ஈழம் என்பது தமிழக அரசியலாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டை அடைத்தால் குடித்துக்கொள்கிற சோடா: தமிழ்நதி

தமிழ்நதி

tamilmathi
தமிழ்நதி

துரைப்பாண்டி என்ற அதிகாரியின்மீது எல்லோருடைய கோபமும் திரும்பியிருக்கும். ரவிச்சந்திரனின் மரணத்திற்கு அந்த அதிகாரி மட்டும் காரணமில்லை. ரவிச்சந்திரனை அவ்வாறு செய்யத் தூண்டியது நாட்பட்ட அவமானம். நிலந் திரும்பவியலாத கோபம். ‘எத்தனை நாள் இந்தத் துயரம் நீடிக்கும்?’என்று சீறிப் பாய்ந்த வெப்பியாரம்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அகதி முகாமொன்றுக்குச் சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் அகதிகளை சகவுயிரிகளாகப் பார்க்கவில்லை; தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழுள்ள வளர்ப்புப் பிராணிகளைப் பார்க்கும் கண்களால் பார்ப்பதை அவதானித்தேன். நான் சந்திக்கச் சென்றிருந்த பெண், முகாமுக்கு முன்னாலிருந்த அலுவலகத்தில் ஏதோ படிவத்தைப் பெறப் போயிருந்தார். அவர் என்னோடு வந்து உரையாடியபோது தூணுக்கருகில் ஒருவர் வந்து நின்றார். இவர் தணிந்த குரலிலேயே கதைத்துக்கொண்டிருந்தார். வெளியே வந்ததும் கூறினார்… “அக்கா! ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் கண்காணிக்கப்படுகிறோம். இதுவொரு திறந்தவெளிச் சிறைச்சாலை”என்று. ரவிச்சந்திரனின் மரணத்திற்கு ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேடு காரணம்.

தேர்தல் நெருங்குகிறது. இனி எந்தவொரு வெட்கம், மானம், சூடு, சொரணையுமில்லாமல் ரவிச்சந்திரனை வைத்து அரசியல் செய்வார்கள். ஈழம் என்பது தமிழக அரசியலாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டை அடைத்தால் குடித்துக்கொள்கிற சோடாதான். மற்றபடி, உண்மையான அக்கறை எடுத்துக்கொண்டிருந்தால், இந்த அகதிகளின் (இப்படிச் சொல்ல மனங் கூசுகிறது) இழிநிலையை மாற்றுவதற்கு, தேர்தலற்ற காலங்களில் குரலெழுப்பியிருப்பார்களே!

செங்கொடியின் நிமித்தமும் முத்துக்குமாரின் நிமித்தமும் நாங்கள் தமிழகத்திற்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். மற்றப்படி இந்த அரசியலாளர்களிடமிருந்து ஈழத்தவர் பெற்றது கசப்பான அனுபவங்களையே. கட்சி சாராத தனிமனிதர்களின் தியாகங்களை, இழப்புகளை கொச்சைப்படுத்துவதற்கில்லை.

நமது பக்கம் மட்டுமென்ன வாழ்கிறது? இப்போது போர் முடிந்துவிட்டது. புலிகள் போராடி மடிந்தார்கள். அது கௌரவமான வீழ்ச்சி.

ஆனால், எந்த மக்களை மீட்கிறோம் என்று வெளிநாடு வாழ் பொறுப்பாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பணம் திரட்டினார்களோ, அந்தப் பணத்தை அங்கு ஒருசிலரே ஏகபோகமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு உரித்துடையவர்கள் உள்நாட்டில் அகதிகளாக வாடுபவர்களும், தமிழகத்தில் இன்னல்படும் மக்களுமே. அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களைச் செய்துகொடுக்க அந்தப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும்.

போராடியதும் எளிய மக்கள். சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்ததும் அவர்கள். ‘புனர்வாழ்வு’பெற்று ஊர் திரும்பியதும் வேற்றுக்கிரகவாசிகளைப் போல நடத்தப்படுவதும் அவர்கள். இன்று, காகங்களைப் போல மின்கம்பங்களில் மோதி தம்முயிரை மாய்த்துக்கொள்வதும் அவர்களே.

தமிழகத்தாரைக் குற்றஞ் சொல்வது ஒருபுறமிருக்கட்டும். எம்மிலிருந்து தொடங்கவேண்டாமா சகமனிதர்பாலான காருண்யம்?

தமிழ்நதி, எழுத்தாளர்.

முகப்புப் படம்: ஃப்ரண்ட்லைன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.