல் செய்யப் போராடுவேன், தமிழ்நாட்டின் கடலோரக் காவலற்படை கடலில் செயற்படும் அதிகாரத்தைப் பெறப் போராடுவேன்…. இப்படி ஏதாவது சீமான் வாக்குறுதி தருகிறாரா என்றால், எதுவும் இல்லை.

மேலே சொன்ன விடயங்களில் 7 பேர் விடுதலை தொடங்கி, மீனவர் கைது வரைக்குமான தீர்வுகள் அடங்கியிருப்பதை வாசிப்பவர்கள் கவனிக்க வேண்டுகிறேன். சீமான் சொல்கின்ற கோமாளிக் கதைகளை விட போராட்டத்தின் ஊடாக இவைகள் என்றோ ஒரு நாள் சாத்தியமாகக் கூடியவையே.

ஆனால் சீமான் என்ன சொல்கிறார்?

“50000 பட்டாலியன்களுடன் கச்சதீவில் போய் இறங்குவேன், சிங்களவனை விபச்சாரக் கேசில் உள்ளே பிடித்துப் போடுவேன்” என்று வெடிச் சிரிப்போடு உளறிக் கொண்டு நிற்கிறார்.

உலகத் தமிழர்களே! சீமான் பேசுவதில் ‘தமிழ்த் தேசியம்’ என்பது துளியும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

திராவிடம் மற்றும் தமிழ்த் தேசியம் என்கின்ற இரண்டும் இந்தியத்திற்கு எதிரானவை. இரண்டையும் தோற்கடிக்க இந்தியம் தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது. ஈழத்தில் தமிழ்த் தேசியப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியது.

இன்றைக்கு அது சீமான் போன்றவர்களைப் பயன்படுத்தி, திராவிடத்தின் மீது அவதூறுகளை செய்கிறது. தமிழ்த் தேசியத்தை மிகவும் மலினப்படுத்துகிறது. தமிழ்த் தேசியம் என்பதற்கு மிகத் தவறான பொருளை இளைஞர்களுக்கு அது கற்றுக் கொடுக்கிறது.

தமிழர்கள் இது பற்றி மிக விழிப்பாகவும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.

வி.சபேசன், அரசியல்-சமூக விமர்சகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.