மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நபர்கள், முஸ்லீம் மக்களுக்கு எதிராக மிக மோசமாக வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருப்பதற்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும், முன்னாள் நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.பி.சாவந்த், ராஜிந்தர் சச்சார், பி.ஜி.கோல்சே பாட்டீல், ஹாஸ்பெட் சுரேஷ், ஐபிஎஸ் அதிகாரி ஜூலியோ ரிபெய்ரோ, முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் எஸ்.எம்.முஷ்ரிப், மூத்த வழக்கறிஞர்கள் இக்பால் சாக்ளா, ஜனக் துவாரகாதாஸ், நவ்ரோஸ் எச் சீர்வை, அனிர் தர்கர், விஞ்ஞானி பிஎம் பார்கவா, ஜகட் பவுண்டேசன் ஆப் இந்தியாவின் தலைவர் டாக்டர் சையது ஜபார் மகமது, பாதிரியார் டாக்டர் பாக்கியம் டி சாமுவேல் முதலானோர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியிருப்பதாவது:
மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களில் சிலர் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நாட்டு மக்களில் ஒரு பகுதியினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அச்சுறுத்தும்விதத்தில் வெறுப்பை உமிழும் வண்ணம் பேசி வருகிறார்கள். மத்திய இணை அமைச்சர் ஒருவர் முஸ்லீம்களை எச்சரிக்கிறோம் என்று மிரட்டியும், அவர்களை “ராட்சதர்கள்’’ என்றும், “ராவணனின் வழித்தோன்றல்கள்’’ என்றும் கூறி “இறுதி யுத்தத்திற்கு’’ அழைப்பு விடுத்திருக்கிறார். இவரது பேச்சு வெளியாகியுள்ள நாளேட்டின் பிரதியை இத்துடன் இணைத்திருக்கிறோம். 2016 பிப்ரவரி 29 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியாகியுள்ள ஒரு செய்தியின்படி “இந்துக்கள் முஸ்லீம்களை நெருக்கி, அந்த ராட்சதர்களைக் கொல்ல வேண்டும்’’ என்றும்,
“பழிக்குப்பழி வாங்குவதற்கு அனைத்துத் தயாரிப்பு வேலைகளும் செய்யப்பட்டுவிட்டது,’’ என்றும் இறந்த (அருண்) மஹருக்கான 13ஆவது நாள் சடங்கு முடிவதற்கு முன்பு, “அவரது தியாகத்திற்கு மனித எலும்புகளைக் காணிக்கையாக்க வேண்டும்,’’ என்றும் விசுவ இந்து பரிசத் செயலாளர் அசோக் லாவானியா என்பவர் பேசியிருக்கிறார். இவர் முஸ்லீம்களைத் தாக்கியதற்காக ஏற்கெனவே சிறையில் இருந்தவர்.
உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி, பாஜக எம்எல்ஏ ஜகன் பிரசாத் கார்க், “துப்பாக்கிகளை ஏந்துங்கள், கத்திகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது, இப்போதிருந்தே உங்கள் பலத்தைக் காட்டத் துவங்குங்கள்’’ என்று கூறியிருக்கிறார். “எவனது ரத்தம் கொதிக்கவில்லையோ, அவன் இந்துவே அல்ல’’ என்றும் கோஷமிட்டிருக்கிறார்கள். பாஜக எம்பி பாபுலால், முஸ்லீம்களுடன் நேருக்குநேர் மோதுமாறு கொக்கரித்துள்ளார். அவர் மேலும், “எங்களை சோதிக்காதீர்கள், … எங்கள் இனத்திற்கு அவமானம் ஏற்படுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நீங்கள் இந்துக்களை சோதிக்க வேண்டும் என்று விரும்பினால், தேதி குறிப்போம்,’’ என்று பேசியிருக்கிறார்.
பாஜகவைச் சேர்ந்த குண்டானிகா சர்மா பேசுகையில், “அருண் மஹாரைக் கொன்றவர்களின் தலைகள் எங்களுக்குத் தேவை’’ என்றும் “ஒரு தலைக்கு பத்து தலையை வெட்டுவோம்,’’ என்றும் பேசியிருக்கிறார்.இவ்வாறு இவர்கள் தேர்தல் வருவதையொட்டி முஸ்லீம் மக்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் வெறியுணர்வை ஊட்டி வருகிறார்கள்.
இது அரசமைப்புச் சட்டத்தின் 14, 19, 21,25 பிரிவுகளுக்கு எதிரானதாகும். எனவே உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் ராம் சங்கர் கத்தாரியா, வி.கே.சிங், சாத்வி நிரஞ்சன் ஜோதி, கிரிராஜ் சிங், முக்தார் அப்பாஸ் நக்வி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகி ஆதித்யநாத், சாக்சி மகாராஜ், அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களையும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
முகப்புப் படத்தில்: மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கத்தாரியா.
செய்தி:தீக்கதிர்