பாவெல் தருமபுரி

“சமூகத்தில் நிலவுகின்ற பிரதான முரண்பாடுகளை சரியானநேரத்தில் சரியான சக்திகள் தீர்க்காவிட்டால் தவறான சக்திகள் தவறான விதத்தில் தீர்த்துவிடும்.”
– மாவோவின் புகழ் மிக்க வரிகள் இவை.
உண்மையில் இன்றைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்துக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி மக்களின் இருதயங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிமுக வாகட்டும் திமுக வாகட்டும் தத்தமது அந்திமகாலத் துடுப்புக்களை செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றன. நடிகர் விஜயகாந்த் ஒரு தலைமைக்கான தகுதியைப் பெறத் தவறி விட்டார் என்பதையே நடைமுறைகள் சுட்டிக்காட்டுகின்றன. அன்புமணியாகிய அவர் சாதிய வட்டத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார். மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தமட்டில் முயற்ச்சி ஒப்பீட்டு ரீதியல் வரவேற்கத் தக்கதே ஒழிய எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றே தோன்றுகிறது.
இந்தச் சூழலில்தான் சீமானின் புதிய தமிழ் அவதாரம் பேசப் படவேண்டிய விஷயமாகிறது. ராமசாமிக் கிழவனை கும்பிடச்சொன்ன அதே சீமான்தான் இன்று அவரை கிழித்துக் கொண்டிருக்கிறார். நாத்திகத்தின் உச்சத்தில் இருந்த இதே சீமான்தான் இன்று முப்பாட்டன் முருகன் என நெஞ்சுருகி நிற்கிறார். இலை மலர்ந்தால் ஈழம் மலருமென பட்டி தொட்டியெங்கும் பரப்பிய இதே சீமான்தான் இன்று திராவிடத்தின் கேடுகளை மேடைதோரும் கூவுகிறார்.
தமிழகத்தை தமிழனே ஆளவேண்டுமென்றும், வடுக வந்தேரிகளே ஓடுங்கள் என்றும், இஸ்லாமியரை தமிழரல்ல என்றும் வாய்கிழிப் பேசும் சீமான் பார்ப்பனரை மட்டும் தமிழராய் பார்க்கும் சூக்குமம் என்னவென்பதுதான் புரியாத புதிர். ஆளும் அதிமுகவை விடவும் எதிர்கட்சி அந்தஸத்தில் கூட இல்லாத திமுகவை போட்டுத்தாக்கும் சீமானின் அரசியல் வடுக வந்தேரிகள் என்ற அரசியலில் மட்டும் நிற்கிறதா அல்லது அதைத்தாண்டி அம்மாவின் கட்டளை ஏதேனும் அடங்கியிருக்கிறதா என்னும் கேள்விகளை முற்றாகப் புறக்கணிக்க முடியவில்லை.
நிதானமும், சபை நாகரிகமும் அற்று நடந்து கொள்வதும், ஒருமையில் விளிப்பதும், தனது எண்ணத்தை மற்றவர்களின்மேல் திணிக்கப் பார்ப்பதும், கடைந்தெடுத்த பொய்களுக்கு மொழியெனும் உணர்வுச்சாயம் பூசி மகுடியாக்குவதுமாக ஒரு தேர்ந்த பாசிச ஆளுமையை நோக்கி சீமான் நகர்ந்து கொண்டிருக்கிறார். திருச்சி மாநாட்டில் இட்லர் படத்தை ஏந்தி வந்ததும் இட்லர்போலவே வணக்கம் சொல்லி தொடங்கியதுமாக பல கதைகள் இருக்கின்றன.
தேனியைச்சேர்ந்த ஜெகதீசன் என்ற பத்திர எழுத்தாளர் ஒருவர் சீமானின் திருமலை நாயக்கர் குறித்த கருத்துக்கு செல்போனில் அவரிடம் விளக்கம் கேட்க அவரை ஆபாசமாகப்பேசிய இந்தச் செந்தமிழர்தான் அதை வாட்சாப்பில் வெளியிட்ட காரணத்துக்காக ஆளனுப்பி அவரை நையப் புடைக்கவும் செய்தார்.
ஓட்டரசியலுக்கு தன்னை முழுமையாக தகவமைத்துக்கொண்ட சீமானின் பின்னால் வைகுண்டராஜன்களும், பச்சமுத்துக்களும் அப்பாவி புலம்பெயர் தமிழர்களும் தாராளமாகவே தரிசனம் தருவதாக பரவலான பேச்சு. சீமானின் பார்வையில் தமிழன் தமிழனைச் சுரண்டினால் ஒப்புக் கொள்ளலாம் போல…
திராவிடக் கருத்தியலின் மீதும் அது மீட்டிய விளைவுகளின் மீதும் நமக்கு கருத்தியல் முரண்பாடு இருந்தாலும் அது குறித்து விமர்சிக்க ஈழத்தமிழர்களின் பிணங்களின்மேல் அரசியல் நடத்தும் சீமானுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது.
தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளின் விடிவுக்கு குரல் கொடுக்காத சீமான்……
தமிழ் மொழியையும், பண்பாட்டையும் கபளீகரம் செய்யும் காவி பயங்கரவாதத்தை கேள்விகேட்காத சீமான்….
உலகத்தின் ஒட்டு மொத்த தேசிய இனங்களின் சுதந்திரத்தையெல்லாம் காலில் போட்டு மிதித்து நசுக்கிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டு வாய்மூடி மௌனிக்கும் சீமான் …….
திராவிடமென்றும், வந்தேரிகள் என்றும் கதையளப்பது யாரை ஏமாற்ற?
தொடக்கத்தில் சீமானின் சொற்போர் கேட்டு யாமும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டது உண்மைதான். அப்புறம் அது இலக்கற்ற வெற்று அட்டைக்கத்தி என ஓர்ந்து தெளிந்தோம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனித்த போதுதான் புரிந்தது அந்த அட்டைக்கத்தியைக் கூட தனது ஓட்டரசியலுக்காக காவி பயங்கர வாதத்திடமும் ஆளும் வர்க்கத்திடமும் அடகு வைத்துவிட்ட கதை.
பாவெல் தருமபுரி, வழக்கறிஞர்
காவிகளை சொறியாமால் தூக்கம் வராது போல கம்மிகளுக்கு…..
LikeLike